Friday, November 25, 2022

மனசு

எல்லோரும் மனசு ஒரு நிலையா இல்லைன்னு சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். முதல்லே.... மனசை, அது என்னனு கண்டுபிடிச்சா அவர்களுக்கு தெரியும். உண்மைதான். தியானத்துக்கு உக்காந்தா நினைப்பு டஜன் கணக்குலே வர்றது.  மனசு நினைப்பு மூட்டை தானே! நினைப்புகளை ஒழிச்சுக் கட்டறதுதான் முயற்சி பலிக்க மாட்டேங்குது. ஒருத்தன் எந்த வழியிலேயோ, ஆத்மாவிலே ஓய்ஞ்சு இருந்தா சரிதான்.  ஆத்மா விசாரத்திலே முடியலேன்னா... ஜபமோ, தியானமோ பண்ணனும்.... யானை துதிக்கைக்கு சங்கிலியைப் பிடிசுக்கக் கொடுக்கிறது மாதிரிதான்.  ஜபமோ, தியானமோ பண்ணினா பிற நினைப்புகள் போகும்.  ஏகாக்கிரம் ஏற்படும். மனசு அமைதி அடையும்.  அதுக்காக, பெரிய போராட்டத்துக்கு அப்புறம்தான் அமைதி வரும்னு அர்த்தம் இல்லை.  அமைதி எப்பவும் இருக்கு. நினைப்பை போக்கிறதுக்குதான் இந்தப் போராட்டம் எல்லாம். மாடு பிறர் கொல்லையிலே போய் மேயறது.  மாட்டை இழுத்து வந்து கொட்டத்திலே கட்டினாலும் ... அவிழ்த்துக் கொண்டு ஓடிடும்.  இப்போ... நல்ல புல்லைக் கொட்டத்திலேயே கொடுத்தோம்னா... முதல்லே ஒரு வாய் சாப்பிடும்.. பழைய பழக்கத்தினாலே, அடுத்த கொல்லைக்கு ஓடிடும்.  அடுத்த நாள் இரண்டு வாய் சாப்பிடும்.. பழகப் பழக நிறைய புல்லைச் சாப்பிடும்.  கடைசிலே பிறர் கொல்லைக்கு ஓடறதை விட்டுடும்.  அந்தப் பழக்கம் சுத்தமா போச்சுனா... அதைக் கட்டத் தேவையில்லை...  அவிழ்த்து விட்டுடலாம்.  பக்கத்துக் கொல்லைக்குப் போகாது.  கொட்டதிலே அதை அடிச்சாக்கூட கொட்டத்தை விட்டுப் போகாது. இப்படிதான் மனசும், வாசனைகள் இருக்கற வரைக்கும் ஒரு நிலையிலே இருக்காது. வாசனை எல்லாம் வெளியே வரணும்.  வந்துதான் அழியும். மனம்னா என்னனு பாத்தா.... நினைப்பு எல்லாம் போய் அது ஆத்மான்னே முடிஞ்சிடும்.  எண்ணங்களின் மொத்த தொகுதியைத் தான் மனம்கறோம். எண்ணங்கள் ஆத்மாவிலே இருந்துதான் வர்றதுன்னு தெரிஞ்சு ... ஆத்மாவிலே இருந்தா மனம் மறைஞ்சுடும்.  அமைதி நிலைச்சிடும்... நினைக்கிறது கஷ்டமாகியிருக்கும்... இப்போ நினைப்பு இல்லாம இருக்கிறது எவ்வளவு கஷ்டமாயிருக்கோ ... அப்படி அப்போ நினைக்கிறது கஷ்டமாயிருக்கும் ... இங்கே மனம்தான் மாடு; நினைப்புகள் தான் அடுத்தவா கொல்லை; கொட்டம் தான் நம்மளோட சொருபம். தூங்கறவனை வேலையைப் பாருன்னு எழுப்பினா எப்படி இருக்கும்? தூக்க சுகத்தை வேலைக்காக தியாகம் பண்ண சிரமாமாயிருக்கும்.  அப்படித்தான் மனமற்ற நம்மளோட நிலை. சுகஸ்வருபம்.  அதை விட்டுட்டு சிந்திச்சுக்கொண்டு துக்கப்படறது ரொம்ப கஷ்டம்.  நம்மளோட சொருபத்தோட ஆனந்தத்தைத் தொந்தரவு பண்ணவே சம்மதிக்க மாட்டோம். மனமற்ற நிலையிலே நிக்கணும்னா..... பெரிய போராட்டந்தான்.  போராடித்தான் நம்மளோட சொருபத்தைப் பெற வேண்டியதிருக்கு.  போராட்டத்தை ஜெயிச்சு லக்ஷியத்தை அடைஞ்சா, எதிரி ஆத்மாவிலேயே அடங்கி இல்லாம போயிடுவான்.  மனந்தான் எதிரி.  நினைப்புதான் எதிரி.  நினைவுகள் தான் உலகம்.  நினைப்பு இல்லேன்னா... உலகமும் இல்லை... கடவுள் இல்லை.  ஆத்மா மட்டும் தனியிருப்பா விளங்கும்.

No comments:

Post a Comment