Thursday, December 8, 2022
வாழ்க்கையில் ஏமாற்றம்
பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நாம் நமக்கான மிகப் பெரும் சவால்கள் யாவும் நமக்கு வெளியில் இருப்பதாகவே நம்பிக் கொண்டிருக்கிறோம். ஆனால் நமது வாழ்க்கையை வாழ வேண்டிய முறையில் மிகவும் எளிமையாகவும் நிம்மதியாகவும் வாழ்வதை விட்டும் நம்மைத் தடுக்கக்கூடிய பெரும் சவால்கள் யாவும் நமக்குள்ளேயேதான் இருக்கின்றன.
நாம் ஒருபோதும் நமது இயலாமையை அல்லது தவறுகளை இலகுவில் ஏற்றுக்கொள்வதில்லை. எமக்கு உரித்தற்ற தகுதியை உரிமை கோருவதிலும், நாம் பொறுப்பேற்க வேண்டிய பழியை இன்னொருவன் தலையில் சுமத்துவதிலும் மனிதர்களின் அளவுக்கு திறமையாக செயற்படக்கூடிய வேறு படைப்பினங்கள் இருக்குமா என்று சந்தேகமாக இருக்கிறது.
வாழ்க்கையை வாழ்வதற்கான ஒன்றாகப் பார்க்காமல் பந்தயமாகப் பார்க்கின்ற நவீன உலக ஒழுங்கின் கீழ் மேற்படி மனிதப் பலவீனம் இன்னும் பன்மடங்கு ஆழத்துக்கு வேரூன்றியிருக்கிறது. திரும்பும் பக்கமெல்லாம் பழி சுமத்தல்களும் சுய புராணங்களுமாய் மனிதம் அருவருத்துக் கிடக்கிறது. பலர் இந்த சகதிக்குள் மெல்ல மெல்ல அமிழ்ந்து கொண்டிருக்கின்றனர். இன்னும் பலர் இந்த சாக்கடையின் துர்வாடைக்கு இயைபாக்கமடைந்நு அதனோடே வாழப் பழகியிருக்கின்றனர்.
தனக்கு உரித்தற்ற தகுதியை உரிமை கோருபவன் தனது இயலாமையை மூடி மறைத்து, செயற்கையாக கற்பிதப்படுத்திக்கொண்ட ஒரு குமிழிக்குள் தன்னை சிறைப்படுத்திக் கொள்கிறான். அந்தக் குமிழி எந்த சந்தர்ப்பத்திலும் உடைந்து அவனது சுயரூபம் வெளிப்படக்கூடிய சாத்தியம் இருக்கிறது. எனவே அவனது கவனம் முழுக்க அந்தக் குமிழியை உடைய விடாமல் பாதுகாப்பதிலேயே குவிந்திருக்கும். எனவேதான் தற்புகழ்ச்சியும் சுயபுராணமும் அவனது அன்றாட தொழிற்பாடுகளாக மாறிவிடுகின்றன. எந்தளவுக்கு அவசரமாக அந்தக் குமிழி உடைகிறதோ அந்தளவுக்கு அவசரமாக அவனது நிவாரணத்துக்கான வாய்ப்பு இருக்கிறது.
ஆனால் செயற்கையான அந்தப் போலி தரும் சுகத்தில் வாழ்க்கையின் இயல்பான, நீடித்த சுகத்தை இழப்பதை புரியாமலேயே அவன் காலந்தள்ளி விடுகிறான். குமிழிக்குள் மிதக்கும் போதைக்கும், உரித்தற்றதை உரிமை கொண்டாடுவதால் மனசாட்சிக்குள் குத்திக்கொண்டிருக்கும் குறுகுறுப்புக்குமிடையிலான முரண்பாட்டில் அவனது வாழ்க்கை அர்த்தமற்றதாக மாறி விடுகின்றது.
அவ்வாறே, தான் பொறுப்பேற்க வேண்டிய ஒன்றின் பழியை இலாவகமாக இன்னொருவன் தலையில் போட்டுவிடும் தந்திரம் பலருக்கு கைவரப்பெற்றிருக்கின்றது. அந்த சமயத்தில் இது பெரும் திறமை போன்றும் பெறுமதியான வாழ்க்கைத்திறன் போன்றும் தோன்றும். தன்னைத் தானே முதுகில் தட்டிக்கொள்கின்ற அளவுக்கு ஒருவனை ஆணவத்தின் பக்கம் அழைத்துச் செல்லும் சக்தி இதற்குண்டு. ஆனால் ஒரு பக்கத்தில் அவனை உச்சாணிக் கொம்பில் ஏற்றி வைக்கும் உணர்வைக் கொடுக்கும் அதே வேளை, இந்த இயல்பானது இன்னொரு பக்கத்தில் தவறுகளினதும் குற்றங்களினதும் பக்கம் அவனது ஈடுபாட்டை மிகவுமே அதிகரிக்கும். தந்திரமாகத் தப்பிக்கொள்ளும் திறன் தனக்கிருப்பதாக அவன் நம்பத் தொடங்கும் போது குற்றங்களின் மீதான பயம் அவனை விட்டு விலகிச் செல்ல ஆரம்பிக்கின்றது. எனவே அவன் அவனையறியாமலேயே ஒரு சமூக விரோதியாக மாறி விடுவான்.
இந்த இரண்டு பிறழ்வுகளிலிருந்தும் தம்மைத் தற்காத்துக்கொள்ள முடியுமானவர்கள் வாழ்க்கையில் கஷ்டங்களை நிச்சயம் எதிர்நோக்குவார்கள். ஆனால் அவர்களது ஒவ்வொரு கஷ்டத்தின் முடிவும் சுரங்கத்தின் முடிவில் தெரியும் ஒளிக்கீற்றாகவே இருக்கும். இதற்கு மாற்றமாக, இந்த இரண்டு பிறழ்வுகளுக்குமோ அல்லது இரண்டில் ஒன்றுக்கோ தம்மை உட்படுத்திக் கொண்டவர்கள் வெளிச்சத்தில் இருப்பது போன்றும் பந்தயத்தில் வென்றது போன்றும் உணர்வார்கள். ஆனால் உண்மையில் அவர்கள் இருப்பதோ எரியும் நெருப்பின் சுவாலைகளுக்கு மேல் என்பதே யதார்த்தம்.
போலித்தன்மைக்கு எப்போதும் மவுசும் மரியாதையும் இருப்பது போன்று தோன்றினாலும், உண்மையையும் யதார்த்தத்தையும் விட பொய்யும் போலியும் அதிவேகமாக அங்கீகரிக்கப்படுவதாகத் தோன்றினாலும் போலிகள் என்பவை எப்போதுமே அத்திவாரமற்ற கட்டிடமே. ‘உண்மை வாசற்படி தாண்டுவதற்கிடையில் பொய் ஊரைச் சுற்றி வந்துவிடும்’ என்று சொல்வார்கள். ஆனால் அது உண்மை வாசற்படி தாண்டும் வரையில்தான். உண்மைகள் வெளிச்சத்துக்கு வராமல் இருப்பதில்லை. அவை வெளிச்சத்துக்கு வரும்போது பொய்களும் போலிகளும் பொலபொலவென உதிர்ந்துவிடும்.
வாழ்க்கையை வாழ்பவர்கள் உண்மையில் போலிகளால் கோட்டைகளைக் கட்டி வைத்திருப்பவர்களல்லர். ஏனெனில், உண்மைகளால் கட்டப்பட்டிருக்கும் ஒரு சிறு குடிசைக்கு முன்னால் போலிகளால் கட்டப்பட்ட ஆயிரம் கோட்டைகளும் தாக்குபிடிக்காது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment