Thursday, November 24, 2022
நாஸதீய சூக்தம்/
//////நாஸதீய சூக்தம்//////
(ரிக் வேதம்: பத்தாவது மண்டலம் 129வது சூக்தம்)
அப்போது அசத் இருக்கவில்லை
சத் இருக்கவில்லை
உலகமிருக்கவில்லை
அப்பாலான வானும் இருக்கவில்லை
எது மூடியிருந்தது? எங்கு?
யாருடைய ஆணையில்?
அடியற்ற ஆழமுடைய நீர்வெளி இருந்ததோ? (1)
அப்போது மரணம் இருக்கவில்லை
அமுதம் இருக்கவில்லை
இரவு பகல்களின் அடையாளங்கள்
இருக்கவில்லை
ஒன்றேயான அது
தன் அகச்சத்தியால்
காற்றின்றி மூச்சுவிட்டது
அப்பால்
அதுவன்றி வேறேதும்
இருக்கவில்லை. (2)
இருளை இருள் மறைத்திருந்தது ஆதியில்
பிரித்தறிய முடியாதபடி இவை எங்கும்
நீராக இருந்தது
வடிவற்ற வெறுமையே எங்குமிருந்தது
அதிலிருந்து
மகத்தான தவத்தால்
அந்த ஒன்று பிறந்தது. (3)
ஆதியில் அதில் காமம் எழுந்தது
மனத்தின் முதல் பீஜம் அது தான்
இதயங்களில் தேடுகின்ற ரிஷிகள்
தங்கள் மேதமையால்
அசத்தில் சத்தைக் கண்டனர். (4)
அவற்றின் ஒளிக்கதிர்கள் ஊடுருவிச் சென்றன
மேலிருந்தது என்ன? கீழிருந்தது என்ன?
பிறப்பிப்பவை இருந்தன
மகத்தான சக்திகள் இருந்தன
ஆற்றல் கீழிருந்தது
வேகம் மேலிருந்தது. (5)
உண்மையில் யாரறிவார்?
யார் அதைச் சொல்ல முடியும்?
எங்கிருந்து தோன்றியது சிருஷ்டி?
எங்கிருந்து?
தேவர்களோ படைப்பிற்குப்
பின்வந்தவர்கள்
அப்படியானால் அது எப்படி உருவாயிற்று?
யாரறிவார்? (6)
இந்த சிருஷ்டியின் தோற்றம்
யார் அதை உண்டுபண்ணினார்கள்
அல்லது உண்டுபண்ணவில்லை?
அப்பாலான ஆகாயமாக
இதைக் கண்காணிக்கும்
அவனே அறிவான்
அல்லது அவனும் அறியான். (7)
ரிஷிகள் தங்கள் நுண்திறனறிவால் உணர்ந்து கொண்ட “சத்” எனும் அழியா பொருள் எதுவென உணர்வீர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment