========அமுரி என்பது என்ன??அமுரிதாரணை எது??======
திருமந்திர மூன்றாம் தந்திரம் அமுரி தாரணை என வைக்கபட்டுள்ளது. சித்த மருத்துவர்களிடத்திலும் ஆன்மீக அன்பர்களிடத்தும் இதை குறித்து ஏராளமான வாதபிரதிவாதங்களும் ,கொள்கை வேறுபாடுகளும் நிலவுகின்றன. சித்த கற்பநூல்களில் சொல்லபட்டிருக்கும் காயகற்ப பயிற்சியே அமுரியை விளக்குகின்றது. அகர உகர மகர வகர சிகர கற்பங்களை கூறுகின்றன.ஆனால் அமுரி எங்குமே பிடிபடாமல் நிற்கிறது, மூத்திரத்தை குடிப்பவர்கள் முதல் வெடியுப்பும் பொட்டிலுப்பும் சேர்த்து வாலை ரசம் வடிப்பவர்களும், இளம் வாழைகன்றின் கிழங்கு சாறுவரை அமுரி என வகைபடுத்தி கொள்கின்றனர்.ஆனால்......
திருமந்திரத்தில் அமுரிதாரணை என சொல்லப்படும் பகுதியில் சொல்லபட்டிருப்பது அமுரி அல்ல. யாரோ திருமந்திர பாடல்களை பகுதி பகுதி என பதிப்பித்து வகை படுத்தியவர்கள் இந்த பாடல்களை அமுரி தாரணை என தலைப்பிட்டு விட்டனர். ஆனால் இந்த பகுதியில் வரும் பாடல்கள் அமுரியை குறித்து சொல்லபடுபவை கிடையாது..கீழே கொடுக்கபட்டிருக்கும் திருமந்திர பாடல்கலை சற்று கூர்ந்து பாருங்கள் ,இது விளங்கும்.
இந்த பாடல்களில் எங்குமே அமுரி என ஒரு வார்த்தை கிடையாது, ஆனால் யாரோ தலைப்பை மட்டும் அமுரிதாரணை என தவறுதலாக வைத்துவிட்டனர். மக்களும் இதை படித்து விட்டு ஏராளமாக குழம்பி கிடக்கிறார்கள்.சித்தர் பாடல்களில் வரும் கற்ப சாதனைகளில் அமுரி என்பது முதல் பத்து மாதங்கள் கொள்ளப்படவேண்டியது...அதன் பிறகு காலை அமுரி மாலை புளி என ஒரு வருடம்...இப்படியாக சாதனைகள் சொல்லபட்டிருக்கும்.
ஆனால் திருமந்திர பாடல்களில் சொல்லபட்டிருக்கும் “வீரமருந்து” என்பது அமுரியல்ல, இது அமுரி என திருமூலரும் எங்குமே சொல்லவில்லை. மட்டுமல்ல இந்த வீரமருந்தானது எட்டு வருடங்கள் கொள்ளவேண்டியது. சித்தர் கற்பசாதனையில் சொல்லும் அமுரிக்கு மிளகும் நெல்லியும் மஞ்சளும் வேம்பு கூட சேர்க்கவேண்டியதில்லை.அந்த கற்பத்துக்கு இப்படியான சேர்க்கைகள் கிடையாது. இது வேறு மருந்து அது வேறு . அமுரியை திருமந்திரத்தில் கொண்டு வந்து சேர்ப்பித்த மகான் எங்கிருந்தாலும் வாழ்க என வாழ்த்த மட்டுமே முடிகிறது.
பாடல் எண் : 1
உடலிற் கிடந்த உறுதிக் குடி நீர்
கடலிற் சிறுகிணற் றேற்றமிட் டாலொக்கும்
உடலில் ஒருவழி ஒன்றுக் கிறைக்கில்
நடலைப் படாதுயிர் நாட்டலு மாமே.
பாடல் எண் : 2
தெளிதரும் இந்தச் சிவநீர் பருகில்
ஒளிதரும் ஓராண்டில் ஊனமொன் றில்லை
வளியுறும் எட்டில் மனமும் ஒடுங்கும்
களிதரும் காயம் கனகம தாமே.
பாடல் எண் : 3
நூறும் மிளகு நுகரும் சிவத்தின் நீர்
மாறும் இதற்கு மருந்தில்லை மாந்தர்காள்
தேறி இதனைத் தெளிஉச்சி கப்பிடின்
மாறும் இதற்கு மறுமயி ராமே.
பாடல் எண் : 4
கரையரு கேநின்ற கானல் உவரி
வரைவரை என்பர் மதியிலா மாந்தர்
நுரைதிரை நீக்கி நுகரவல் லார்க்கு
நரைதிரை மாறும் நமனுமங் கில்லையே.
அளக நன்னுத லாயோ ரதிசயங்
களவு காயங் கலந்தஇந் நீரிலே
மிளகு நெல்லியும் மஞ்சளும் வேம்பிடில்
இளகும் மேனி இருளுங் கபாலமே.
பாடல் எண் : 5
வீர மருந்தென்றும் விண்ணோர் மருந்தென்றும்
நாரி மருந்தென்றும் நந்தி அருள்செய்தான்
ஆதி மருந்தென் றறிவார் அகலிடஞ்
சோதி மருந்திது சொல்லவொண் ணாதே
No comments:
Post a Comment