=திருவருட்பா தமிழ்= காஞ்சி தமிழ் விளக்க முரண்பாடு.=
வள்ளலார் புகழ் தமிழகமெங்கும் பேசப்பட்ட காலத்தில்
இந்தியாவில் உள்ள ஆன்மீக சிந்தனையாளர்கள் அனைவரும்
வள்ளலாரிடம் வந்து தெளிவுபெற்று செல்வது வழக்கமாக
கொண்டு இருந்தார்கள் .ஒருமுறை அப்போதைய வடநாட்டுப் பெரியோர்களும்,அவர்களுடன் காஞ்சி பெரியார் சங்கராச்சாரியாரும் வந்து இருந்தார்கள் அப்போது வள்ளலாரை சந்திக்க அனைவரும்விரும்பினார்கள்.தங்களுக்கு தெரிந்த அன்பர் ஒருவர் மூலம் அவரிடம் இதுபற்றிய செய்தியைக் கூறினார்கள்.அவர் வள்ளலாரின் தலைமைச்சீடர் தொழுவூர் வேலாயுதம் அவர்களிடம் விபரத்தைக்கூறினார்.
செய்தியைக்கேள்விப்பட்டதும்,வள்ளலாரும்,சங்கராச்சாரியாரும் சந்திக்க ஒப்புக்கொண்டார்கள்.உடனே வேலாயுதம்
சந்திக்க ஏற்பாடு செய்தார்.சங்கராச்சாரியார் வள்ளலாரை வரவேற்று அமரச்செய்தார் ,பின்பு சமஸ்கிருத மொழிகளில் சில வினாக்கள் எழுப்பி விளக்கங்கள் கேட்டார்.வள்ளலார் அதற்குத் தகுந்த விளக்கங்களை தந்தார்.
தொடர்ந்து வள்ளலாரும் சங்கராச்சாரியாரும் ,நீண்ட நேரம்
பல,பல உலக விஷயங்களைப்பற்றி விவாதம் செய்து
வந்தார்கள்.அப்போது சங்கராச்சாரியார் சமஸ்கிருத மொழியின் உயர்வைப்போற்றி கூறியதோடு ,அனைத்து மொழிகளுக்கும் தாயாக விளங்குவது சமஸ்கிருத மொழிதான் என்றார் .உடனே சற்றும் தாமதிக்காமல்,சமஸ்கிருதம் தாய் மொழி என்றால்,தமிழ் தந்தை மொழி என்றார் .அத்துடன் தமிழின் சிறப்பையும் ,தமிழ் எனற சொல்லின் மெய்ப்பொருளையும்விளக்கமாக எடுத்து உரைத்தார்
தமிழ் என்பது ஒரு சாதாரண வெறும் சொல் அல்ல. அது
பஞ்சாட்சர மந்திரச் சொல். பஞ்சாட்சரம் என்றால், ஐந்து
அட்சரங்களை, அதாவது ஐந்து எழுத்துக்களை உடையது.
தமிழ் என்ற சொல்லில் த்-அ-ம்-இ-ழ் என்ற ஐந்து எழுத்துக்கள்
இருக்கின்றன. இதனால்தான் "தமிழ்' ஒரு பஞ்சாட்சரம் என்று
சொல்கிறோம். த், ம், ழ் என்ற மூன்று எழுத்துக்களும்
மெய்யெழுத்துகள். அ, இ என்ற இரண்டு எழுத்துக்களும் உயிர்
எழுத்துக்கள்.
"ஓம்' என்ற பஞ்சாட்சரம் இரண்டு எழுத்துக்களைக்
கொண்டதுபோலத் தோன்றினாலும், அது உண்மையில் ஐந்து
எழுத்துக்களை உடையது. இதில் உள்ள ஐந்து எழுத்துக்கள்
என்னென்ன?உ-அ-ம்-ஒளி-ஒலி என்ற ஐந்து எழுத்துக்களால் ஆனது "ஓம்' என்ற பஞ்சாட்சர மந்திரம்.
"அட்சரம்' என்ற சமஸ்கிருதச் சொல்லுக்கு "அழியாதது' என்று பொருள். ஓர் எழுத்தின் வரி வடிவம் மாறக்கூடியது. ஆனால், அந்த எழுத்தின் ஒலி வடிவமோ காலத்தால் மாறாதது-அழியாதது-நிலைபெற்றது. அ-உ-ம் என்ற எழுத்துக்களைப்போல ஒளியும் ஒலியும் எழுத்துக்களா? என்ற சந்தேகம் எழலாம். வரிவடிவத்தில் எழுதுவது மட்டும் எழுத்தல்ல. ஒலியாகவோ ஒளியாகவோ ஓங்கு எழுவதும் எழுத்துத்தான். இங்கு எழும் ஒளியும் ஒலியும் அழியாதவை; எல்லை காணாதவை; முடிவற்றவை. முடிவற்ற இந்த ஒளியும் ஒலியும் ஓங்கி எழும் ஆற்றல் உள்ளதால் அவையும் அட்சரங்களாய் அழியாத எழுத்துக்களாக ஆகின்றன.
இந்த "ஓம்' என்ற பஞ்சாட்சரத்தில் அந்த இரண்டு எழுத்துக்களும் சேர்ந்து எண்ணப்படுகின்றன. "இ' என்ற உயிரெழுத்து "அ' என்ற உயிரெழுத்தை எப்போதும் விட்டுப் பிரியாமல் இருப்பது. "அ' என்று வாயைத் திறந்து உச்சரிக்கும்போதுதான் "ஆ' என்ற உயிரெழுத்து எழுகிறது. "அ' என்று வாயைத் திறந்த நிலையிலேயே "இ' என்று பல்லைக்காட்டி உச்சரித்தால் "இ' என்ற உயிரெழுத்தும் எழுந்து ஒலிக்கும். எனவே, "அ' என்ற உயிரெழுத்தும் "இ' என்ற உயிரெழுத்தும் ஒன்றைவிட்டு ஒன்று பிரியாதவை.
"அ' என்ற உயிரெழுத்து கடவுளின் செயலைக் குறிக்கும். "இ' என்ற உயிரெழுத்து உயிர்களின் செயலைக் குறிக்கும். உயிர்கள் எப்போதும் இறைவனுடன் இணைந்தே செயல்படுகின்றன. அதுபோல் "இ' என்ற எழுத்தும் "அ' என்ற எழுத்துடன் எப்போதும் இணைந்தே செயல்படும்.
"தமிழ்' என்ற சொல்லில் உள்ள மூன்று எழுத்துக்களாகிய த், ம், ழ் என்பவை அ, இ முதலிய உயிரெழுத்துக்களுக்கு உடலைப்போல இருக்கின்றன. "மெய்' என்றால் உடல் என்று பொருள். "உயிர் விளக்கம்' பெறுவதற்கு கடவுள் ஆதாரமாக இருக்கிறார். அதைப்போல "உடல் விளக்கம்' பெறுவதற்கு உயிர் ஆதாரமாக இருக்கின்றது. மெய்யெழுத்துக்கள் விளக்கம் பெறுவதற்கு உயிரெழுத்துக்கள் ஆதாரமாகின்றன. அதாவது, மெய்யெழுத்துக்களை உயிரெழுத்துக்களின் துணையின்றி உச்சரிக்க முடியவே முடியாது. மேலே சொன்ன மூன்று மெய்யெழுத்துக்களுக்கும் விரிவான விளக்கத்தைப் பார்க்கலாம்.
"த்' என்பது 7-வது மெய்யெழுத்து
"ம்' என்பது 10-வது மெய்யெழுத்து
"ழ்' என்பது 15-வது மெய்யெழுத்து
"தமிழ்' என்ற சொல்லில் உள்ள "த' என்ற உயிர்மெய்யெழுத்து "த், அ' என்ற இரண்டு எழுத்துக்களும் இணைந்து சேர்வதால் உருவாகிறது. "த்' என்ற மெய்யெழுத்து பதினெட்டு மெய்யெழுத்துக்களின் வரிசையில் ஏழாவதாக அமைந்திருக்கின்றது. தத்துவ உருவம் முதலிய தச காரியங்களில் அதாவது, பத்துக் கட்டளைகளில் இது ஏழாவதாக உள்ள "சிவ உருவம்' என்ற கட்டளையாகும்.
தத்துவ உருவம், தத்துவ தரிசனம், தத்துவசுத்தி, ஆன்ம உருவம், ஆன்ம தரிசனம், ஆன்மசுத்தி, சிவஉருவம், சிவதரிசனம், சிவயோகம், சிவபோகம் ஆகியவை பத்துக் கட்டளைகள். இவை உலகம், உயிர், இறைவன் ஆகிய இவற்றின் இயற்கை உண்மையை விளக்கும் கட்டளைகளாகும்.
"க்' முதல் "ன்' வரையில் உள்ள பதினெட்டு மெய்யெழுத்து வரிசையில் ஏழாவதாக இருக்கும் "த்' என்பது, இயற்கை உண்மையான "சிவ' உருவத்தைக் குறிக்கும். "த்' என்ற மெய்யெழுத்துடன் சேர்ந்திருக்கும் "அ' என்ற உயிரெழுத்து எங்கும் நிறைந்திருக்கும் அறிவு விளக்கத்தைத் தரும் "ஓம்' என்ற பஞ்சாட்சரத்தின் உட்பொருளை எடுத்துக்காட்டும் முதல் எழுத்தாகும்.
"அ' முதல் "ஒü' வரையில் உள்ள பன்னிரெண்டு உயிரெழுத்துக்களின் வரிசையில் முதல் எழுத்து "அ' என்பது. இந்த "அ' என்ற எழுத்து மற்ற பதினோரு உயிர் எழுத்துக்களுக்கும் மூலகாரணமாய் உள்ளது. இது, பிரமன், விஷ்ணு, உருத்திரன், மகேஸ்வரன், சதாசிவன், ஒளி, ஒலி, பரசிவம் வரையில் உள்ள நவநிலைகளுக்கும் மூலகாரணமாயுள்ள முழுமுதற் பொருளான இறைவனின் இயற்கை உண்மை உருவத்தைச் சுட்டிக் காட்டுவதாகும்.
எனவே, சிவ உருவம் என்ற தகர ஆகாசத்தில் சுத்த சிவமான அருட்ஜோதி இணைந்துள்ளது. இது பூரண இன்ப வடிவமாக இருக்கும் இறைவனைச் சுட்டிக்காட்டுவதாகும்.
(தகராகாசம் என்றால் என்ன? "த' என்ற எழுத்தை எண்ணாக எழுதினால் அதற்கு ஆயிரம் என்று பொருள். ஆயிரம் இதழ்கள் உள்ள தாமரையுடன் ஒப்பிட்டு நமது மூளையைக் குறித்துப் பேசுவார்கள் சித்தர்கள். மூளைதான் அறிவு விளக்கம் தரும் இடம். இந்த இடத்தைத்தான் தகராகாசம் (தகர ஆகாசம்) என்று குறிப்பிடுகிறார் வள்ளலார்)
ஏழாவது கட்டளையாகிய சிவ உருவத்தைக் காண்பதற்கு எங்கும் எதிலும் இறைவன் கலந்து இருக்கிறான் என்ற உண்மையை உணர்ந்தவர்களுக்குத்தான் முடியும் என்பதை இந்த "த' என்ற உயிர்மெய்யெழுத்து குறிக்கிறது.
"மி' என்ற உயிர்மெய்யெழுத்து - ம், இ என்ற இரண்டு எழுத்துக்களும் சேர்வதால் உருவாகிறது. கடவுள் அனுபவம் பெற்றவர்களுக்கு ஒளி அளிக்கும் வடிவமாகவும், எப்போதும் இன்பம் தரும் "ஓம்' என்ற மந்திரச் சொல்லில் ஒரு மந்திர எழுத்தாகவும் "ம்' என்ற மெய்யெழுத்து இருக்கிறது. கடவுள் அனுபவம் பெறாதவர்களுக்கோ "ம்' என்ற மெய்யெழுத்து தனித்து இருந்து இருள் வடிவத்துடன் தோன்றி துன்பத்தைத் தருகிறது.
ஊழிக்காலத்தின் முடிவில் அதாவது, உலகமே மறைந்து போகும் காலத்தின் முடிவில் "ம்' என்ற இந்த மெய்யெழுத்து அழிக்கும் சக்தி உடைய "ஓம்' என்ற மந்திரச் சொல்லாக, படைத்தல் முதலிய ஐந்தொழிலைப் பெற்று உலகம் உயிர் பெற்று எழும்போது "ம்' என்ற இந்த மெய்யெழுத்து "சிவபோகம், என்ற பத்தாவது இறை உண்மைக் கட்டளையைப் பெற்று நிலைபெறுகிறது.
"இ' என்ற உயிரெழுத்து, உயிரெழுத்து வரிசையில் மூன்றாவதாக இருக்கிறது. இது உயிர்கள் மூன்று வகைப்படுவன என்பதைத் தெளிவாகச் சுட்டிக் காட்டுகிறது. பொதுமக்கள், முயற்சியுடைய மக்கள், தெளிவுபெற்ற மக்கள் என்று மக்கள் மூன்று வகையாக இருக்கின்றனர். "இ' என்ற உயிரெழுத்து, உயிரெழுத்து வரிசையில் மூன்றாவதாக இருப்பதால், மக்களில் முதல் இருவகை மக்களையும் கடந்து தெளிவுபெற்ற மக்களாகிய மூன்றாவது பிரிவினரை "இ' என்ற உயிரெழுத்துக் குறிப்பிடுகிறது.
உயிரெழுத்து வகையில் மூன்றாவதாக உள்ள "இ' என்ற இந்த எழுத்து, மெய்யெழுத்து வரிசையில் பத்தாவதாக உள்ள "ம்' என்ற மெய்யெழுத்துடன் சேர்ந்து "மி' என்ற உயிர்மெய் எழுத்தாகிறது. பத்தாவது கட்டளையாகிய சிவபோகம் பெறுவதற்கு தெளிவுபெற்ற மக்கள் எல்லாருக்கும் உரிமை உண்டு என்பதை இந்த "மி' என்ற உயிரெழுத்து குறிப்பிடுகிறது.
"ழ்' என்ற மெய்யெழுத்து, மெய்யெழுத்து வரிசையில் பதினைந்தாவதாக இருக்கிறது. இது வளர்பிறையின் நிறைவைக் காட்டும் பெüர்ணமியை அதாவது, முழுநிலவைக் குறிக்கிறது. நமது பரதகண்டம் சிவபோக பூமி.
இதில் உள்ள நாடுகள் ஐம்பத்தாறு என்று பெüராணிகத் தத்துவம் கூறும். அதில் தமிழ் நாடும் ஒன்று. தமிழ்நாட்டைத் தவிர மற்ற ஐம்பத்தைந்து நாடுகளில் உள்ள மொழிக்கு இல்லாத தனிச்சிறப்பு "தமிழ்' எழுத்துக்கே உரிய "ழ' என்ற எழுத்துக்கு உண்டு.
பதினெட்டு மொழிகள் என்றும்; செந்தமிழ், கொடுந்தமிழ் என்றும்; இயல், இசை, நாடகம் என்றும்; இருக்கு, யஜுர், சாமம் என்றும் கூறுகின்ற மொழிகளும், சாத்திரங்களும் தருகின்ற அனுபவத்தை எளிதில் பெற்று அனுபவிப்பதற்கு வழிகாட்டும் மொழி தமிழ் என்பதை "தமிழ்' என்ற சொல்லில் உள்ள மூன்றாவது எழுத்தான "ழ்' எழுத்து குறிக்கிறது.
திருமூலர், ஞானசம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் முதலிய ஞானியர்கள் தமிழில் இயற்றியுள்ள தோத்திரங்களான திருமந்திரம், தேவாரம், திருவாசகம் ஆகியவை கடவுள் ரகசியத்தை மிக எளிதாக மக்கள் உணர்வதற்கு வழி காட்டுகின்றன. சமஸ்கிருதமோ பலநாள் பல வகையில் முயன்று அரிதில் அழியக் கூடியது. பலநாள் மிக உழைத்து ஓதினாலும் சமஸ்கிருதம் பாடம் (மனப்பாடம்) ஆவது மிகவும் கடினமாகும்.
அத்தகைய சமஸ்கிருதம், மராட்டியம், ஆந்திரம் போன்ற மொழிகளைப்போல் ஆகாமல், பெரும்பாலும் கற்பதற்கு எண் அளவு சுருக்கமாகவும், ஒளி லேசாகவும், கூட்டு என்னும் சந்தி மிக சுலபமாகவும் உள்ளது தமிழ்.
எந்த மொழிகளின் ஒலிகளையும் தன்னுள் அடக்கி ஆளுகின்ற ஆண் தன்மையை உடையது தமிழ். தனக்கென்றே சிறப்பாக அமைந்த ழ், ற், ன் என்னும் முடி, நடு, அடிச் சிறப்பியல் எழுத்துக்களையும் கொண்டது தமிழ். அவைகளில் முடிநிலை எழுத்தாகிய "ழ்' இன்ப அனுபவ சுத்தமெüனம் கடந்ததை சுட்டறச் சுட்டுவது. இயற்கை உண்மை தனித் தலைமையின் பெருமை சிறப்பியலில் ஒலியையும் உடையது.
தமிழ் என்னும் இயற்கை உண்மைச் சிறப்பியல் மொழிக்கு த்-அ-ம்-இ-ழ் என்ற ஐந்து அலகு நிலையும், உயிர், உடல் என்று இருவகைக் கலைநிலையும், த், ம், ழ் என்ற மூன்று மெய் நிலையும் அமைந்துள்ளன. அருள் ஆற்றல் நிரம்பிய ஞானிகளால் சுத்த சித்தாந்த முறைப்படி கடவுளின் கட்டளையால் முறைப்படி கற்பிக்கப்பட்டது தமிழ்.
எந்த மொழிகளுக்கும் தந்தை மொழி என்று ஆன்றோர்களால் போற்றிக் கொண்டாடப்பட்டது தமிழ். இடைவிடாமல் திருநடம் புரியும் இறைவனின் இன்பத்தை எளிதில் அடையும்படி செய்யும் அபூர்வ ஆற்றல் பெற்றது தமிழ்.
இதுவரையில் தமிழ் என்ற சொல்லுக்கு நான் சொன்ன விளக்கங்கள் சுத்த சித்தாந்த முப்பதவுரையாகும். மருட்சி தரும் இயற்கை ஆணவ இருளை தமிழ் அதற்கென்றே சிறப்பாக உள்ள ஆற்றலால் அருள் ஒலியாக மாற்றுகிறது.
"தமிழ்' என்னும் சொல்லில் அமைந்திருக்கும் அறிவுக் கலையைக்கொண்டு உயிர் தூய்மையைப் பெற்று உயர்கிறது. அது அருட்பெருஞ்ஜோதி என்னும் சுத்த சிவ ஆனந்த நிறைவைப் பெறுகிறது. வானவெளியில் நடமிடும் அருட்பெருஞ்ஜோதியையும், ஞானவெளியில் நடமிடும் அருட்பெருஞ்ஜோதியையும் தமிழில் காணலாம். சொல்லுக்கு அடங்காமல் சுத்த மெüனமாக இருந்து அனுபவிக்கும் இயற்கை உண்மைதான் தமிழ்.
தமிழ் என்ற சொல்லுக்கு இதுவரை கூறியது சுத்த சித்தாந்த முப்பதவுரைக்குப் பொழிப்புரை. தமிழ் என்ற சொல்லுக்குக் கருத்துரை, தமிழ் மொழிதான் மிகமிக எளிதாக சுத்த சிவ அனுபவத்தைக் கொடுக்கும் ஆற்றலை உடையது.
இங்கு கூறப்பட்டுள்ள விளக்கம் திருவருட்பா நூலின் விளக்கத்திற்க்கு முரண்பட்டிருப்பதை காணலாம். இதை புரிந்து கொண்டவர்கள் மட்டுமே சன்மார்க்க கொடியின் ரகசியத்தை தெரிந்து கொள்வர் நிச்சயம்.
No comments:
Post a Comment