Tuesday, November 1, 2022

வேத வைகரி

 வேதங்களுக்குப் பிராணன் மந்திரங்கள் என்றால், அந்த மந்திரங்களுக்குப் பிராணன் அக்ஷர சுத்தம். அதாவது, சரியான உச்சரிப்புத்தானே? இது மாறினால் வெளி ஆகாசத்து சலனம் (vibration), உள்ளே நாடி சலனம் இரண்டும் மாறிப் பலனே மாறிவிடும் என்று சொன்னேனல்லவா? எந்தெந்த அக்ஷரம் சரீரத்தில் எங்கே யெங்கே பிறந்து எப்படி வெளிப்படுகிறது என்பதையெல்லாம் ரொம்பவும் scientific-ஆக (விஞ்ஞான ரீதியில்) சிக்ஷா சாஸ்திரத்தில் சொல்லியிருக்கிறது. வெளியிலே மநுஷ்யர் காதுபடக் கேட்கிற ‘வைகிரி’ என்ற சப்தத்துக்கு ஆதாரமாக உள்ளே ‘பரா’ என்ற சப்தம் இருக்கிறது. ‘வைகிரி’ வாயில், உதட்டில் வருவது. ‘பரா’ என்ற மூல ரூபம்தான் மூலாதாரத்தில் நாபிக்குக் கீழே இருக்கிற சப்தம். அது வைகரியாக வாய் வழியே வருவதற்கு முன் பச்யந்தி, மத்யமா என்ற இரண்டு நிலைகள் இருக்கின்றன. யோக சித்தியில் மேலே போகப் போகத்தான் படிப்படியாக பச்யந்தி, மத்யமா, பரா முதலிய சப்தங்களை கேட்க முடியும். யோகேச்வரர்களான ரிஷிகள் பரா வாக்கையே கேட்கக் கூடியவர்கள். மூலாதாரத்தில் பரா வாக்காக எந்தெந்த சப்தங்கள் இருந்தால், அவை வைகரியாக எல்லா மநுஷ்யர்களும் வெளிப்படக் கேட்கக் கூடியபடி வரும்போது, அவற்றால் தேவதாப் பிரீதியும், லோகக்ஷேமமும், ஆத்மாபிவிருத்தியும் உண்டாகுமோ, அப்படிப்பட்ட பரா வாக்குகளையே ரிஷிகள் அகண்ட ஆகாசத்திலிருந்து கிரஹித்து வேத மந்திரங்களாக நமக்குத் தந்திருக்கிறார்கள். இந்த விவரங்களைத் தொல்காப்பியத்தில் ரொம்பவும் நன்றாகப் புரிந்து கொண்டு சொல்லியிருக்கிற விஷயம் ஸமீபத்தில் தெரிய வந்தது.


பரா, பச்யந்தி என்பவற்றைப் பரை, பைசந்தி என்று பழைய தமிழ் நூல்களிலேயே சொல்லியிருப்பது முன்னமே தெரிந்தது. ஆனாலும் பஞ்சப் பிராணங்களில் உதானன் என்ற மேல்நோக்கிப் போகிற காற்றினால்தான் மூலாதாரத்தில் சப்தங்கள் உண்டாகின்றன என்பது உள்பட, மந்திரயோகம் இத்தனை நுணுக்கமாகத் தமிழின் முதல் நூலான தொல்காப்பியத்திலேயே சொல்லப்பட்டிருக்கிறதென்று இப்போது தான் தெரிந்தது

No comments:

Post a Comment