ஈமென்று கேட்டதுவும் என்னுள்ளே நின்றதுவும்
ஓமென்று சொன்னதுவும் உற்றறிவ தெக்காலம்.சத்தம் பிறந்தவிடந் தன்மயமாய் நின்றவிடஞ்
சித்தம் பிறந்தவிடந் தேர்ந்தறிவ தெக்காலம்.
போக்கு வரவும் புறம்புள்ளு மாகிநின்றும்
தாக்கு மொரு பொருளைச் சந்திப்ப தெக்காலம்.
நானெனவு நீயெனவு நாமிரண்டு மற்றொன்றும்
நீயெனவே சிந்தைதனி நேற்படுவ தெக்காலம்.
அறிவையறி வாலறிந்தே அறிவும் அறிவுதனில்
பிறிவுபட நில்லாமல் பிடிப்பதினி யெக்காலம்.
நீடும் புவனமெல்லாம் நிறைந்துசிந் தூரமதாய்
ஆடும் திருக்கூத்தை அறிவதினி யெக்காலம்.
தித்தியென்ற கூத்தும் திருச்சிலம்பி னோசைகளும்
பத்தியுடனே கேட்டுப் பணிவதினி யெக்காலம்.
நயனத் திடைவெளிபோய் நண்ணும் பரவெளியில்
சயனத் திருந்து தலைப்படுவ தெக்காலம்.
அருவி மலைநடுவே ஆயிரக்கால் மண்டபத்தில்
திருவிளையா டற்கண்டு தெரிசிப்ப தெக்காலம்.
மீனைமிக வுண்டு நக்கி விக்கிநின்ற கொக்கதுபோல்
தேனைமிக வுண்டு தெவிட்டிநிற்ப தெக்காலம்.
பொல்லாத காயமதைப் போட்டு விடுக்குமுன்னே
கல்லாவின் பால்கறப்பக் கற்பதினி யெக்காலம்.
வெட்டவெளிக் குள்ளே விளங்குஞ் சதாசிவத்தைக்
கிட்டிவரத் தேடிக் கிருபை செய்வ தெக்காலம்.
No comments:
Post a Comment