கடவுள் என்பவர் யார்?
ஜீவர்களை இந்த பூமியில் படைக்குமுன்னே, அதற்க்கும் அனாதிகாலம் முன்னே, ஜீவர்கள் பூமியில் உருப்பெற்ற எண்ணிறந்த காலம் முன்னே, கடவள் அருட்சக்தியால் தோற்றுவித்ததே உணவு. அவ்வுணவே அவர் தன்னுடைய அருட்கொடையாக ஜீவர்கள் உண்டு பசியாற தோற்றுவித்த அமிர்தம். பசியெனும் கொடூரத்தை வைத்த இறைவன் அது போக்க அதன் முன்னே உணவை உலகில் படைத்து வைத்தான். அந்த படைப்பே தாவர வர்க்கம் எனும் விசேஷ ஜீவ உணவு. தாவரம் எனும் படைப்பு இல்லை எனில் பசி எனும் சண்டாளன் ஜீவர்களின் உயிரை ஆட்டி படைத்திருப்பான் என்பது திண்ணம்.
பசியால் வருந்துகின்ற சீவர்களுக்கு ஆகாரங்கொடுக்க நினைத்தபோது, நினைத்த புண்ணியரது மனம் வேறு பற்றுக்களை விட்டுச் சுத்தக் கரணமாகி நினைத்தபடியால், அந்தப் புண்ணியர்களை யோகிகளென்றே உண்மையாக அறியவேண்டும். ஆகாரங் கொடுக்க நினைத்தபடி உபசரித்துக் கொடுக்கும்போது, அவருண்ணுவது தாமுண்ணுவதாக அறிந்து களிக்கின்ற படியால், ஞானிகளென்றே உண்மையாக அறியவேண்டும். ஆகாரங்கொடுக்க உண்டு பசி தீர்ந்தவர்களுக்கு அத்தருணத்தில் ஆன்மாவின் உள்ளும் புறத்தும் கீழும் மேலும் நடுவும் பக்கமும் நிறைந்து கரண முதலிய தத்துவங்களெல்லாம் குளிர்வித்துத் தேகமுழுதும் சில்லென்று தழைய முகத்தினிடமாகப் பூரித்து விளங்குகின்ற கடவுள்விளக்கத்தையும் திருப்தியின்பமாகிய கடவுளின் இன்பத்தையும் பிரத்தியட்சத்தில் தரிசித்து அனுபவிக்கின்றார்க ளாதலால், அந்தப் புண்ணியர்கள் கடவுளைக் கண்டவர்களென்றும் கடவுளின்பத்தை அனுபவிக்கின்ற முத்தரென்றும் அறியவேண்டும். பசி நீங்க உண்டு சந்தோஷ’த்தவர்கள் இந்தப் புண்ணியர்களைத் தெய்வமாகப் பாவிக்கின்றார்களாதலால், இவர்களே தெய்வமுமென்று உண்மையாக அறியவேண்டும் என வள்ளலார் கூறுகின்றார்.ஆகையினால் ஜீவர்களுக்கு பசியாற்ற உணவாகிய தாவரங்களை படைத்து உணவளிக்கின்றவரே கடவுள். இதுவே சத்தியம்.
அப்படியெனில் ஜீவர்களின் பசியை போக்க தாவரங்களை படைத்த ஒருவரே இறைவன். அந்த மாபெரும் கருணையாளரே அருட்பெரும் ஜோதி ஆண்டவர் என சத்தியமாக அறியவேண்டும். எப்போது எப்போதெல்லாம் தாவரங்களை பார்க்கிறோமோ அப்போது அப்போதெல்லாம் அந்த அருட்கருணையை நாம் பார்க்கவேண்டும். பார்க்க பழகவேண்டும். அப்போது தான் அருள் பூரணப்படும் எனவறியவேண்டும். உணவளித்தவரே கடவுல் என்பதை நாம் நினைவில் வைக்கவேண்டும். பசியால் துன்பமுறும் ஏழைகளுக்கு பசியாற்றும் போது அந்த உணவானது தாவர உணவே என நினைந்து ,அது முகாந்திரம் அருளை வழங்கிய கடவுளை நன்றி செலுத்த பழகவேண்டும். அப்போது அருள் பூரணப்படும் என அறியவேண்டும்.கடவுள் இன்பம் பூரணப்படும் என அறியவேண்டும்.
அருட்பெரும்ஜோதி அருட்பெரும் ஜோதி
தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி.
No comments:
Post a Comment