Monday, November 28, 2022
வாசியும் - ஊர்த்துவ கதியும் ஒரு விசாரம்
=== வாசியும் - ஊர்த்துவ கதியும் ஒரு விசாரம் ===
வாசி:-
======
நாம ஏராளம் யுக்திகள் வித்தைகள் யோகங்கள் என விசித்திரமான தந்திரங்கள் பலபேதங்கள் காண்கிறோம். சைவ யோகங்கள் வைணவ யோகங்கள் தந்திர யோகங்கள் சாக்தேய யோகங்கள் பவுத்த யோகங்கள் பல இன்னும் பல என விரிகின்றன.இவற்றில் சற்று ஆழ்ந்து ஆராயுங்கால் நாம் காணும் இவை அனைத்தும் ஒரு லட்சியத்தை கொண்டு இயங்குகின்ற சம்பிரதாயங்கள் என காண்கிறோம் அல்லவா, எனில் சொல்லபடும் வாசி யோகத்தின் லட்சியம் தான் என்ன என காண்போமா?
பிராணாயாமம் தான் வாசி யோகம் எனும் கூற்று மக்களின் அறியாமையால் சற்று அதிகமாகவே ஆன்மீக மக்களால் நம்பபட்டு அனுசரிக்கபடுகின்றது. ஆனால் "பிராணாயாமம் வேறு, வாசி வேறு" என்பதை அறிந்தவர் மட்டும் அறிவர்.
பிராணாயாமம் என்பது சுவாசத்தின் எண்ணிக்கையை நாட்கணக்கு அடிப்படையில் குறைத்து உள் அடங்க செய்தல் ஆகும் என்பது அனைவரும் அறிவர். இதனால் நாளொன்றுக்கு விரயமாகும் சுவாசம் சேமிக்கப்பட்டு ஆயுள் அதிகரிக்கபடுகின்றது. அதிகமான் ஆயுள் தீர்க்கமாக கிடைப்பதினால் ஆன்மீக சாதனைகள் நீண்ட காலம் செய்ய அவகாசம் கிடைக்கின்றது. இது ஒரு புறம் இருக்க, வாசி யோகம் என்பது மற்றொரு புறம் இருக்கின்றது.
யோகத்துக்கு ஆதாரமாக கொள்ளபடுபவை சூரிய சந்திர அக்கினி கலைகள் இயங்கும் நாடிகள், இவற்றை கொண்டு பூரகம் ரேசகம் கும்பகம் எனவும், கும்பக பேதமாக அகம் எனவும் புறம் எனவும், மத்தியம கும்பகம் எனவும் விரிவு.
இதில் சக்கரங்கள் ஆதாரங்கள் தேவதைகள் என பிரிவு. அங்க பேத திரிபு என பல விதம். ஆனால் வாசி என்பதில் இதில் இருந்து மாற்றாக இருக்கிறது. எப்படி என காண்போம்.
யோகத்துக்கு ஆதாரமான நாடிகள் இடது வலது என இரு நாசிகள் வழி இயக்கமாக கொள்ளபடுகின்றது. சிவசக்தியாக பாவிக்கபடுகின்றது. இடது வலது என ஒரு சுற்று வட்ட பாதையை கொண்டது யோகங்கள், இதை ஆதாரமாகவே குண்டலிணி எனும் ஆதார சக்தி. ஆனால் வாசி இதில் இருந்து வேறு படுகின்றது, எப்படி என காண்போம்.
இடது கலை தெற்கு எனவும் வாம மார்க்கம் எனவும், வலது கலை வடக்கு எனவும் உத்தர மார்க்கம் எனவும் சொல்லபடுகின்ரன. இந்த நாடிகள் உடம்பின் இரு பக்கங்களாக இருந்து சுழுமுனையை ஊடுருவி செல்கின்றன என சொல்லபடுகின்றன. ஆனால் வாசி வித்யாசமானது என காண்போமா?.
வாசி என்பது “வ-சி”.... வ- என்பது வஜ்ஜ்ர எனும் சூட்சும நாடி... சி- என்பது சித்த்ர எனும் சூட்சும நாடியாகும். இவ்வண்ணம் சூட்சும நாடியினை கொண்டு செய்யபடுகின்றது.
இடை-பிங்கலை நாடிகள் ”வலம் -இடம்” எனில் வஜ்ஜ்ர-சித்த்ர நாடிகள் ”முன் -பின்” எனும் சக்கர சுழற்சியினை கொண்டது. இடை பிங்களைகள் சுழுமுனைக்கு வெளியானவை எனின் வஜ்ஜ்ர சித்த்ர நாடிகள் சுழுமுனைக்கு உள் இயங்குபவை. கிழக்கு-மேற்கானது என கொள்க.
வஜ்ஜ்ர-சித்த்ர நாடிகள் சக்கர தன்மை கொண்டது, அதாவது முன்னும் பின்னும் சுழலும் தன்மை கொண்டது. ஒரு சுழற்சி முன்னோக்கி சுழலுமாயின் சாதகன் தன் பிறவி கர்ம சக்கரத்தின் சுழற்சியில் ஒரு படி முன்னேறுகிறான். இவ்வுலகில் ஜீவித்திருக்கும் வேளையிலே தான் அவன் மற்றொரு பிறவி கர்ம வினை பயனை கடந்து முன் செல்கிறான். அதாவது “தாவி” செல்லுதல்.
யோகம் வாழ்நாளை அதிகரிப்பித்து அதிகம் சாதனை செய்ய வழிவகுக்கும் எனில், வாசி ஒரு சென்மத்தை தாண்டி குதிக்க செய்யும். அவ்வண்ணம் அவன் தான் அடைய வேண்டிய இடத்தை சீக்கிரத்தில் அடைகின்றான்.
ஊர்த்துவ கதி:-
==============
இன்னைக்கு ஒரு வீடியோ பார்த்தேன். தமிழ்நாட்டுக்கு பிரபலமாக தெரிஞ்ச ஒரு சித்த வித்யார்த்தி பேசிகிட்டு இருந்தார். ஊர்த்வகதி என்றால் அது பிரமோஷன் கிடைக்கிற மாதிரியில்ல... எப்ப கிடைக்கும்ண்ணு யாராலும் சொல்லமுடியாதுண்ணு சொல்லிகிட்டு இருக்கார். பிரம்மரந்திரத்தை தட்டி உரசிகிட்டு உள்ளுக்குள்ளேயே சுவாசம் பண்றது தான் ஊர்த்வகதி. அப்படி மூக்கையும் வாயையும் அடைச்சு புடிச்சா கூட சுவாசம் உள்ளுக்குள்ள மேலும் கீழும் நடக்கிறது தான் ஊர்த்வகதிண்ணு சொல்லிகிட்டு இருந்தார்.. ரொம்ப வருத்தமாக இருந்துச்சு அவர் பேச்சை கேட்க்க.
முன்னாடி வேறொரு சித்தவித்யார்த்தியும் இது மாதிரி தான் சுவாசகதி பண்ணணும், மூக்கு அடைச்சாலும் உடலில் இருக்கிற மயிர்கால் தோறும் சின்ன துளைகள் இருக்கு, அது வழியா பிராணம் உள்ள வரும்ண்ணு சொன்னதை நினைச்சு பார்த்தேன். இப்படி அனேகம் கற்பனைகள். ஏன்னா ஊர்த்வகதியை அனுபவிச்சு பார்க்காத குறை தான் காரணம்.
பிரம்மரந்திரம்ண்ணா ஏதோ தலமண்டைக்குள்ள இருக்கிற ஒரு தூல உறுப்பு தான்ண்ணு நெனச்சுகிட்டு இருக்காங்க. ஏதோ புருவமத்திக்கு மேல நாலு அங்குலத்துல சின்ன ஒரு இடம், அதுல ஒரு ஓட்டை இருக்கு, அந்த ஓட்டை அடைஞ்சிருக்கு கபத்தால என நினைச்சுகிட்டு இருக்காங்க. நாம உடுத்து விடுற சுவாசம் அந்த துளையை போயி தட்டி திறக்கும்ண்ணு கனா காண்கிறாங்க சித்தவித்யார்த்திகள். தலைக்கு உள்ள இருக்கிறது தூல மாமிசம், அழுகி போற சட நிலை உறுப்பு. அதுலயா அழியாத பிரம்மரந்திரம் இருக்குங்கிறத நெனைச்சு பார்க்காம இருக்காங்க.
பிரம்மரந்திரம் என்பது சிறு துளை என்பதில் சந்தேகம் இல்லை, ஆனால் அதன் புரிதல் சற்று வித்யாசமானது. நமது தந்தை நமுக்கு தானமாக தந்த ஒரு துளி ஜீவ அணுவின் வாசலே பிரம்மரந்திரம். அந்த ஜீவ அணுவின் மெல்லிய வாசலில் இருந்து ஜீவ கலையாம் அக்கினி நமது சுவாசம் வழியாக வெளியேறி கொண்டிருக்கிறது.அப்படி வெளியேறாமல் அதை அக்கினியின் இருப்பிடத்தில் வைத்து பாதுகாப்பது தான் ஊர்த்வகதி.இதை தான் ‘சுக்கில துளியுளே சுரோணிதத்தின் வாசலுள் முச்சதுர பெட்டுளே மூலாதார வரையுளே அச்சமற்ற சவ்வுளே அரியரனுமொன்றுமாய் உச்சரிக்கும் மந்திரத்தின் உண்மையே சிவாயமே’ என சிவவாக்கியர் சொல்லுகிறார். உன்னுடைய தந்தை வழங்கிய உயிர்துளியே உனது மூலாதாரம், அது நீ நினைக்கிற பிறப்பு உறுப்பின் அருகாமையில் இருப்பது அல்ல. உச்சரிக்கும் மந்திரத்தின் ஊடாக இயங்கி நிற்பது சுவாசத்தின் மூலமான அக்கினியே. அக்கினி அறுந்து போனால் மரணம். உன் உடல் குளிர்ந்து போகும்.
---- ❣️திரு. ரியான் ஐயா அவர்கள்❣️
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment