Wednesday, November 30, 2022
கட்டும் அவிழ்ப்பும்
====கட்டும் அவிழ்ப்பும்====
தன்னை அறிதல் முதற்கடமை, தன்னிலை உணர்தல் முதல் படி.வாழ்வின் ஆதாரம் வாழ்வின் கட்டு, வாழ்வின் சுழற்சி எது எப்படி எவ்விதம் என ஆழமாக புரியாமல் போவதினாலேயே கற்பனையாக கோட்பாடுகள் உருவாக்கபடுகின்றன. இருப்பதை இருப்பின் உள்ளமைப்பின் படி அறிதலே தன்னிலை உணர்தல்.
நீ இரண்டு வஸ்துக்களில் பிறந்தவன் என அறிந்திருக்கிறாய்.அந்த இரண்டு வஸ்துக்களும் இணையும் முன்பு நீ அந்த இரண்டு வஸ்துக்களில் எதனூடு வசித்து வந்தாய் என அறிதலே மெய்திறம்.உன் உடலை பார், ஆணாக இருப்பினும் பெண்ணாக இருப்பினும் உன் உடல் யாருடன் நேரடி தொடர்பில் இருந்திருக்கிறது என காண்பாய். தாயே உன் உடலுக்கு நேரடி தொடர்பு அல்லவா, உன் நாபி அவளிடமே நேரடி தொடர்பு அல்லவா?. உன் தந்தையிடம் உனக்கு தொடர்பு இருந்திருக்கிறது என எந்த ஒரு அடையாளத்தையும் உன்னால் காட்டமுடியுமா என்ன?, முடியாதே, ஏனெனில் நீ தந்தையிடம் நேரடி தொடர்பு அற்றவன். தாயே தந்தைக்கு வழிகாட்டி.
சற்று உற்றுப்பாராய், “நான்..நான்” என சதா கொண்டு திரியும் வஸ்து ஒன்று, “நான்..நான்” என சொல்லாமலேயே சதா உயிர்ப்பாய் இயக்கமுறும் வஸ்து மற்றொன்று. இவற்றை ஆழமாக பகுத்து ஆராய்வாக மனமே.இந்த உடலை கட்டமைத்தது சொல்லப்பெறும் “நான்” எனும் வஸ்துவா, அல்லது உயிர்ப்பான வஸ்துவா? என கேட்டுப்பாரேன் மனமே.அனைத்து நிகழ்வுக்கும் மத்தியில் “நான்” எனும் வஸ்துவே முன்னிட்டு நிற்கின்றது. நான் என்றும் என்னுடைய என்றும் இந்த வஸ்து எல்லா விஷயங்களுக்கும் உரிமை கொண்டாடுகின்றது, உடலுக்கு உரிமை வேண்டுகின்றது, மனதுக்கு உரிமை வேண்டுகின்றது, அனைத்து நிகழ்வுகளுக்கும்,அனைத்து செயல்களுக்கும் உரிமை வேண்டுகின்றது.ஆனால் இந்த “நான்” எனும் வஸ்து உண்மையில் எதனூடும் எந்த ஒரு தொடர்பும் ஒருபோதும் கொண்டதில்லை, அது என்ன அதன் தரம் என்ன, அதன் ரூப குணம் என்ன என ஆராய முற்பட்டால் அது தன்னை மறைத்து இருள் ரூபமாகவே அறிவுக்கு புலப்படாமல் நிற்கின்றது.
அடுத்து நிற்கும் வஸ்து உயிர்ப்பானது, கரு உற்பத்தி முதல் உன் ஊடாக ஊடுருவி நிற்கும் அரும்பொருள், அது எப்போதும் தன்னை தானே அடையாலப்படுத்தி கொள்வதில்லை. அது பாட்டுக்கு அதன் செயலை செவ்வனே செய்துகொண்டிருக்கின்றது. உடலின் ஒவ்வொரு அங்கத்தையும் கட்டமைக்கின்றது, ஒவ்வொரு துளி ரெத்தத்தையும் ஊடுருவி நின்று உருவாக்குகின்றது, தசைகள் தமனிகள், நிறம் வண்ணம் குணம் என அனைத்தையும் உருவாக்கி அரூபமாக விளங்கி நிற்கின்றது, அது யாரிடமும் யோசனை கேட்ப்பதில்லை, உடலின் அளவு எப்படி நிர்ணயம் செய்யவேண்டும் என அது எவரிடமும் யோசனை கேட்பதில்லை, ரெத்தத்தை எப்படி உருவாக்க வேண்டும் என தயங்கி நிற்பதில்லை, கால்கை மூட்டிகளில் எந்த விதமான பொருட்களை எந்த விகிதத்தில் எப்படி உருவாக்க வேண்டும் என அது எவரிடமும் யோசனைக்கு நிற்பதில்லை, எல்லாவித உள்ளுறுப்புகலையும் எப்படி படைப்பது, எப்படி சீரமைப்பது எப்படி நடைமுறைபடுத்துவது என அனைத்தும் அதற்கு தெரியும். ஆனால் எப்போதுமே “நான்” இதை செய்கின்றேன், நான் தான் இதற்கு அதிகாரி, நானே இந்த உடலுக்கும் இதன் உள்ளுறை செயல் செயல்பாடுகளுக்கும் பூரண அச்சுக்கோர்வை என அது சொல்லி திரிவதில்லை, நினைப்பது கூட இல்லை. ஏனெனில் அதற்கு மனம் இல்லை.
இதற்கு எந்த சம்பந்தமும் இல்லாத மனமோ, இவை அனைத்தையும் நானே நடத்துகிறேன், நானே இங்கு அதிகாரி ,நானே இந்த மனுத்தூலத்தின் மையப்புள்ளி என அபிமானித்து செயல்களில் மூழ்கி, செயல் பயன்களையும் துய்க்கின்றது.இவ்வண்ணம் இந்த வாழ்நாள் முழுதும் “நான்” முன்னிட்டே வாழ்வு அமைகின்றது, நான் செயல் புரிகிறேன், நான் அனுபவிக்கிறேன், நான் விளைவுகளை சுமக்கிறேன் என வாழ்வு நீண்டு போகின்றது.இவ்வண்ணம் “நான்” எனும் ஆன்மா உள்ளுறையும் “ஜீவன்” எனும் உயிர்ப்பை அறியாமல் மாண்டுபோகின்றது.மூடமாகிய ஆன்மா ஜீவன் எனும் வஸ்து தன்னிலிருந்தே பிறந்து தன்னிலே நிலை நிற்கின்றது எனும் கற்பனை அபிப்பிராயத்தால் தன்னை இழக்கின்றது.ஜீவாஅன்ம தன்னிலை விளக்கம் அறிய அறிய தன்முனைப்பு கெடும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment