Wednesday, December 7, 2022
குரு பாதம்
குரு பாதம்
----------
" பன்னீர் ஒழுகும் உன்றன் பாதமலரை
என்றன் சென்னிமிசை மீதேற்றி
அருள்செய்வாய் மனோன்மணியே!"
- குணங்குடியார்
குரு பெருமானார் திருவடியை," பன்னீர் ஒழுகும் பாதமலர்" என்கிறார் குணங்குடி யார்.
மணம் கமழும் பாதமலர் என்கிறார்.
"நின் பாதமெனும்
வாசக்கமலம் தலைமேல்
வலிய வைத்து ஆண்டு கொண்ட
நேசத்தை என் சொல்லுவேன்
ஈசர்பாகத்து நேரிழையே!"
- அபிராமி பட்டர்
"நின் பாதமெனும் வாசக் கமலம்".... என்கிறார் அபிராமி பட்டர்.
தன்னை ஆட்கொண்ட குருபிரான் திருவடியை மணக்கும் தாமரை என்கிறார் அபிராமி பட்டர்.
" சீதக் களபச் செந்தாமரைப்பூம்
பாதச் சிலம்பு பல இசை பாட"
என ஔவைப் பிராட்டியார் விநாயகர் அகவலில் குறிப்பிட்டுள்ளார்.
குளிர்ந்த மணம் கமழும் சிவந்த செந்தாமரை போன்ற பாதமலர் என்கிறார் ஔவையார்.
குருவின் திருவடியை மெய்ஞ்ஞானிகள் அனைவரும் வாசம் கமழும் பாதமலர் என்கிறார்கள்.
அஃது என்ன வாசம்- மணம்?
வள்ளலார் அருளிய திருவருட்பாவில்,
" என் அறிவெனும் பதம் என்அறிவினுக்கறிவாய்
இருந்த செங்கமலப் பதம்"
என்கிறார்.
சிவந்த செந்தாமரை பதம் என்பது அறிவெனும் பதம்- அறிவினுக்கு அறிவாய் இருந்த பதம் என்கிறார்.
குருபாதம் என்பது அறிவு மயமானது.அறிவே வடிவமானது. அறிவு மணம் கமழுவது.
அங்கிருந்தே நம் ஆன்மாவிற்கான அமிர்த வர்ஷிப்பு பொழிகிறது.
" அறிவாய் இருந்திடு
நாதவொலி காட்டியே
அமிர்தப் பிரவாக சித்தி
அருளினை"... என்கிறார் தாயுமானவப் பிரபு.
ஆசானின் ஆடும் திருவடியை நாடி நின்றாரைச் சும்மா இருக்கும் சுகம் தானே தேடி வரும்.
" தேசிகன் ஆடும் திருநடனம் கண்டால்
தித்திக்கும் என்னுயிரே" என்றும்
" ஆசின் மாமறை ஆதி புராதன
மாசிலாத் தனிகையர் மனுமகன்
ஓசை கொண்ட நடனத்தாலே மனு
ஈசனாகும் இயல்பெடுத்து ஓதுவாம்" என்றும்
பிரம்ம பிரகாச மெய்வழி ஆண்டவர்கள் குருபாதம் குறித்து அருளியுள்ளார்கள்.
தேவ நடனம் புரியும் திருப்பாதம் அது.
அங்கிருந்து தான் ஓசை கொண்ட திருநடனம் எழுந்து மனுவை ஈசனாக்கும் செயல் நடக்கிறது என்கிறார்கள்.
திருஆலவாய் தலத்தின்- திரு அம்பலத்தே குருபரன் ஆடும் ஓசை கொண்ட நடனத்தால் வெளியாகும் நாதவொலியை செவிமடுத்து கேட்டலே தவம் நிஷ்டை தியானம் என்பதாகும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment