Thursday, December 8, 2022
ஓம் பிள்ளையார் சுழி
வேகாக் கால், போகாப்புனல் ரெண்டையும் உடம்பிலே கண்டுபிடிச்சிட்டாக்க ... சாகாத்தலைக்கு வழி பொறந்திடும். இனிமேல் முழுக்க முச்சூடும் போகாப்புனல் பற்றிதான் பார்க்கப் போறோம்.
அதுக்கு புள்ளையார் சுழி போடுவோமா ?
உ
உ'காரம் !
"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு"
- திருக்குறள்
எழுத்துக்கள் 'அ'-இல் தொடங்குவதுபோல ... நம்முள்ளே உள்ள கடவுள்தன்மையும் அ'காரத்திலேயே துடங்குகிறது ... என்பதுதான் குறளின் அர்த்தம்.
அ'காரம் !
"ஓம் எனும் ஓங்காரத்துள்ளே ஒருமொழி
ஓம் எனும் ஓங்காரத்துள்ளே பலபேதம்
ஓம் எனும் ஓங்காரம் ஒண்முத்தி சித்தியே"
- திருமூலர்
மந்திரத்தில் பெரிசு மற்றும் முதன்மை'னு சொல்லக் கூடியது ஓம்.
ஏன்'னா ... அ + உ + ம் = ஓம்.
அ'காரம் அறிவு ; உ'காரம் உணர்வு ; ம'காரம் நினைவு.
இதுதானே எல்லாம் ? அறிவு, உணர்வு, நினைவு ... இந்த மூனும் சேர்ந்ததுதானே ... மனுஷ வாழ்க்கை ?
அ'காரம் சிவன் ; உ'காரம் சக்தி ; மகாரமானது நமக்குள் இருக்கும் 'ஒன்று" ... அந்த ஒன்றுதான் - பிரம்மம்.
அ'காரம் சூரியன் ; உ'காரம் சந்திரன் ; மகாரம் அக்னி.
"ஊமை எழுத்தே உடலாச்சு மற்றும்
ஓம் என்ற எழுத்தே உயிராச்சு
ஆம் இந்த எழுத்தை அறிந்து கொண்டு
விளையாடி கும்மி அடியுங்கடி"
- கொங்கணர்
அ'காரம் சொன்னிங்க, உ'காரம் சொன்னிங்க, ம'காரம் சொன்னிங்க ... இதெல்லாம் சரி. 'ஆம் இந்த எழுத்தை அறிந்துக் கொண்டு கும்மி அடிங்கடி'னு கொங்கணர் சொல்லி இருக்காரே ? 'ஆம்' காரம்'னு ஒன்னு இருக்குதா ?
: சரி உடு. அந்த பாட்டை எப்படி படிக்கணும்'னா ...
"ஓம் என்ற எழுத்தே உயிராச்சு
ஆம் இந்த (ஓம் என்ற) எழுத்தை அறிந்து கொண்டு" னு படிக்கணும்.
இப்போ சொல்லிக்கிட்டு வர்றது ... முச்சூடும் ... அ'காரம், உ'காரம் மற்றும் ம'காரம் ... இந்த மூனைப்பத்திதான்.
லலிதா சஹஸரநாமத்திலே வருமில்லே ?
"ஹ்ரீங்கார ஓங்கார ஆங்கார சக்தி"
சரி. இதைப்பத்தி மத்தவங்க சொல்லி இருக்கறதைப் பார்ப்போம்...
"பெட்டியிலே உலவாத பெரும்பொருள் யீதென்று
எட்டிரண்டு தெரியாதே என்கையில் கொடுத்தீர்கள்"
- வள்ளலார்
உடம்பிலே இருக்கற ஒன்னு. அதை தனியா எடுத்துட்டுப் போயி போட்டியிலே அடைச்சிக்க முடியாது. அது அந்த உடம்புக்குள்ளேயேதான் 'வச்சி செய்யணும்'
அது என்னா எட்டிரண்டு ?
தமிழ் எண்களில் 8'ங்கறது ... 'அ' மாதிரி இருக்கும். தமிழ் எழுத்திலே 2'ங்கறது 'உ' மாதிரி இருக்கும்.
அ & உ
அகரம் & உகரம் !
"அ'காரம் என்ற அட்சரத்தில் அவ்வு வந்து உதித்ததா ?
உகாரம் என்ற அட்சரத்தில் உவ்வு வந்து உதித்ததா ?
அகாரமும் உகாரமும் சிகாரம் இன்றி நின்றதா?
விகார மற்ற யோகிகாள் விரித்துரைக்க வேணுமே"
- சிவ வாக்கியர்
"ஓரெழுத்து ஒருபொருள் உணரக் கூறிய
சீரெழுத்தாளரைச் சிதைய செப்பினோர்
ஊரிடைச் சுணங்கனாய்ப் பிறந்திங் கோருசம்
பாரிடைக் கிருமியாய்ப் பழகுவர் மண்ணிலே"
- திருமூலர்
ஓரெழுத்து, ஊமை எழுத்து, பேசாத மந்திரம், கலீமா, மௌன அட்சரம் ... இப்படி பரிபாஷையாக சித்தர்கள் சொன்னது இந்த ஒரு பொருளைத்தான். இந்த ஒரு பொருளே நம்முள் இருக்கிறான் ... இறைமையைக் குறிப்பிடும் அந்த ஒரு எழுத்து சி'காரம்.
சி'காரம் என்பது அ'காரம், உ'காரம் மற்றும் ம'காரத்தினை ... நம் உள்ளுக்குள் வைத்து உருவேற்றக் கிடைப்பதாகும். உலகத்தில் உள்ள மதங்கள் எல்லாமுமே ... இந்த ஒரு பொருளைத் தான் இறையாக போதிக்கும். அறிவால் அறிகின்ற மெய்ப் பொருளை அறிந்து, உணர்வால் உணர்ந்து யோக சாதனை செய்து ... நினைவால் அதனை நித்தமும் இருத்தி வைத்திருந்தால் ... கடவுளாகிப் போய்விடுவோம்.
"செத்திடவும் பிறந்திடவும் இனிச்சாவா திருந்திடவும்
இத்தனையும் அறியாதார் அறியும் அறிவு எவ்வறிவோ
ஒத்தநிலம் ஒத்தபொருள் ஒரு பொருளாம் பெரும் பயனை
அத்தன் எனக்கருளியவாறு யார் பெறுவார் அச்சோவே"
- திருவாசகம்
"உடலுக்குள் நீ நின்று உலாவினதைக் காணாமல்
கடல் மலைதொறும் அலைந்து கால் அலுத்தேன் பூரணமே"
- பட்டினத்தார்
வானுக்குள் ஈசனைத் தேடும் மருளர்காள்
தேனுக்குள் இன்பம் சிவப்போ கருப்போ
தேனுக்குள் இன்பம் சிறந்திருந்தாற் போல்
ஊனுக்குள் ஈசன் ஒளிந்திருந்தானே"
- திருமூலர்
"சிற்றம்பலமும் சிவமும் அருகிருக்க
வெற்றம்பலத்தை விட்டோமே"
- பட்டினத்தார்
"பொருளாக் கண்ட பொருள் எவைக்கும் முதல்
பொருள் ஆகிப் போதம் ஆகித்
தெருள் ஆகிக் கருதும் அன்பர் மடிதீரப்
பருக வந்த செழுந்தேன் ஆகி
அருள் ஆனோர்க்கு அகப்புறம் என்று உன்னாத
பூரண ஆனந்தம் ஆகி
இருள் தீர விளங்கு பொருள் யாது ? அந்தப் பொருளினை யாம் இறைஞ்சி நிற்போம்"
- தாயுமானவர்
ஊற்றை சடலமடி உப்பிருந்த பாண்டமடி
மாற்றிப் பிறப்பதற்கு மருந்தெனக்கு கிட்டுதில்லை
மாற்றிப் பிறப்பதற்கு மருந்தெனக்கு கிட்டுமென்றால்
ஊற்றை சடலம் விட்டே என் கண்ணம்மா உன்பாதம் சேரேனோ"
- அழுகணி சித்தர்
ஊத்தை சடலமென்று எண்ணாதே - இதை
உப்பிட்ட பாண்டமென்று எண்ணாதே
பார்த்த பேருக்கே ஊத்தையில்லை - இதைப்
பார்த்துக்கொள் உன்றன் உடலுக்குள்ளே"
- கொங்கணச் சித்தர்
"உடம்பினைப் பெற்ற பயனாவது எல்லாம்
உடம்பினுள் உத்தமனைக் காண்"
- ஔவையார்
----------
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment