Friday, November 25, 2022

பரா ரகசியம்

கண்ணாக்கு மூக்கு செவி ஞானக்  கூட்டத்தில் பண்ணாக்கு வைத்த பழம் பொருள் ஒன்றுண்டு அண்ணாக்கினூடே அகண்ட வொளி காட்டி பண்ணாக்கி நம்மைப் பதித்தவரே... என்பதில் நந்திகேசவர் பெரிய நாக்காக இருக்கிறார்.அதற்கு புறத்திலுள்ள கண்ட ஸ்தானத்தில் அண்ணாக்கு இருக்கிறது. அதுவே அகாரமாகும். அதற்கு தூக்கிய பாதம், குஞ்சிதபாதம், திருவடி என்ற பெயர்களும் உண்டு. அந்த அண்ணாக்குக்கு மேலே ஒரு நாக்கு இருக்கிறது. அதற்கு பேர் உண்ணாக்கு. அது உகாரம் ஆகும். அந்த அண்ணாக்கு உண்ணாக்கு என்ற இரண்டும் தராசுமுனை போல நிற்கிறது. சுவாமி இடது பாதம் அண்ணாக்கு மேலே ஊன்றி, வலது பாதம் புருவ நுனியிலிலே நிற்கிறது. இந்த வலது பாதம் ஆடியபாதம், நற்றாள் ஆகும். அந்த அண்ணாக்கு இருக்கப்பட்ட இடத்திலே மனோன்மணி சக்தி வாசம் செய்கிறாள். உண்ணாக்குக்கு மேலே புருவமத்தியிலே சதாசிவம் வாசம் செய்கிறார்... சதாசிவனும் மனோன்மணியும் இருக்கப்பட்ட இடமே சத்தம் பிறந்த இடம். அதுதான் முச்சந்திகள் கூடும் இடமாகிய அகாரமும் உகாரமும் தராசுமுனையாய் நிற்கும். இவ்விரண்டுக்கும் நடுவே மனோன்மணியும் சதாசிவனும் நிற்கிறார்கள். இந்த இடமே இன்பதுன்பம் இல்லாத இடம். தீட்டு திடுக்கு அற்ற இடம். சகலமும் விளையாடப்பட்ட இடமாகும். தூக்கிய பாதத்தில் அணிந்த வீரகண்டா மணியும் பாதச் சிலம்பும் சதங்கையும் அவ்விடத்திலே ஒலிக்கும். அப்படி ஓசை உண்டான பின்பு சதாசிவமும் மனோன்மணியும் தரிசனமாகும். பிறகு ஒரு சோதி தோன்றும், அச்சோதியில் லயப்பட்டால் வெகுகாலம் ஒருவர் சீவித்து வாழலாம்... இன்னும் விளக்க வேண்டுமானால்,நம் உடலில் உண்ணாக்கு மேலே உச்சிக்கு கீழேயுள்ள பாதை வலம்புரி சங்கென்று அழைக்கப்படும்.இந்த வலம்புரியில் இருகாது குறுக்கிடும் பகுதியில் ஒரு கிணறு உள்ளது.இந்த கிணற்றை நாதஉணவுதரும் தருமச்சாலை என்ற நற்சத்திரங்கள் என்றும் கூறுவர்.இந்த தருமச்சாலையிலே என்றும் வற்றாத சக்திநாதனுக்கள் அக்கினியாக கொழுமிக் கிடக்கின்றன.இந்த நாதனுக்களின் ஊற்றுக்கண்ணாக மயிராண்டி எனும் பிடரிக்கண்ணும் இந்த கிணற்றின் மேல்மூடியாக மூக்காண்டி என்ற புருவமத்தியின் உட்வாசலான குதம் இருக்கிறது. மேலும் இந்த வலம்புரியே மரணந் தங்குந்தலமென்றும் கேள்வி உதயஸ்தானமென்றும் நாதாக்களின் அபிப்ராயம்.ஆகவே எவனொருவன் வலம்புரியிலுள்ள நாதாந்தக் கிணற்றில் நாதத்தை எழுப்புகின்றானோ அவனை எமன் நெருங்கமாட்டான்.மீறி தவறான எண்ணங்களினால் ஏற்படும் போக்குவரத்து செலவினால் கிணற்றில் நாதத்திற்கு பதிலாக கபமாக மரணத்தின் அஸ்திவாரம் போடப்படுகிறது. வள்ளலார் கூறிய சுத்த சன்மார்க்க அனுபவம் கண்டத்திற்கு மேல் ஏன்?? என்பதும், ஞானமூலிகையான கரிசாலையும் தூதுவளையும் பயன்பாடு எதற்கு என்பதும், மேல் ஆதாரங்களை பற்றியும், உடுக்கை, சூலத்தின் வடிவங்கள் எதற்கு என்பதை படத்தைக் கொண்டு படித்தால் புரிந்துகொள்ளலாம். அண்ணாக்கை உண்ணாக்கை பற்றி எழுதாத சித்தர்களே இல்லை. இதன் அடிப்படை கொண்டே வாசியோகம் பழகப்படுகிறது. ஊதறிந்து ஊதுபவனே சித்தன் என்று அகத்தியர் ஞானத்தில் குறிப்பிட்டதும் இதுவே ஆகும். நன்றி; தெளிவு குருவின் திருநாமம்

No comments:

Post a Comment