Thursday, December 8, 2022
சாகாகல்வி
இலக்கு நூல் என்றால் என்ன?
அதைக் கற்கும் கல்வி எது?
*மாசறக் கற்றோன்* யார்?
*கசடறக் கற்றோன்* யார்?
*மனத்துக்கண் மாசிலான்* கற்கும் கல்வி எது?
"கல்வியில் மெய்க்கல்வி, பொய்க்கல்வி என்று இரண்டுவகை இருக்கிறது. பொய்க்கல்வியின் செயல், அழிந்து போகிற பொய்ப்பொருள் பொய் மதிப்புக் கொடுத்து, இறுதியில் நீங்காக் கஷ்டத்தில் கொண்டு போய் மாட்டிவிடும். ஆகவே மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருடைய கடமை, துவக்கம் முடிவு இல்லாததும், எக்காலத்தும் அழியாததுமான பிரம்மரந்திர அதிமகோன்னத பீடத்தை அடைவிக்கின்ற மெய்க்கல்வியை அது இருக்கும் எல்லை நாடி அடைவதே."
*சாகாமல் கற்பதே கல்வி பிறரிடம் ஏகாமல் உண்பதே ஊன்*. என ஔவையாரும்
*“சாகாது இருப்பதற்குத் தான் கற்ற கல்வி அன்றோ
வாகான மெய்க்கல்வி வகுத்தறி நீ கல்மனமே.* என் இடைக்காட்டுச் சித்தரும் குறிப்பிடுகின்றனர்.
மரணத்தை தவிர்க்க வழிமுறைகளை போதிக்கும்ஞானமே உண்மையான கல்வி.
*நம் சுவாசம் வெளியே ஓடாமல், மூக்களவே ஓடினால் அதுதான் தவம். நம் சுவாசம் அதிகம் ஓடாமல் நாளுக்கு நாள் உள்ளடங்கி ஓடுவதைக் கற்கும் கல்வியே, சாகாக் கல்வி.
மெய்க்கல்விக் கலாசாலையில் கற்பிக்கப் பெறுகின்ற முதல் பாடம், நம் உயிரை நம் அறிவை நேருக்கு நேர் நாம் சந்தித்துத் தரிசிக்கப் பழக்குவதுதான். இதைத்தான் வேதங்கள் பிரம்மவித்தை என்று பேசிப் புகழ்கின்றன.
கல்வி என்றால் அகக்கண்ணாகிய ஞானக்கண் திறக்கப் பெறுதலாகும். அவரே மாசறக் கற்றோன்.
"கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்"- திருக்குறள்
"முகத்துக்கண் கொண்டு பார்க்கின்ற மூடர்காள்
அகத்துக் கண்ணனை ஆரென்றறிகிலீர்
அகத்துக் கண்ண னறிந்தன்பு செய்பவர்
செகத்தில் எமபடர் தாண்டியே வாழ்வர்" - திருமந்திரம்
கசடாகிய மாசு நீங்கியவரே செம்மலாகும் அவர்களை *மாசறு காட்சியர்* என திருவள்ளுவர் குறிப்பிடுகிறார்.
"கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக"
கல்விக்கண்ணை மூடியிருக்கும் கசடு நீங்கிய பிறகே மாசறு காட்சி உண்டாகும்.
பசுவை பாசமாகிய கசடு மறைத்திருப்பதால்தான், பசு பதியைக் காண் முடிவதில்லை. எனவே பாசம் நீங்கும் செயலே கசடறக் கற்பது. கசடறக் கற்றோர்க்கு பாசமாகிய மரண அச்சம் இருக்காது.
"கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை."
கல்வி ஒன்றே அழியா நிதி ஆகும். கல்வியைத் தவிர மற்றைய செல்வங்கள் தீமை பயக்கும், அழியும்.
"நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்
மண்மாண் புனைபாவை யற்று"
"குஞ்சி யழகும் கொடுந்தானைக் கோட்டழகும்
மஞ்சள் அழகும் அழகல்ல - நெஞ்சத்து
நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்
கல்வி அழகே அழகு."
*"தூங்ஙாமை, கல்வி, துணிவுடைமை - இம்மூன்றும் னீங்ஙானிலம் ஆள்பவர்க்கு"*
எல்லா வேதங்களையும், எல்லாத் தவங்களையும், எல்லா வேத மந்திர ரூபிகளையும் தனது கையடக்கத்தில் வைத்திருக்கின்ற கல்வி என்னும் வெற்றி மாணிக்கத்தை உடையவனும், தனது அறிவாகாரத்தால் பிறரை அடக்கி ஆளுகிற துணிவு உடையவனும், உறக்க ஆசனத்தில் ஆண்மையுடையவனுமே அரசன்.
கல்வி என்பது படிக்கிறதா? அல்லது அறிகிறதா? அறிகிறது.
''ஆதியா மில்மை அறிவதற்கே யன்றி
இஃது ஒது மறைப் பய னென்றில் '' (ஞானக்குறள்)
*எழுத்தறிவித்தவன் இறைவன்*
*விடம் தீர்க்கும் மணியாகிய மெய்ப்பொருளை அகக்கண் விழித்து பார்க்கும் செயலே கல்வி*
ஒருமெய்க்கண் என்று கல்வியை திருவள்ளுவர் அழைக்கிறார். நமக்கு ஊனக்கண்கள் இரண்டு இருக்கின்றன. சான்றோர்க்கு ஞானக்கண்ணாகிய மேலும் ஒரு கண் இருக்கிறது.
"ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து."
ஞானக்கண்ணாகிய தன்னையறியும் கல்வி கற்ற ஒருவரின் ஏழு தத்துவங்களும் விழிப்புற்று பேரின்பம் பயக்கும்.
*தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை;
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்;
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அர்ச்சிக்கத் தானி ருந்தானே!*
"கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழா அர் எனின்"
ஆனால் "நற்றாள்" என்றால் என்ன என்றுதான் தெரியவில்லை. நற்றாளை ஒருவன் காணவில்லை யென்றால், அவன் கற்கவில்லை என்றுதானாகிறது!
"பொய்க்கல்வியைக் கற்று பொருள் மயக்கம் கொள்ளாமல் மெய்க்கல்வியைக் கற்று உனைவந்து அடைவது எக்காலம்?" -பத்திரகியார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment