Tuesday, December 6, 2022

அஹ நாதம்

அஹ நாதம் -------------------- அஹநாதமென்பது நமது அகத்தில் இடையறாது ஒலித்துக் கொண்டிருக்கும் ஒலியாகும்! இந்த நாதத்தை யாரும் இலகுவாக தெரிந்திருப்பதில்லை. நமக்குள் வீற்றிருக்கும் ஆன்மாவின் தெய்வீக நாதமாகிய அஹநாதத்தை உணர்ந்து அதில் லயித்து நம் கர்ம வினைகளை அறுத்து அதன்மூலம் இறப்பிறப்பற்ற பெருநிலையை பெற வைப்பதே அஹநாத யோகமாகும்! நாதம் எனப்படுகின்ற சப்தமாகிய ஒலியானது இந்த பிரபஞ்சத்தில் முதல்முதலாக தோன்றியதாகும். இந்த தெய்வீக சப்தத்தினால் தான் அண்டசராசரங்களும் அனைத்துப் படைப்புகளும் உருவானது. பிரபஞ்ச தோற்றத்திற்கு மூலமும் முதலுமாக இந்த நாதமே விளங்கிற்று. சகலவற்றின் ஆதார சக்தியும் அதுவேயாகும். இதனால்தான் புனித பைபிளில்:- "தொடக்கத்தில் வாக்கு இருந்தது, அவ்வாக்கு கடவுளோடு இருந்தது, அவ்வாக்கு கடவுளாயும் இருந்தது, வாக்கு என்னும் அவரே தொடக்கத்தில் கடவுளோடு இருந்தார்,அனைத்தும் அவரால் உண்டாயின, உண்டானது எதுவும் அவரால் அன்றி உண்டாகவில்லை. " (யோவாள் : 1 -  1,2,3.) அதாவது, ஆதியில் சப்தம் ஒன்றே வியாபித்திருந்தது. இந்த சப்தம் இறைவனுக்குள் ஐக்கியமாகி இருந்தது. இந்த சப்தமும் இறைவனும் ஒன்றே எனக் கூறலாம். இந்த சப்தத்தின் ரூபமாகிய இறைவன் எல்லாவற்றையும் தோற்றுவித்தான். இதுவே புனித திருக்குரானிலும் ஆண்டவர் கல்மா அல்லது குன் என்று சொல்லப்படும் சப்தத்தினாலே இந்த உலகத்தைப் படைத்தார் என்று கூறப்படுகிறது. இதைனையே குருநானக் சப்தம் அல்லது தூர் - கீ - பானி (மூலநாதம்) ஸீல்தான் - உல் - அஜ்கர் (ஜெபங்களின் சக்கரவர்த்தி) என குறிப்பிடுகிறார். ரிக வேதத்தில் "யாவத் பிரம்ம சிரேஸ்பம் தாவதீ வாக" அதாவது பிரம்மம் எவ்வளவு உயர்ந்ததோ, அவ்வளவு' வாக்கு 'உயர்ந்தது. வாக்கு என்பது சப்தம். வேதங்கள் யாவிலும் இறைவன் ஆகாச வாணியின் (ஓங்காரம்) மூலமாக சகலத்தையும் படைத்தார் என்று கூறுகிறது. இதையே மகான்கள் எல்லோரும் சப்தம், நாதம், வாக்கு, வாணி என்று கூறுகிறார்கள். இதனை சட்டைமுனி என்ற சித்தர் அழகாக கூறுகிறார். "நாதமப்பா யோகத்தில் ஐந்து நாதம் நலமான மௌனத்தில் ஐந்து நாதம் வேதமப்பா கடந்திடந்தே சுத்த நாதம் வெட்ட வெளிக்குள்ளே யொருநாதமுண்டு பாதமப்பா கடந்திடந்தேயந்த நாதம் புகழாகச் சேவித்து நிற்குமென்றும் காதமப்பா தூரமில்லை அந்தோ அந்தோ கண்ணுக்குள் விண்ணுக்குள் கலந்துகாணே " இதனை திருமூலரும் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். " ஓங்காரமே உலகேழும் படைப்பதும் ஓங்காரமே உலகேழும் துடைப்பதும் ஓங்காரமே உலகோடுயிர்தானே ஈசன் இயல்பும் இமையவர் ஈட்டமும் பாசம் பறக்கப் பரிந்துயிராய் நிற்கும் ஓசையதன் முணம்போல விடுவதோர்  ஓசையாம் ஈசனை உணர வல்லவர்க்கே மணிகடல் யானை வார்குழல் மேகம் அணி, வண்டு, தம்பி வளை பேரிவையாம் தணிந்தெளு நாதம் தாமிவை பத்தும் பணிந்த வர்க்கல்லாது பார்க்க வொண்ணாதே " என்று நாதமே எல்லா தோற்றத்திற்கும் காரணம் என்றும், இறைவனே நாதவடிவானவன் என்றும் குறிப்பிடுகின்றார். இது" துனாத் மகா நாதம் " என அழைக்கப் படும். ஏனெனில் இது வாயினால் கூறாமல் ஆத்மாவில் ஒலித்துக் கொண்டிருக்கும் புனித சப்தம்! யோக சந்தியா என்னும் நூலில் இந்த அஹநாதம் பற்றி கூறப்பட்டுள்ளது. சாந்மதக்கிய உபநிஷத்திலும் மூன்றாவது அத்தியாயத்தில் சூரியனிலிருந்து இந்த நாதம் தோன்றியதாக கூறப்படுகிறது. வாகம் பரணி என்று ரிக் வேதத்திலும் அதர்வண வேதம் 30 வது சுலோகத்திலும் நாதத்தின் மகிமை கூறப்படுகிறது. அஹடயோக பிரதீபிகாவிலும் இந்த அஹநாதம் பற்றி கூறப்பட்டுள்ளது. மேலும் சமணர்களின் புனித நூலில் இதனை திவ்யத்வனி (அண்டங்களின் ஓசை) என்று குறிப்பிடப்படுகிறது. கிரேக்கர்கள்" லோகஸ்" என்றும், சீனர்களின் புனித நூலில் "தாவோ" என்றும், சௌராஷ்டிரர்கள் "சரோஸ்" என்றும் அகநாதத்தை விவரிக்கிறார்கள்! ஆன்ம நாதமாகிய இந்த அஹ நாதத்தினுடன் ஆன்மா தொடர்பு கொள்ளும் போது தான் அது கர்மத்திலிருந்து விடுதலை அடைய முடியும்! ஆகவே எங்கும் நிறைந்த எல்லாவற்றுக்கும் மூலமான சப்தத்தை தன் ஆன்மாவின் உள்ளே அறிந்து அதில் லயித்து உணர்ந்து ஆனந்திப்பதனால் நம் பூர்வ ஜென்ம கர்மாக்கள் அழிக்கப்பட்டு ஆன்மாவானது புனிதமடைந்து மீண்டும் சத்கர்மங்களை செய்து (புனித செயல்களை) மேல்நிலை அடைகிறது! அதுமட்டுமல்லாமல் தான் விரும்புகின்ற இகபர சுகங்களையும் பெற்று ஆனந்தம் பெறுகின்றது! அஹநாதமானது ஸ்மரணை (ஜபம்) செய்யும் ஒவ்வொருவரது வாழ்விலும் அவரவர் விருப்பத்தை நிறைவேற்றும் கல்ப விருட்சமாக அமைந்து விடுகின்றது. சாதகனின் அறிவை நுண்மைப்படுத்தி அவனது தீய கர்மங்களை அழித்து நல்ல கர்மாக்களை புரியவைக்கிறது. அவனது தேவைகளை இயற்கையின் இணக்கத்தோடு பெறுவதற்கு வழிவகுக்கிறது. சாதகனின் சராசரி வாழ்வின் எல்லா பிரச்சினைகளிலும் அறிவு மயமாகவே இருந்து வழிகாட்டி வாழ்வில் எல்லா செல்வங்களும் தங்குதடையின்றி கிடைக்கவும், ஆனந்தமும் அமைதியும் ஏற்பட வழிகாட்டுகிறது! எல்லையற்ற நித்தியானந்தமாகிய அஹநாதத்தை குருமூலம் கிடைக்கும் பீஜாட்சர மந்திர தீட்சை மூலமாக பெறும்போது சத்குரு பெற்றிருக்கும் புனித ஆற்றலை சிஷ்யனுக்கும் தரும் ஒரு இணைப்பாக இது அமைகின்றது! அதாவது பிரபஞ்ச சக்தியிலிருந்து சத்குருவும் அவரிடமிருந்து சிஷ்யனும் நாதத்தின் மஹா சக்தியினால் இணைக்கப்படுகின்றனர்! புனிதமான அஹநாதத்தை ஸ்மரணை (ஜெபித்தல்) செய்யும் போது சூட்சும உடலில் உள்ள ஆறுஆதாரசக்கரங்களும் புனிதம் பெற்று இயங்கத் தொடங்குகின்றன! அஹநாத ஒலியானது தன் ஆற்றல்மிகு அபூர்வ அதிர்வலைகளால் சகஸ்ராரத்தினையும் கடந்து பிரபஞ்ச பேரியக்க சக்தியோடு இணைப்பு பெறுகிறது! இதனால் ஒரு சாதகன் எல்லையற்ற பரம்பொருளுடன் இணைப்பு பெறுவதால் அப்பிரம்மத்தை தன்னில் உணர்கிறான்! பரப்பிரம்மாவாகிய ஆதிநிலைக்கு தன்னை சமமாக்கிக் கொள்ளும் சமாதி நிலைக்கு இறுதியில் கைவல்யம் பெறுகிறான்! அஹநாதத்தை ஸ்மரணை செய்யும் சாதகன் எல்லாவற்றுக்கும் மேலான தெய்வீக நிலையை இறுதியில் அடைகிறான்!! இந்த மேலான அஹநாதத்திலே தான் நம் சித்தர்கள், யோகிகள், மஹரிஷிகள் யாவரும் லயித்திருந்தனர்! அவர்களால் அறிந்து உணர்ந்த புனித வழியே இதுவாகும்! நம் முன்னோர்களான சித்தர்களும், யோகிகளும் மெய்ஞானக்கடலுள் ஆழ்ந்தெடுத்த ஆணிப்பொன் முத்தான இந்த அஹநாத யோகமானது நமக்கு கிடைத்திருக்கும் ஒரு வரப்பிரசாதமாகும்! தன்னை தன்னுள்ளே அறிந்து அங்கு எல்லையற்று ஒலித்துக் கொண்டிருக்கும் அஹநாதத்திலே மூழ்கி பேராற்றலும் பேரானந்தமும் பெற்ற யோகிகள் சித்தர்கள் எல்லோரும் அவர்கள் நினைத்ததை செயல்படுத்தினர்! இந்த உலகிற்கும் இங்கு வாழ்கின்ற உயிரினங்களுக்கும் இயற்கைக்கும் அளப்பரிய சேவை செய்தனர். இந்த மெய்ஞானக் கடலில் நீங்களும் சங்கமித்து எல்லா செல்வங்களும் பெற்று பிறப்பிறப்பற்ற பரிபூரண பரப்பிரம்மசாவதத்தில் இரண்டறக் கலந்து இறைநிலை அடைவீர்களாக!

No comments:

Post a Comment