Thursday, November 10, 2022

அருட்பெருஞ்ஞோதியர் அமிதாபர் சூத்திரம்”

 ======”””அருட்பெருஞ்ஞோதியர் அமிதாபர் சூத்திரம்”””=======


இவ்வண்ணம் நான் கேள்வியுற்றேன்….

அன்றொரு நாள் புத்தர்பிரான் ஜடாவனத்தில் தங்கியிருந்த
சமயம்,ஆனந்தபிண்டிகாவின் பூங்காவினில்,சுற்றிலும் பனிரெண்டாயிரத்து
ஐந்நூறு பிக்குகளால் சூழப்பெற்று….

அனைவரும் சிறந்த மேலாம் பதம், புகழ் பெற்ற அர்ஹத் நிலை கொண்டோர் சபையினர்….

அவர்களில்முக்கியமானவர்களாகசாரிபுத்தர்,மஹாமத்கல்யானர்,மஹாகஸ்யபர்,
மஹாகட்த்யனர்,மஹாகவுஸ்திலர்,ரேவதர்,சுத்திபந்தகேனர்,நந்தர்,ஆனந்தர்,ராகுலர்,
கவாம்படீயர்,பிண்ட்டோலபரத்வாஜர்,கலோதயினர்,மஹாகப்பினர்,வக்குலர்,
அனிருத்தர், மற்றும் சிறந்த சிறாவகர்கள் போன்றோர்….

அவர்களுடன் போதிசத்துவர் மஹாசத்வர்கள் தர்ம இளவரசு மஞ்ஞுஸ்ரீ,அஜிதா போதிசத்துவர், கந்தஹஸ்தின போதிசத்வர்,நித்யோத்யுக்த போதிசத்வர், போன்றோர்களும்….

சக்ர தேவனாமிந்திரர் போன்ற எண்ணற்ற தேவர் குழாம் புடைசூழ நிற்க…

அந்நேரம்,.. புத்தர்பிரான் திருவாய்மலர்ந்து சாரிபுத்தரை நோக்கி மொழிந்தருளினார்…..

இங்கிருந்து பிரயாணபட்டால் மேற்கே பத்துநூறுகோடி புத்த உலகங்களுக்கு அப்பால், ஒரு உலகம் ”சுகவதி” எனும் பெயரால் நிலைகொண்டுள்ளது,அதற்க்கு தலைவராக அமர்ந்திருந்து தர்மத்தை போதிக்கும் புத்தருக்கு அமிதாபர் என பெயராக இருக்கின்றது…

அதற்க்கு ஏன் சுகவதி ஏனும் பெயர் வழங்கபெற்றிருக்கின்றது என சாரி புத்தர் வினவினார்..

சாரிபுத்ரா…இந்த உலகினில் வாழ்பவர்கள் மேலாம் பதம் பெற்ற பெரும் பேறு கொண்ட ஞானியர் பெருமக்களாவர்.அவர்களுக்கு பூவுலகின் நியதிகளாகிய துன்பங்கள் யாவும் அறவே இல்லை,சதா ஆனந்தம் மட்டுமே அவர்களின் இயல்பு,ஆகையினால் இவ்வுலகு சுகவதி என அழைக்கபடுகிறது…

மட்டுமல்ல சாரிபுத்ரா,..இந்த உலகு ஏழு வேலிகளால் சுற்றப்பெற்று,ஏழு திரைகளால் சூழப்பெற்று,ஏழு அடுக்கு தேவமரங்களால் காக்கபட்டுள்ளது,இவை அனைத்தும் நான்கு விதமான புனித அலங்கார ஆபரண ரத்தினங்களால் அலங்கரிக்கபட்டுள்ளது மேற்சொன்ன சுகவதி…

மேலும் சாரிபுத்ரா கேள்,….சுகவதியில் அமைந்திருக்கும் நீரோடைகள் குளங்கள் போன்றவை ஏழு அபூர்வ ரெத்தின அலங்காரங்கள் கொண்டவையும், அதன் நீரானது எட்டு வித விசித்திர குணங்களை கொண்டவையும்,அவற்றின் கரைகள் சுவர்ணத்தால் அமையபெற்றதுமாகும்…

அவற்றின் பக்கவாட்டு படிக்கட்டுகள் சுவர்ணத்தாலும் வெள்ளியாலும் முத்து மற்றும் பவிழத்தாலும் அமையப்பெற்றதுவாக திகழ்கின்றது…

அதற்க்கு மேல் ஒரு தம்பமேடை பொன் வெள்ளி முத்து பவிழம் போன்றவற்றாலும் ரெத்தினங்களால் மெருகூட்ட அழகுற அணிவிக்கபெற்று திகழ்கின்றது…

நீரோடைகளில் மலர்ந்திருக்கும் தாமரை பூக்களோ மிகப்பெரியவையும் பச்சை மஞ்சள் சிகப்பு தூவெள்ளை கிரணங்களை விசிரிம்பிக்கின்றவையும் தேவ உலக நறுமணங்களை கொண்டவையுமாக மலர்ந்திருக்கின்றன..இவ்வண்ணமான திறன்களாக சுகவதி ஒப்பற்ற தன்மையுடன் கூடி திகழ்கின்றது

.இதுமட்டுமல்ல சாரி புத்ரா, சுகவதி சதா தேவ சங்கீதங்களையும் இன்னிசைகளையும் பொழிந்துகொண்டிருக்கின்ற நிலமோ பொன் துகள்களாக இருக்கின்றது. சுகவதியில் ஆறு பருவங்களும் இரவும் பகலும் வானம் மந்தாரவ புஷ்ப்பங்களை தான் பொழிந்து கொண்டிருக்கின்ரது…

சுகவதியின் உதயவேளையில் அனேகவித உன்னத நறுமலர்கள் பூத்து தேவசெளரப்யம் வர்ஷிக்கின்றன,அவைகள் பத்துநூறுகோடி புத்தர்களும் விளங்கும் திசைகளுக்கு அஞ்சலி செலுத்தியவண்ணம் குலுங்கி நிற்கின்றன…

இவ்வண்ணம் சாரிபுத்ரா சுகவதி ரம்மியமாக திகழ்கின்றது….

மேலும் சாரிபுத்ரா,..அனேக நிறங்களுடன் அழகுறும் பறவைகளும்,அன்னங்களும், மயிலினங்களும்,பஞ்சவர்ணகிளிகளும், சிறுகிளிகளும் புள்ளினங்களும் சிறகடித்து பறந்து மகிழ்கின்றன..

அங்ஙனம் மகிழ்ந்திருக்கும் பறவையினங்கள் கூட அனேக விதம் மகிழ்ச்சி கூச்சல்கள் சொல்லிதிரிந்தவண்ணம் ஆறு பருவங்களிலும் இரவும் பகலும் மிக உன்னதமான தர்மத்தின் ஐந்து மூலங்களையும் ஏழு நிலைகளையும் ஐந்து திறன்களையும் உள்ளடக்கிய எண்படி படிவத்தினை பாடி திரிகின்றன…

இதை சதா கேட்டுகொண்டு உலாவி வரும் தேவர்குழாங்கள் புத்தம் எனும் சிந்தையில் ஊன்றியவர்கள், தர்மம் எனும் சிந்தையில் ஊன்றியவர்கள், சங்கம் எனும் சிந்தையில் ஊன்றியவர்கள்…

சாரிபுத்தா,இந்த பறவையினங்களுக்கோ ,இந்த சுகவதி எனும் புத்த உலகத்திலோ மூன்று வித பாவ கர்ம வினை தொகுப்புகளோ,அவற்றின் பெயர்கள் கூட அண்டாது..

இந்த பறவையினங்களை அமிதாப புத்தா தன்னுடைய வல்லமையால் சிரிஷ்ட்டித்து தர்மத்தின் ஓசையை விளம்பரம் பண்ணும் நோக்கில் நானா திசைகளிலும் பறக்க வைத்துள்ளார்..

சாரிபுத்ரா, இந்த புத்த உலகத்தில் வீசும் மெல்லிய தென்றலானது வஜ்ரங்களால் அலங்கரிக்கபட்ட மரங்களிலும் வேலிகளிலும் வீசும்போது மெல்லிசையானது நூறுநூறாயிரம்கோடி ஸ்வர நூலிழைகளாக ஆனந்தம் விரிக்கின்றன…..

இந்த ஸ்வர சங்கீத இன்னிசையின் இனிமையினால் அதை செவியுறும் மனங்கள் இயற்கையாகவே புத்த பதத்தில் ஊன்றபடுகின்றன,தம்ம பதத்தில் ஊன்றுகின்றன, சங்க பதத்தில் ஊன்றுகின்றன.இவ்வண்ணம் சாரிபுத்ரா சுகவதி மேன்மையினாலும் திறன்களினாலும் மேம்பட்டு திகழ்கின்றது…

சாரிபுத்ரா உன் யோசனையில் இருந்து மீள்வாயாக..ஏன் சுகவதியின் தலைவர் அமிதாபர் என அழைக்கபடுகின்றார் என்பதையும் அறிவாயாக..

சாரிபுத்ரா, அமிதாபரின் பிரபையானது அளவிடதற்கரிதானதும்,சோபையானது பத்து திசைகளையும் மறைப்பற்று விளக்குவதாயும் பெருஞ்ஜோதியாக பிரகாசிக்கின்றதாகையால் அமிதாப என அழைக்கபடுகின்றார்..

மேலும் அமிதாபரின் ஆயுளானது எண்ணிலடங்கா காலம்,அனந்தங்கோடி கற்பாந்தங்கள் ஆயினும் முடிவுறா தன்மையதும் கொண்டு திகழ்கின்றதுவாயும் திகழ்கின்ற படியால் அமிதாயுஸ் என அழைக்கபடும் இவரின் வயது பத்து பிரமாண்டகோடி கற்பாந்தம் ஆயிருக்கின்றது.

மட்டுமல்ல சாரிபுத்ரா, இவரின் சீடர்கள் என எண்ணிலடங்கா தொகையில் அர்ஹத் நிலை கொண்டோரும்,பேரறிவு கொண்டசிராவஹர்களும் போதிசத்துவர்களும் புடைசூழ விளங்குகின்றார்…

இவையன்றி மேலும் சாரிபுத்ரா கேள்பாயாக, சுகவதியில் பிறவிகொண்டுள்ள தேவபிறவியினர்கள் அவினிவர்த்தன்யர் என அறியபடுகின்ரனர், இவர்களில் எண்ணமற்ற கோடியினர் மேலும் ஒரே ஒரு பிறவி மட்டும் பிறக்க எஞ்சியுள்ளவர்களும்,ஒரு பிறவி கூட பிறந்து விட்டால் பூரணத்துவத்தை அடைந்து பிறவியாகிய தளையை கடந்து கொள்ளும் தன்மையடைந்தவர்களோ எண்ணிலி கோடியாகவும் இருக்கின்றனர்…

சாரிபுத்ரா மேற்சொல்லபட்ட எஞ்சியுள்ள ஒரு பிறவியும் கூட பிறந்து கொள்ள தயாரகவே இருக்கும் இவர்கள் ஏன் பிறக்க சம்மதம் பூண்டு வாழ்கின்றனர் என அறியவேண்டாமா?

அவ்வாறு அவர்கள் பிறவி கொள்ளும் தருணத்தில் அனேகம் தர்மசிந்தனை கொண்டோர் ஒருங்கே அணைந்து தர்மத்தின் பாதையை சிக்கென பற்ற வாய்ப்பு வழங்கும் பொருட்டே தான் என அறிவாயாக…

அவ்வண்ணம் சிறு உன்னத கர்ம வினை பற்றில் பிறக்கும் இவர்கள் அனேகம் பேரை தர்மத்தின் பாதையில் உயர்த்தி விட்டு செல்வதால் ,மேலும் அவர்களுக்கு அவர்களின் கடைசி பிறவியும் அற்று பூரண தம்ம நிர்மலத்துவத்தை அடைகின்றனர்.

சாரிபுத்ரா தர்ம பாதையில் சஞ்சரிக்கும் ஒரு ஆண் அல்லது ஒரு பெண் யாராயினும் அமிதாப புத்தரின் பெயரை கேட்டாலோ சொன்னாலோ, அல்லது அவர் பெயரை பற்றினாலோ, அவர் பெயரில் நம்பிக்கை வைத்தாலோ, இவ்வண்னம் திண்ணமாக ஏக மனதுடன் சஞ்சலமின்றி ஒருநாள் முதல் ஏழுநாட்கள் உள்ளன்புடன் உருகி நினைத்துவர நிச்சயம் அந்த பெரும் தர்மம் செய்தவர்களின் வாழ்நாள் முடியும் தருவாயில் அமிதாப புத்தர் தரிசனை செய்வித்து அவர்களை ஏற்றுக்கொள்ள தன்னுடன் அனேகம் கோடி தேவர்குழாம் சூழ எழுந்தருளுவார்,..உடனடியாக அவர்களின் மறுபிறப்பு சுகவதியில் நிகழ்கின்ரது.

சாரிபுத்ரா, நிச்சயமான இந்த மேலாம் தன்மையினாலே தான் இப்போது இந்த உள்ளமை உண்மை தேவ ரகசியம் சொல்லபட்டது, இதை கேட்க்கும் அனைத்து தேவ குழாங்களும் இப்பூவுலகில் வந்து பிறக்க பிரதிக்ஞை கொண்டவர்களாக எழுந்தருளுவார்களாக..

சாரிபுத்ரா, இவ்வண்ணம் புத்தனாகிய நான் அமிதாப புத்தரின் அளவற்ற பேரருள் பெரும் கருணை திறத்தினை புகழ்ந்து இறைஞ்சுகின்றேன்.

அமிதாப உலகு பிறப்பு மந்திரம்

னமோ அமிதாபாய ததாகதாய தத்யதா
அமிர்தபாவே அமிர்தசம்பவே
அமிர்தவிக்ரந்தே அமிர்தவிக்ரந்தகமனீ
ககன கீர்த்திசாரே ஸ்வாஹா
=Translated by Hseija Ed Rian

No comments:

Post a Comment