Tuesday, November 29, 2022
ஆன்மாக்களே நம்மை சுற்றி மாயை இருக்கிறது
ஆன்மாக்களே நம்மை சுற்றி மாயை இருக்கிறது
அன்பு ஆன்மாக்களே, நம்மை சுற்றி மாயை இருக்கிறது , நாம் மாயையில் சுற்றி உழன்று கொண்டிருக்கிறோம்... ஆனால் எல்லோரும் ஏதாவது சாதனைகள் சொல்லகேட்டு செய்துகொண்டிருக்கிறோம்.... நம்முடைய நம்பிக்கை என்பது அந்த சாதனையினிலே குடி கொண்டிருக்கிறது... அந்த சாதனையானது ஏதோ ஒரு குருவினிடத்தில் நாம் கொண்டிருக்கும் நம்பிக்கையினால் கட்டப்பட்டுள்ளது.
குருவை நம்பும் வரை சாதனை இருக்கும்... இல்லாவிட்டால் சாதனை இருக்காது.... இதுவெல்லாம் மாயாஜாலமே... சாதனை என்பது மாயாஜாலமே... சாதனையே உண்மை என நாம் மாயாஜாலமாக நம்பிகொண்டிருக்கிறோம்... அதனால் நிகழ்வது மாபெரும் விபத்து என்பதை கவனிக்க தவறி விடுகிறோம். அது என்னவென்றால், எந்த ஒரு சாதனையும் அந்த சாதனை செய்பவரை வளர்த்து கொண்டிருக்கும், பல அனுபவங்களை கொடுத்து கொண்டிருக்கும், பல சித்திகளை கொடுத்து கொண்டிருக்கும், பல அற்புத செயல்களை வழங்கி கொண்டிருக்கும்... சாதகன் இதில் கட்டுண்டு மேலும் மேலும் சாதனைகளின் தீவிரத்தை கூட்டி கொண்டிருப்பான்.. அதுவே அவனுடைய லட்சியமாக இரவும் பகலுமாக பரிணமிக்கும்.... ஆனால் அவன் கவனிக்க தவறும் ஒரு விஷயம் என்பது அவன் செய்து கொண்டிருப்பது எல்லாம் மாயையின் கட்டுகளுக்குள்ளாகவே... அவன் தன்னை பிறரை விட நன்றாக சாதனை செய்பவனாக அறிந்து கொள்ளுவான், அவன் பிறரை விட அதிக சித்திகள் உடையவனாக அறிந்து கொள்ளுவான், அவன் பிறரை விட ஆற்றல் மிகுந்தவனாக மாறி இருப்பதை உணர்ந்து கொள்ளுவான்,..
ஆனால் அவன் உணர்ந்து கொள்ளாத ஒன்று அவனிடம் மேருமலை விட அதிக உயரத்திலும், யானையை விட பெரிய பலத்திலும், சிங்கத்தை விட பெரிய ஆற்றலிலும் அவனிடம் வளர்ந்து அழிக்கமுடியாத அசுர பலத்துடன் கோட்டை கட்டி தகர்க்க முடியாதபடி உருக்கொண்டுவிட்ட “அவன்” அப்போது இருப்பான்.....
மாயாஜால உலகினில் தான் மருந்தும் இருக்கிறது , மறைந்து, அதை அறிந்து உணர்ந்து கொள்ளுபவன் அதன் மகத்துவத்தை அறிந்து உலகத்தை பார்ப்பான்.... உலகத்தில் வேரறுத்து விட்டு எங்கும் ஓடி போகமாட்டான். .உலகம் அவனுக்காக, அவனை பக்குவபடுத்தி கொள்ள வழங்கபட்ட மாமருந்து என அறிவான்... அவனில் குடியிருக்கும் "அவனை" தகர்த்து விடக்கூடிய மகா சஞ்சீவினி என்பதை கண்டு கொள்வான்.
அப்படிப்பட்டவன் உலகத்தின் மாயாஜால வித்தையின்ல் சிக்கி கொள்ளாமல் தனித்து இருப்பான் உலகத்தினுள்ளே... அவனுடைய இருப்பு என்பத அலாதியானதாக இருக்கும்... ஏனையவர்கள் சுழன்று கொண்டிருக்கும் போது ,அவன் அறிந்து கொண்டே சுழன்று கொண்டிருப்பான்.... எப்போதும் “தன்” என்பதை உலகத்தில் கரைத்து கொண்டிருப்பான்.... அவனிடம் இருக்கும் இருள் அது மட்டுமெ... அதை இந்த உலகத்தில் கரைத்து கொண்டிருப்பான்...அவன் எப்போதும் தன்னை இழந்து கொண்டிருப்பான்... அவனுக்கு அதுவே சாதனை.... கடைசியில் தன்னையே அறியாது போகும் அவத்தைக்கு போவான்.... தான் என்பது இறந்துபோகும்.
வேற்றுமை உணர்வே “நான்” என்பது... வேற்றுமை அற்று போனால் “நான்”..."நீ” என்பது அற்று போகும்... .அப்படி அந்த வேற்றுமையை அறுத்துவிடுவதே சாதனையின் முதல் படி.... அதனையே வள்ளலார் “ஒருமை” என கூறுவார்.... தயவு வருவதற்க்கு அந்த ஒருமை வர வேண்டும் என்பார்.....”ஒருமை” என்பது இருமையின் மரணமே ஆகும்.
தயவு என்பதே அந்த இருமையை வேரறுக்கும் கோடாயுதம், எப்படியெனில் இதையே வள்ளலார் யோகம் என்றும் ஞானம் என்றும் கூறுவார். பசித்த வேறொருவருக்கு பசித்த போது “தனக்கு” பசித்தது போல உணர்வதே யோகம்.. .அப்படி “அந்த பசித்தவர்” பசியாறி திருப்தியின்பத்தை அனுபவிப்பதை காணும் போது தான் அந்த இன்பத்தை அனுபவிப்பதே ஞானம்.... இப்படி "தானும் அவரும்" ஒருமை அடைகின்றனர்.... இப்படியான யோக,, ஞான சாதனையே வள்ளலார் விட்டு சென்ற சாதனை... அப்படி "தான்" என்பதும் "தனக்கு" என்பதும் அற்று "ஒருமை வளரும்".. .ஒருமை வளர வளர இருமை அகலும்... தயவு வர்த்திக்கும்... இதுவே மாமருந்தாக இருக்கும் மாணிக்கமணி. தயவு வர்த்திக்க அருள் உண்டாகும்
Mathi பகவத் கீதையில் முதல் தொடக்கம் அர்ஜுனனைக் குழப்புகிற விசாதயோகம். அர்ஜுனன் மாபெரும் குழப்பதிற்குள் பயணிக்கிறான். பிறகு ஞானம் வந்தது. தேர்ந்த ஞானிகளின் தத்துவம் ஒரு மனிதனின் மனதைக் குழப்பி விட்டுவிட்டு ஒதுங்க வேண்டும். அதற்கு விடை எந்த மகானிடம் போனாலும் கிடைக்க வாய்ப்பு இல்லை. தனக்குள்ளே உதயமாவது மட்டுமே அதற்கு விடையாகும்.
ஒரு மனிதன் மாபெரும் குழப்பத்திற்குப் போகாதவரை, அவனால் ஞானியாக முடியாது. அந்த மனிதனின் குழப்பம் எல்லை மீறிப்போகும் போது, அதற்காக விடை எங்குமே கிடைக்காதபோது, அந்த வேதனையின் உச்சத்தில் ஆறுதலைத் தேடி தமக்குள்ளே மனம் ஆன்மாவைத் தேடும்போது ஆன்மா உரைக்கும் பதிலே ஆன்மிகம் ஆகும்.
மனிதன் எதற்காகவோ பயப்படுகிறான். குழப்பம் இல்லாத வாழ்வை விரும்புகிறான். இதனால் சிந்திக்கவே விரும்புவது இல்லை. அதனால் வாழ்க்கைப் பயணத்தில் ஏதோ ஒரு கருத்து உள்ளே நுழைகிறது. நுழைந்தவற்றை அப்படியே பாதுகாத்து கிளிப்பிள்ளை பாடம் போல ஒப்பித்துச் சாவதுவரை பதிவேட்டில் உள்ளதை அழியாமல் பாதுகாக்கும் வேலையைச் செய்துவிட்டுச் சாகிறான்.
ஒரு மனிதனை மாபெரும் குழப்பத்தில் ஆழ்த்துவது மகத்தான சாதனை. இதைக் கடவுள் செய்ய முடியும்.. அல்லது கடவுள் தரிசனம் பெற்ற மகான்கள் செய்ய முடியும். மற்றவர் செய்ய முடியாது. செய்யத் துணியவும் மாட்டார்கள். காரணம், தன்னிடம் வந்தவர்கள், தன்னைவிட்டு பிரிந்து போய்விடக் கூடாது. தனக்கு இணையான தகுதி பெறக் கூடாது என்பதிலேயே கவனமாக வாழ்வார்கள்
Mathi ஒரு மனிதனைக் குழம்ப வைப்பது என்பது மிகப் பெரிய காரியம். உதாரணமாக "அர்ஜுனன் தர்ம நீதிப்படி விட்டுக்கொடுப்பவன் கெட்டு போவதில்லை" என முடிவு செய்து போர் புரிவதில்லை என்ற முடிவுக்கு வருகிறான். ஆனால், கண்ணன் விடவில்லை. இந்தப் போரை நீ செய்யாவிட்டால் மாபெரும் பாவத்திற்கு ஆளாவாய் உன்னை உலகமே தூற்றும் என குழப்பி விட்டார்.
இந்தச் சூழ்நிலையில் அர்ஜுனன் கற்ற கல்வி, பெற்ற அனுபாவம் அனைத்துமே பயன்படவில்லை. மாபெரும் குழப்பத்திற்கு செல்கிறான். கடவுள் அந்த குழப்பத்திற்கு தீர்வு சொன்ன பிறகே அர்ஜுனன் யோகியாக மாறினான். ஒருவரை தான் பிடித்திருக்கிற கொள்கையிலிருந்து சற்று விலக்கி வைப்பது சாமன்ய காரியமே இல்லை. எளிதில் விலக மாட்டார்கள் வீம்பு கொண்டு மோத வருவார்களே தவிர தனது நோயின் தீவிரத்தன்மையை உணர மாட்டார்கள்.
இதுவரை எத்தனையோ கோடி ஞானிகள் இந்த மண்ணில் பிறந்திருக்கிறார்கள் ஆனால், யாருடைய கருத்தும் இந்த மண்ணில் வாழும் காட்டு மிராண்டிகளைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. அதே போல யாருடைய தத்துவத்திற்கும் உள்ளும் நமது வாழ்வை நிலை நிறுத்தவும் முடியவில்லை.
பிறப்பால் ஒரு நல்லவர் தமது நல்ல குணத்திற்கு சான்றாக ஒரு திருக்குறளை காரணம் காட்டலாமே தவிர, திருக்குறளை ஒரு மூளையில் திணித்து அவரை திருக்குறளார் ஆக்கா முடியாது.. திருக்குறள் படியே வாழ்வைத் தொடர நமது மனம் சட்டம் இயற்றும். ஆனால், அமுல்படுத்தாது. ஆனால், அந்தத் திருக்குறள் நமக்குள் மாபெரும் குழப்பத்தை உண்டாக்கிவிட்டால் அதற்குத் தீர்வு இறைவனால் போதிக்கப்படும். அதன் பிறகு திருக்குறளின் நெறியோடு நமது வாழ்வியலை ஒத்துப் பார்க்கிற ஒத்துரிமை உண்டாகும்
Mathi குழப்பத்தை எப்படியும் உருவாக்கலாம் "தர்மப்படி வாழ்வேன்" என்ற அர்ஜுனனுக்கு சூழ்ச்சியாகப் போரிட்டு வெல்ல வேண்டும் என்ற குழப்பத்தை கிருஷ்ணன் உண்டாக்கினார். தகாத வாழ்வு வாழ்ந்த அருணகிரியாருக்கு அந்தற்கு மாறாக வாழக் குழப்பம் செய்தார் முருகப்பெருமான். ஒவ்வொரு மனிதனுகுகும் திருப்புமுனை உண்டாக்க ஒரு குழப்பம் தேவை. திருப்பு முனை இல்லாத சிறப்பான வாழ்வும் செதுக்கி வைத்த சிற்பம் போல அடுத்தவருக்கு அழகாகத் தெரியுமே தவிர தனக்கு எந்தப் பயனும் தராது.
எமது கருத்தும் உமக்குள் செரிமானம் ஆகாவிட்டால் பரவாயில்லை குழிதோண்டி புதைத்துவிடவும். இது நோய்க்கு மருந்தே தவிர, இந்த மருந்தைச் சாப்பிட்டு யாரும் நோயாளியாக கூடாது.
நன்றி: தவயோகி ஞானதேவபாரதி சுவாமிகள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment