Sunday, December 4, 2022
இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை !!
இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை !!
நிலையானது எது?. எது தான் நிலையானதாக இருக்கமுடியும்? நிலையற்ற ஒன்று எவ்விதம் ஆனந்தமாக அமையும்? நிலையற்ற எது தான் மெய்யென அறுதியிட முடியும்?இல்லையே அல்லவா?..?..?....
இங்கிருக்கிறவன் அங்கு சென்றால் சந்தோஷம் கிடைக்கும் என நினைக்கிறான், உடையில்லாதவன் உடை இருந்தால் சந்தோஷம் என நினைக்கிறான், உடை இருக்கிறவன் வீடு இருந்தால் சந்தோஷம் என நினைக்கிறான்...இவ்விதம் மனிதன் ஒன்றிலும் பூரண சந்தோஷத்தில் நிலைப்பதில்லை.ஆசை அவனை அலைக்கழிக்கிறது, ஒன்று விட்டு மற்றொன்று என அவன் காலம் பூராவும் நித்தியமான சந்தோஷத்துக்கு என பிரயாணம் பண்ணிகொண்டே இருக்கிறான்.
உலகத்தில் வந்து பிறக்காத ஆன்மாக்களுக்கு உடல் கிடைக்காத துக்கம், அவை ஒரு வாய்ப்புக்காக எண்ணற்ற கோடி கற்பாந்தங்களாக காத்து கிடக்கின்றன, ஒன்றுமே அறியாத, அறிய அறிபுலம் இல்லாத காரிருட்கூட்டத்து கருமை செறிபுலத்தே அவை புழுங்கி மழுங்குகின்றன, மக்கி மருண்டு திகைக்கின்றன,என்று தான் விடிவு காலம் என விம்முகின்றன..விம்மவும் அறியா மட்கியநிலை...
தேவாதி கூட்டம் என ஒரு விதம், மற்றோர் உலகத்தோர்கள் கூட்டம் என மற்றோர் வகை, இங்ஙனம் எண்ணற்ற பிரபஞ்ச கூட்டத்தே விரிந்த தொகுப்புகளுக்கு இடையே பல்லுயிர்கள் கூட்டங்கள், எந்த விடிவுமின்றி சதா அலைந்து தவழ்கின்றன.எங்குமே இதற்க்கு விடிவு காலம், முடிவு காலம் என ஒருநாளும் இருந்ததில்லை. பல்லுடலங்கலில் புகுந்தாயிற்று, கர்மங்கள் பலகோடி நிறைந்தாயிற்று...எது தான் இவற்றிற்க்கு புகும் சரணாலயம்?
தூல உலகத்தில் வந்து பிறந்தவன் இதை நித்தியம் என மருள்கின்றான், தனது தேவைக்கு என பொருள் கொள்கின்றான், தான், தனது சுற்றம் முற்றம் அயலார் என ஒரு வட்டம், வட்டத்துக்கு வெளியே கோட்டை என வகுத்து கொள்கிறான். இப்படி கிராமம் ஒரு கோட்டை, நகரம் ஒரு கோட்டை, நாடு ஒரு கோட்டை தேசம் ஒரு கோட்டை என பலவித பரிணாம கோட்டைகளில் அவன் சுற்றித்திருகிறான், பிரபஞ்சம் அவனுக்கு பெரிய கோட்டை.,எல்லையில்லா விரிந்த கோட்டை. இந்த கோட்டைகளில் உழலுகின்ரவன் கொஞ்சம் அறிவு வர இதற்க்கு அப்பால் உள்ளது மெய் என நினைகின்ரான்.பிரபஞ்சத்துக்கு வராதவன் பிரபஞ்சத்துக்கு வர எத்தனிப்பது போன்று, பிரபஞ்சத்தில் இங்கு இருப்பவன் பிரபஞ்சத்துக்கு அப்பால் போக எத்தனிக்கிறான், இது இவனது இயல்பு.அப்பால் இருப்பவை மெய்யான நித்தியம் என இவன் நினைத்து கொள்கிறான்.
செத்தவனை பார்த்து சாகாதவன் நகைக்கிறான்,சாகாதவனை பார்த்து செத்தவனும் நகைக்கிறான் என்பதை இவர்கள் புரிந்து கொள்ளுவதில்லை. கடலின் ஆழம் கடலில் குதித்த பிறகே தான் தெரிய வரும்.செத்தவனுக்கு சாவு விடுதலை, சாகாதவன் உலகத்தில் மாட்டிகிட்டு முழிக்கிறதை செத்து உலகத்தில் இருந்து விடுதலை அடைந்தவனுக்கு நகைப்பாக இருக்க தவறில்லை. உண்மையில் அவனும் இவனும் ஒன்றே,ஒரே கதி தான். யாரும் எங்கும் எப்போதும் பூரன விடுதலையை பெறுவதில்லை.இவனுக்கு இது நிஜம், அவனுக்கு அது நிஜம்.இங்கே இருக்கிறவன் எதிர்பார்ப்பு அவனுக்கு ஒரு கற்பனை உலகத்தை வளர்க்கிரது, அழகான சொர்க்கம் என அவன் கற்பனையில் எண்ணி அதற்க்கு என பாடுபடுகிறான்.அழகான சொர்க்கத்தை அடைந்தவன் ஒரு கட்டத்தில் அதுவும் நிரந்தரம் இல்லை என உணர்கிறான், அதுவும் அழிந்து போககூடியது எனும் நிஜத்தை புரிகிறான்.அவனுக்கு அதை விட பெரிய கற்பனையாக ஒன்ரு இருக்கும், அதை நம்பி எதிர்பார்த்து தவம் கிடக்கிறான். இப்படி எல்லா கோட்டைகளும் பொய் கோட்டைகளே என அவன் அறிந்து உணர்ந்து கொள்ல எண்ணற்ற கோடி எண்ணிலடங்கா கோடி முடிந்தாலும் முடிவதில்லை , கற்பனைக்கு மேல் கற்பனை என அவன் சதா பிரயாணப்பட்டு கொண்டு தான் இருக்கிறான்.
மரணமில்லா பெருவாழ்வு என ஒரு கூட்டம், சொர்க்கத்தில் சகல சுக அமைப்புகளுடன் ஏராளமான வசதிகளுடன் சுவர்க்கத்து ரதிக்கொப்பான இளம் மங்கைகளுடனான வாழ்க்கை என ஒரு கூட்டம், சொர்க்கத்தில் நீண்ட காலம் உல்லாச வாழ்க்கை என ஒரு கூட்டம்....இப்படி அனேக வித கூட்டங்களுள் யாரும் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல. எல்லாம் கற்பனை கூட்டங்களே என அறிய காலம் வரும்.இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சையான கதை தான் எல்லாம். அனைத்தும் கற்பனை, அனைத்து வாழ்வுகளும் கற்பனை, ஒன்றும் நிரந்தரமில்லை, எல்லா தவமும் கற்பனையாக கற்பனை கனவுகளுக்காக கற்பனையாக காத்திருக்கும் வீண் கற்பனைக்கோலம்.......
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment