Friday, November 25, 2022

வெட்டவெளி

வெட்டவெளி பிரபஞ்சம் எனும் சொல் சமஸ்கிருதச்சொல். அதன் பொருள் ‘நன்கு விரிந்தது’ என்பதே. தமிழில் பேரண்டம் எனச் சொல்லலாம். பிரபஞ்சத்தை நம்மால் ஒருபோதும் முழுமையான புறவயத்தில் கண்டுவிடவே முடியாது.  பிரபஞ்சத்தின் வடிவம் கோளம் . பிரபஞ்சம் உள்ளிட்ட எல்லாவற்றுக்கும் அடிப்படையாய் இருப்பது *வெளி* ஆகும். அதை *வெட்டவெளி* எனச் சித்தர்கள் குறிப்பிடுகின்றனர். அதுவே பிரம்மம் என்று கூறப்படுகிறது . வெட்டவெளி > பேரண்டங்கள் > அண்டங்கள் > விண்மீன் குடும்பங்கள் > கதிரவக்குடும்பம் > பூமிக்கோள் > உயிர்கள் > மனிதன் என்பதாக ஒரு நேர்வாக்கியத்தை அமைத்தால் நம்மால் பரிணாமத்தை ஓரளவு விளங்கிக் கொள்தல் சாத்தியம். திடும்மென வெட்டவெளியின் ஒரு புள்ளியில் நிகழும் உசும்புதல் (இயக்கம்) விரியத்துவங்குகிறது. அவ்விரிவால் அண்டங்கள் உள்ளிட்ட அமைப்புகள் தோன்றுகின்றன. வெட்டவெளியின் சிறுபுள்ளியில் திடீரென நிகழும் உசும்புதல் அல்லது விரிவின்போது எழும் சத்தமும்(ஒலி), வெளிச்சமும் (ஒளி) பேரண்டத்திற்கான முதற்புள்ளிகள்.  அவ்வொலியை ஓங்காரம் என்றும், அவ்வொளியை சோதி என்றும் குறிப்பிடுகிறார்கள் . நாதம், விந்து என இரண்டு சொற்களை  தோற்றக்குறியீடுகளாகக் குறிப்பிடுவர். நாதம் என்பது ஒலி; விந்து என்பது ஒளி. ”நாத விந்து கலாதி நமோநம” எனும் அருணகிரிநாதரின் திருப்புகழ் ஒரு சான்று. சமயத்தில் இறைவனை நாதன் என்றும் சொல்வதை நினைவுகூரவும். பிரபஞ்சத்தோற்றத்திற்கு அடிப்படையான நாதத்திற்கு மூலமான பொருளைச் சுட்டும் குறியீடு நாதன். சைவசமயத்தில் சிவம், சக்தி எனும் முதன்மைக் குறியீடுகளை  பார்ப்போம். சிவம் என்பது வெட்டவெளியைக் குறிப்பது. சவம் என்றால் உயிரற்றது. இயக்கமும் அற்றது . அப்படியானால் சிவம்? ஆம், உயிருள்ளது. சிவத்தை நுட்பமாக அணுகினால இயக்கமற்று உயிருள்ளதாகக் காட்சியளிக்கும். அதாவது, இயக்கமில்லாமல் உயிரோடு இருக்கும் வெளியே சிவம். உயிருள்ள இயக்கமாக மாறுகிற வெளி வளியே  சக்தி. உயிருள்ள இயக்கமற்ற வெளியைச் சிவம் என்றும் உயிருள்ள இயக்கங்கள் நிகழும் வெளியை சிவசக்தி என்றும் கொள்ளலாம். ”*வெட்டவெளி* தன்னை மெய்யென்று இருப்போர்க்கு பட்டயம் ஏதுக்கடி, குதம்பாய் பட்டயம் ஏதுக்கடி” (குதம்பைச் சித்தர்), “மெய்ஞானப் பாதையிலேறு – சுத்த வேதாந்த *வெட்டவெளி* யினைத் தேறு” (கடுவெளிச் சித்தர்), ” *வெட்டவெளி* தனையன்றி வேறு தெய்வமில்லையே”(சிவவாக்கியர்), ”வெட்டவெளி தன்னில் விளைந்த வெறும்பாழ் திட்டமுடன் கண்டு தெளிவதினி எக்காலம்?”(பத்ரகிரியார்), ”வீட்டில் ஒருவரில்லை வெட்டவெளி யானேண்டி” (பட்டினத்தார்),

No comments:

Post a Comment