Monday, November 28, 2022

காலிங்க நர்த்தனம்.

காலிங்க நர்த்தனம். கால் என்றால் மூச்சு அல்லது காற்றைக் குறிக்கும் பதமாகும். காற்று என்கிற போது நம் உடலில் பத்து வாயுக்கள் உள்ளன. அவைகளை தச வாயுக்கள் என்போம். அவைகள் முதன்மை வாயுக்கள் ஐந்து, உப வாயுக்கள் ஐந்து என்று இரண்டு பிரிவாகப் பிரித்து சொல்லப்பட்டுள்ளது. இந்த முதன்மை வாயுக்கள் ஐந்தும் பஞ்ச பிராணன்கள் எனப்படும். இவற்றில் ஏற்படும் நிறை குறைகளால் பிராணனில் சலனம் ஏற்படும். பிராணனின் சலனமே மனதின் சலனமாகும். இவற்றை அடக்கி நேர் படுத்தினால் பிராணன் அடங்கும். பிராணன் அடங்கினால் மனம் அடங்கும். மனம் அடங்கி செயலற்றுப் போனால் இறை தரிசனம் கிட்டும். இந்த பஞ்ச பிராணனின் ஐந்து தலைகளையே நாகேந்திரனின் ஐந்து தலைகளாகக் குறிப்பிட்டு, அதை அடக்கினால் இறைவனின் திருக்கூத்தை திரு நர்த்தனத்தைக் காணலாம் என்பதை உணர்த்தும் கதையே காலிங்க நர்த்தனம். யோக இரகஸியத்தை உணர்த்துவதாகும். பஞ்ச பிராணன்கள் என்கிற போது, பிராணவாயு இதுவே எல்லாவற்றிலும் தலையாயது. இது மற்ற எல்லா வாயுக்களுக்குள்ளும் சூக்குமமாக உள்ளதாகும். இதை யஞ்ஞோபவீதம், பிரம்ம சூத்திரம், ஹம்ஷம், பிராணன், உயிர், ஜீவன், நூல், வாசி, கால், பாதம், குதிரை என்று பல பெயர்களால் குறிப்பிடுவார்கள். எனவேதான் இதை ஐந்து தலைகளில் நடுவில் வைத்து அதன் மேல் உச்சியில் பரமாத்மா நின்று ஆடுவது போலக் குறிப்பிட்டார்கள். பிராணனுக்கு வலது புறம் உள்ள தலையானது அபானனாகும். இது குதப் பகுதியில் உள்ளது. அதை ஒட்டி வலது புறம் அமைந்தது ஸமானன் இது நாபிஸ்தானத்தில் உள்ளது. பிராணனை ஒட்டி இடது புறம் உள்ள தலை உதானன். இது கண்டப் பகுதியில் உள்ளது. அதை ஒட்டி இடது புறம் உள்ள தலை வியானனைக் குறிப்பதாகும். இது உடலெங்கும் வியாபித்திருப்பது. இந்த பஞ்ச பிராணன்களை அடக்குவது என்பதை பொதுவாக பிராணனை அடக்குவது என்பார்கள். யோக பலத்தால் பிராணனை அடக்கி விட்டால் மனம் அடங்கி செயலற்றுப் போகும். மனமானது செயலற்ற நிலைக்குப் போனால் தான் யோக நித்திரை செய்ய முடியும் என்பதை உணர்த்தும் தத்துவமே பள்ளி கொண்ட பெருமாள் பாம்பின் மேல் படுத்திருப்பது போல காட்டப்படுவதாகும். நாம் காலிங்க நர்த்தனத்திற்கு வருவோம். நதியின் ஆழமான பகுதியில்  நீரோட்டமில்லாத காலங்களில் நீரானது தேங்கி நிற்கும். இது வட்ட வடிவமாக இருக்கும். இதையே மடு என்பார்கள். நீரோட்டமில்லாத காலங்களில் இந்த மடுவில் உள்ள நீரைப் பயன்படுத்திக் கொள்வார்கள். இதைப் போல நம் உடலில் வட்ட வடிவமாக அமைந்த பகுதி தொப்புளாகும். இதை நாபி என்பார்கள். நம் புருவ மத்தியில் அமைந்துள்ள சுழுமுனைக்கிக் கீழே அடி பருத்து, நுனி சிறுத்துக் காணப்படும் மூக்குத்தண்டை லிங்கம் என்பார்கள். இப்போது இந்த நாபியில் இருந்து கிளம்பும் மூச்சு நேராக நிற்கும் லிங்கமாகிய மூக்குத் தண்டின் வழியாக வெளியே போவதும் உள்ளே வருவதுமாக மேலும் கீழும் இடைவிடாமல் இரவும் பகலும் நர்த்தனம் ஆடிக் கொண்டிருக்கிறது. ஆக தொப்புள் எனும் மடுவில் இருந்து கிளம்பிய காலானது லிங்கத்தின் வழியாக மேலும் கீழுமாக இடைவிடாமல் நர்த்தனம் செய்வதே காலிங்க நர்த்தனம். இவ்வாறு இடைவிடாமல் நர்த்தனம் செய்து கொண்டிருக்கும் காலின் வேகத்தை காலால் யோக சாதனைகள் மூலம் அடக்கினால் மனதற்ற நிலை உண்டாகும். அப்போது உச்சியில் இறைவனின் திருக்கூத்தை, நர்த்தனத்தைக் காணலாம்.  இன்னுமொரு சூக்குமம் என்ன வென்றால் மூச்சு என்றால் கால் என்பதை உணர்த்துவதற்காகவே காலைத் தூக்கி நடனம் ஆடுவது போலக் காட்டினார்கள். நான் முதலிலேயே சொன்னது போலக் கால், பாதம் என்பதெல்லாம் பிராணவாயுவைக் குறிக்கும். எனவே பஞ்ச பிராணன்களையும் அடக்க பிராணனை அடக்க வேண்டும் என்பதைக் குறிப்பதையே பகவான் பாதத்தை உச்சியில் பதித்து அடக்குவது போலவும், ஒரு காலைத் தூக்கி ஆடுவது போலக் காட்டுவதாகவும் சித்தரித்தார்கள். இது யோக இரகசியத்தை வெளிப்படுத்தும் தத்துவக் கதையாகும். அவ்வாறல்லாமல் நீங்கள் எந்த லோகங்களுக்குச் சென்று தேடினாலும் ஐந்து தலை உள்ள நாகத்தைப் பார்க்க முடியாது.

No comments:

Post a Comment