Tuesday, November 8, 2022

தூக்கமும் குண்டலினியும்

 =====தூக்கமும் குண்டலினியும்=====


”வாங்கும் கலையும் ஒன்றாகும் வழங்கும் கலையும் பன்னிரண்டில்-தூங்கி கழியும் நாலையும் தான் சுழற்றிபிடித்தால் குருவாகும்,“ என்பதி சித்தர் பரிபாஷை. இவ்வண்ணம் தூங்கி இருப்பதால் நான்கு கலைகள் பாழாகும் என்பது தெரிகிறது, அந்த நாலையும் தக்க ஆசானிடம் கேட்டு தெளிவு பெறலாம்.

குண்டலினி என்பதும் சித்தர்களின் பரிபாஷை, அது மூன்றரை சுற்றாக சுருண்டு கிடந்து தூங்குவதாக சொல்லி இருப்பார்கள். மூன்றரை சுற்று என்பது ஜாக்கிரதை சொப்பனம் சுழுத்தி துரியம் எனப்படும்.குண்டலினீ எனும் பாம்பானது தன்னுடைய வாலையே தன் வாய்க்குள் அடக்கிகொண்டு தூங்குமாம்..அதாவது துரியம் என்பது ஜாக்கிரதைக்குள் இருக்கும்.அதை அறிந்து கொள்ள முதலில் சுழுத்தி எனும் தூக்கத்தை ஜாக்கிரதை எனும் வாயிலிருந்து வெளியே எடுக்கவேண்டும், அதன் பின்னால் துரியமும் வெளி வரும். இதனையே “தூங்காமல் தூங்கியே காக்கும் போது “ ஆதி என்ற பராபரையும் பரனும் ஒன்றாய் அண்ணாக்கின் வட்டத்துள் ஆகும் பாரே என சித்தர்கள் சொல்லுவார்கள்.

ஒருவன் இரண்டரை நாழிகை தூங்க பழக்கம் செய்வானாகில் அவன் ஆயிரம் வருடங்கள் ஜீவித்திருப்பான் என வள்ளலார் சொல்லுவதன் மர்ம்மமும் இது தான்.கலை நாலு போகிறதை எட்டில் சேரு என அகத்தியர் சொல்லுவதும் இந்த தூக்கத்தை ஜாக்கிரதையுடன் சேர்க்கும் விதமேயாம்.யோக கிரந்தங்களில் குண்டலினி தூங்கி கிடப்பதாக மறையாக சொல்லி இருப்பது என்னவென்றால் நம்முடைய தூக்கத்தையே ஆகும்.நம்முடைய இந்த நான்கு அவத்தைகளுமே குண்டலினி எனப்படுவது, இதன் விரிவுகளை காகபுசுண்டர் உபநிடதம் போன்ற நூல்களில் விளக்கமாக காணலாம்.

ஒருவன் ஆன்மீக சாதனைகளில் குரு காட்டிய வழியில் செல்லவேண்டுமெனில் அவன் முதலில் பழக வேண்டியது என்பது தூக்கத்தை களைவதுவே ஆகும்...தூக்கத்தை களையாதவன் ஒருவன் குண்டலினியை எழுப்பிவிட்டென் என சொல்வானாகில் அவன் பொய்யாய் இருக்கிறான் என கண்டுகொள்ளுங்கள்.ஞானிகளுக்கு தூக்கம் இருக்காது, தூங்குகின்றவன் ஞானியாகவும் இருக்கமுடியாது. இது அடையாளம்.

தூக்கம் மெல்ல மெல்ல கலையும் போது உணர்வு நிலைக்கு ஒருவன் வருகிறான், தூக்கத்தை விடும் போது ஆன்மீகம் ஆரம்பமாகிறது, அவனுடைய சாதனை இன்பம் காண தொடங்கிகிறது, அவனுக்கு விழிப்பு நிலை அதிகரிக்க தொடங்குகிறது, அவன் வெற்றியை நோக்கி பயணம் ஆரம்பிக்கிறான். இதனாலேயே எல்லா ஆசான்மார்களும் ஞானிகளும் தூக்கத்தை விட சொல்லுகிறார்கள். நன்றி, வணக்கம்

No comments:

Post a Comment