Friday, November 4, 2022

தோ=TAO

தோ=TAO=


இருதயத்தில் மலர்ந்த வாழைப்பூப்போல் ஒரு பையுண்டு. அது வெண்மையாயிருக்கும். இதைக் கைலாய மென்று சொல்லுகின்றது. இந்தப் பையுள் முன் சொன்ன காற்றில் பதினாயிரங் கோடி பங்கிலொரு பங்காக வெகு நேர்மையாய் அக்கினி மயமாய் ஒரு ஆவியிருக்கும். இதற்குக் காரணாக்கினி யென்று பெயர். இவ்வக்கினியைக் காலசந்திரருத்திரமூர்த்தி யென்பர். இப்பையின் அருகில் இடப் புறத்தில் மலர்ந்த தாமரைப் பூப்போல் ஒரு பையுண்டு. அந்தப் பை பசுமை வண்ணமாயிருக்கும். அதற்கும் முன் சொன்ன வெண்மைப் பைக்கும் ஒரு நாடியுண்டு. அதன் மூலமாய்க் காரணாக்கினி அதிகப்படுத்தாமலும் குறைவுபடுத்தாமலும் சமப்படுத்தி வைக்கும். இந்த மலர்ந்த பைக்கும் கீழிருக்கும் க்ஷீராப்திப் பைக்கும் ஒரு நாடியுண்டு. அதன் மூலமாய் அதற்கு உஷ்ணங் கொடுத்து நிலையில் வைக்கும். இதனால் ருத்திரனிடத்தில் விஷ்ணு பிறந்ததாய்ச் சொல்லுகின்றது. இந்த நாடி மூலமாக விஷ்ணு இடமாகிய ஜலத்திலும் பிரமனிடமாகிய இந்திரியத்திலும் உள்ள குற்றங்களைக் கண்டிப்பதால் ருத்திரனைச் சம்ஹார கர்த்தா வென்று சொல்வது.

இந்த அக்கினிப் பையில் குண்டலி வட்ட நரம்பு ஒன்று உண்டு. அதில் மூன்றாகப் பிரியும் கிளையுண்டு. அது மூல முதல் பிரமரந்திரம் வரையில் இடம் வலம் நடு வென்று கத்தரிமாறலாய்ப் பிராணாபானனுக்கு இடங்கொடுத்து ஊடுருவி நிற்கும். இந் நரம்புகளுக்குச் சோம சூரி யாக்கினி யென்று பெயர்.

இஃதன்றி இக் குண்டலி வட்ட நரம்பினடியில் நின்று இரண்டு நரம்பு, வலத்தில் அஞ்சு கவருடைய தலையாயும் இடத்தில் ஆறு தலையுடைய கவராயும் நிற்கின்றன. வலத்திலுள்ளது கணபதி யென்றும், இடத்திலுள்ளது சுப்பிரமணிய ரென்றும் பெயர் சொல்லுவது. மேற்படி ஐந்து கவருடைய நரம்பிற்கு அடியில் தலையெடுப்பான நரம்பு கீழ் நோக்கி கிருஷ்ணவர்ணமா யிருக்கும். இந்த நரம்பு இடைவிடாது அசைந்துகொண்டிருக்கும். இந்த அசைவால் அக்கினிப் பைக்கு ஆதாரம் உண்டாவதால் இதற்குக் கணபதியென்று பெயர். மேற்படி ஐந்து கவருடைய நாடிக்கு இடம் வலம் இரண்டிலும் சித்திதத்துவம் புத்திதத்துவம் உண்டு. இடத்திலுள்ள ஆறு கவருடைய நாடிக்குக் கீழ் அனந்த வண்ணமான நாடி ஒன்றுண்டு. இதற்கு மயூரமென்று பெயர். இந்த நாடியின் அசைவால் எழுபத்தீராயிரம் (72,000) நாடியும் அக்கிரமமின்றி நிலைபெறுகின்ற படியால், இதற்குச் சேனாதிபதி யென்றும் பெயர். மேலும் வலது புறத்து நாடிக்கு அறுபத்திரண்டு மாத்திரையும் இடதுபுறத்து நாடிக்கு நாற்பது மாத்திரையும் அளவு வித்தியாசமிருப்பதால், இவர்களைச் சோதரர்களாகச் சொல்வதுமன்றி, மேற்படி ருத்திராம்சமாகவே சொல்லுகின்றது.-(VALLALAR )

No comments:

Post a Comment