Tuesday, December 6, 2022

நானே நானில்லையே

💢💢 நானே நானில்லையே 💢💢 என்றோ அழிய போகும் உடலையே நான் நான் என சொல்லிட்டு இருக்கும் மனதிற்கு எப்போது தற்போதம் அற்று, மெய்யாக இருக்கும் ஜீவனை அறிய முடியும்? நான் இல்லை என்று சொல்லிக்கொண்டே நான் என்ற தன்முனைப்புடன், வீண் அகங்காரம் கொண்டு கர்மவினை செய்கிறது. கடவுளுக்கு பூஜை நமஸ்காரம் செய்வதாலோ, வெள்ளை அல்லது காவி உடை அணிந்து, நெற்றியில் பெரிய பட்டையிட்டு, ருத்ராட்சம் அணிவதாலோ, தினமும் சாதனை செய்கிறேன் என்று மனதை அங்குமிங்கும் அலைபாய விட்டுட்டு இருந்தாலோ, குருவே சரணம் என காலடியில் விழுந்து கிடந்தாலோ, ஒன்றும் நடவாது. கர்மச்சக்கரத்தில் இருந்து தப்பிக்கவே முடியாது. விண்ணில் இருந்து வந்த மெய்பொருள் அறியாத வரை, திரும்ப திரும்ப தாயின் வழியாக மண்ணில் பிறந்துக் கொண்டே தான் இருக்க போறோம். இயற்கை உண்மையாக, ஆதி அனாதியாக இருக்கும் மெய்யை உணர, மனம் எனும் ஆற்றை அறிவு எனும் தோணி கொண்டு கடப்பது சிறந்தது. அதாவது, மனதை அடக்கவோ, கட்டுப்படுத்தவோ முற்படாமல், மனதிற்கு அறிவு ஊட்ட ஊட்ட, மனமே மனதை செம்மை படுத்திக்கொள்ளும். அறிவு வர, நான் நான் என சொல்லும் மனம் அதிலிருந்து விடுபட்டு, ஜீவனை நோக்கி பிரயாணம் செய்யும். மனிதனுக்கு மட்டுமே தன்னை அறிந்துக்கொள்ளும் சிறப்பு உண்டு. ஆகையால் இந்த மனித பிறப்பை சரியாக உபயோகப் படுத்தி, தன்னை அறிந்து, நான் என்ற அகங்காரத்தினால் அழிந்து போகாமல், விண்ணிலிருந்து வந்தவனை பற்றிக் கொண்டால், மண்ணில் மறுபிறவியில் இருந்து விடுபடலாம். 💥💥 மெய்ஞானம் ஓங்கி வாழ்க வளமுடன் 💥💥

No comments:

Post a Comment