Thursday, November 24, 2022

விஷம்

=====விஷம்==== “ப்ரச்னோத்தர ரத்ந மாலிகா” என்ற நூலில் ஆசார்யாள் உபதேசித்துக்கொண்டு வருகையில் “எது விஷம்?” என்று ஒரு கேள்வி. “கிம் விஷம்?” அவதீரணா குருஷு என்று அதற்கு பதில் கொடுத்திருக்கிறார். குருவிடத்தில் அவமரியாதை காட்டுவதுதான் விஷம் என்று அர்த்தம். “அவதீரணா” என்றால் அவமரியாதை. இதையே திருப்பி வைத்தால் மரியாதை பண்ணுவது, அதாவது மனஸார நினைத்து நமஸ்காரம் பண்ணுவதுதான் நமக்கு அம்ருதம். [‘ப்ரச்நோத்தர ரத்நமாலிகா’ ச்லோகங்களைச் சொல்லிப் பார்த்துக் கொண்டு] ‘விஷம் என்ன?’ என்ற மாதிரியே, ‘அம்ருதம் என்ன?’ என்றும் கொஞ்சம் தள்ளிக் கேள்வி வருகிறது. ஆனால், ‘அம்ருதம் என்ன?’ என்று பொதுவாகக் கேட்காமல் ‘காதுக்கு அம்ருதம் என்ன?’ என்று கேட்கிறார். ‘கர்ணாம்ருதம்’ என்கிறோமே, அப்படி. “பாதும் கர்ணாஞ்ஜலிபி: கிம் அம்ருதம்?” “கர்ணாஞ்ஜலிபி:” – காது மடல்களால்; “பாதும்” – குடிப்பதற்கு; “கிம் அம்ருதம்” – எது அம்ருதம்? காது மடல் குவிந்து ஒரு தொன்னை மாதிரிதானே இருக்கிறது? தொன்னையால் பாயஸம் சாப்பிடுவது போல இந்தக் காது மடலில் எந்த அம்ருதத்தை ரொப்பிக்கொண்டு உள்ளே ஹ்ருதயத்துக்கு அனுப்பி வைக்கணும்? இப்படிக் கேட்டுவிட்டு பதிலாக “ஸதுபதேச:”. என்கிறார். குரு அளிக்கும் நல்ல உபதேசம்தான் அப்படிப்பட்ட அம்ருதம் என்கிறார். எது அம்ருதம் என்று பொதுவாகக் கேட்காமல் காதுக்கு எது அம்ருதம் என்று குறிப்பிட்டுச் சொன்னதில் நமக்கு ஆதரவாக ஒரு விஷயம் கிடைக்கிறது. என்ன பார்த்தோம்? குரு நிந்தைதான் விஷம் என்று பார்த்தோம். அப்படியானால் அதன் ஆப்போஸிட்டான குரு வந்தனம்தான் விஷத்துக்கு ஆப்போஸிட்டான அம்ருதம் என்று முடிவு பண்ணினோம். ஆசார்யாளும் அப்படியேதான் முடிவு பண்ணி விட்டிருக்கிறார். “நிந்தனை விஷமென்றால் வந்தனைதான் அம்ருதம்; இது குழந்தைக்குக்கூடத் தெரிந்துவிடும்; ஆகையால் இவற்றில் ஒன்றை – விஷத்தை – சொன்னதே போதும். ‘அம்ருதம் எது?’ என்று இன்னொரு கேள்விபோட்டு பதில் சொல்லிக்கொண்டிருக்க வேண்டாம்” என்று தீர்மானம் செய்திருக்கிறார். அப்புறம் குருவின் உபதேசத்தைப்பற்றிச் சொல்ல வேண்டும் என்று நினைத்து, எந்தக் கேள்வியை எழுப்பி, அதற்கு பதிலாக “ஸதுபதேசம்” என்று சொல்லலாமென்று யோசித்திருக்கிறார். அப்போதுதான் “காதுக்கு எது அம்ருதம்?” என்று கேள்வி போடுவோமென்று முடிவு செய்திருக்கிறார். கர்ணாம்ருதம் (காதுக்கான அம்ருதம்) என்று சொல்லாமல் ‘கர்ணாஞ்ஜலியால் குடிக்கும் அம்ருதம்’ என்று போட்டிருப்பதிலும் அர்த்தபுஷ்டி இருக்கிறது. கர்ணாஞ்ஜலி என்றால் காது மடல். இங்கே அஞ்ஜலி என்றால் மடல். கூம்பியிருக்கும் புஷ்பம் விரிவதை ‘மடலவிழ்வது’ என்கிறோம். கன்னத்தோடு மடித்துவைத்தால் கூம்பினாற்போலிருப்பது காதுமடல். அதை அவிழ்த்து, இப்போது நமக்கிருக்கிறது போல விட்டுவிட்டால் மடல் மலர்ந்து சப்தங்களை வாங்கிக் கொள்கிறது. அதனால்தான் கர்ணாஞ்ஜலி என்பது. அஞ்ஜலி என்று சொன்னால் பொது அர்த்தம் நமஸ்காரந்தானே? புஷ்பம் கூம்பிக் குவிந்த மாதிரி மனஸு குவிந்து பக்தி செய்யும்போது அதற்கு அடையாளமாகக் கைகுவித்து – “கைகூப்பி” என்றே வழக்கில் சொல்கிறபடி – நமஸ்காரம் செய்கிறோம். அப்போது கையின் ‘ஷேப்’ கூம்பின புஷ்பம் மாதிரியிருக்கிறது. ‘அம்ருதம் என்றால் அது குரு வந்தனந்தான்; விஷம் குருநிந்தை என்றால் வேறு விதமாக இருக்கமுடியாது. அதனால்தான் ‘காதுக்கு அம்ருதம்’ என்று பாகுபடுத்திச் சொல்கிறார்’ என்று பார்த்தோம். அதையும் இன்னம் நயமாகக்கொண்டு போய்க் கர்ண அஞ்ஜலிக்கு அம்ருதம் என்று சொல்லியிருப்பதில், ‘அஞ்ஜலி’ என்ற வார்த்தையையும் போட்டு நமஸ்காரம்தான் அம்ருதம் என்பதை நன்றாகவே உறுதிப்படுத்திவிட்டார் என்று தோன்றுகிறது. ‘நமஸ்காரமாகிய அஞ்ஜலியே பொதுவாக உயிருக்கு அம்ருதம். கர்ணாஞ்ஜலிக்கு அம்ருதமாயிருப்பது குரு அருளுகின்ற ஸதுபதேசம்’ என்று ஆசார்யாள் காட்டியிருப்பதாகத் தெரிந்துகொள்கிறோம்.

No comments:

Post a Comment