Thursday, November 24, 2022
உயிரினங்கள் தோற்றம்: நால்வகை யோனி எழுவகைத் தோற்றம்
உயிரினங்கள் தோற்றம்:
நால்வகை யோனி
எழுவகைத் தோற்றம்
--------------------------------------------------------
பிரபஞ்ச சிருஷ்டி என்பது நம் அறிவுக்கெட்டாத , எப்போதும் வியப்பூட்டும் மாபெரும் புதிராகவே இருக்கிறது.
கொழுந்து விட்டெரியும் பெருநெருப்பிலிருந்து அதே இயல்புள்ள பல்லாயிரக்கணக்கான தீப்பொறிகள் சிதறி வெளிப்படுவதைப் போல, எல்லையற்ற அழிவற்ற பிரம்மத்திலிருந்து இந்தப் பிரமாண்டமான பிரபஞ்சமும், இதில் வாழும் கோடிக்கணக்கான உயிரினங்களும் தோன்றின.
இப்பூவுலகில் புல் பூண்டு முதலான தருக்கினத்தைப் படைக்கத் தொடங்கி,யானை முதல் எறும்பு கடை வரையிலான எண்பத்து நான்கு நூறாயிரம் ( 84 இலட்சம்) உயிர்க் கோடிகளைப் பரம்பொருள் படைத்தது.
இங்கு 84 இலட்சம் ஜீவ ராசிகள் என்றது வகை மாத்திரமே( Variety)அன்றி மொத்த கணக்கு இல்லை.
மீன் என்ற ஜீவராசியை எடுத்துக் கொண்டால் மீன்களில் எத்தனை வகை இருக்கிறது.ஆக 84 இலட்சம் ஜீவ ராசிகள் என்றது வகைப்பாடு மட்டுமே.
நால்வகை யோனி
--------------------------------------
இம்மண்ணுலகில் தோற்றமாயிருக்கும் ஜீவ ராசிகள் அனைத்துமே புழுக்கம், வித்து, அண்டம் ( முட்டை), சினை( கருப்பை) எனும் நால்வகை யோனி ( பிறப்பிடம்) வழியாக உண்டாகியிருக்கின்றன.
1.புழுக்கத்தில் ஈரும், பேனும், புழுக்களும் உண்டாயின.
2.வித்திலிருந்து புல் பூண்டு முதல் செடி கொடிகள்,பெரிய ஆலமரம் வகையிலான தாவர இனங்கள் தோன்றின.
3.முட்டை(அண்டம்)யிலிருந்து எறும்பு, பல்லி, பாம்பு, பறவைகள், மீன், தவளை,ஆமை, முதலை முதலானவை பிறக்கின்றன.
4.சினையென்னும் கருப்பையில் இருந்து எலி,பூனை தொடங்கி ஆடு,மாடு,புலி, சிங்கம், மிகப் பெரிய யானை வரையிலான மிருகங்களும், மிகவும் உயரிய படைப்பான மனிதனும் பிறக்கின்றான்.
எழுவகைத் தோற்றம்
-----------------------------------------------
இந்த நால்வகை யோனியிலிருந்து உண்டாகின்ற ஜீவ ராசிகளின் தோற்றங்கள் ஏழு வகைப்படும்.
பிறப்பிடம் ( யோனி) வைத்து ஜீவ ராசிகளை நான்காகப் பிரித்த நம் முன்னோர் அவற்றின் தோற்றத்தை வைத்து ஏழுவகையாகப் பிரித்தனர்.
1. தருக்கினம் -புல் பூண்டு,செடி கொடிகள், மரங்கள் முதலானவை.
2. நீர் வாழ் இனம்- மீன், தவளை,முதலை,திமிங்கிலம்முதலானவை.
3.ஊர்வன-எறும்பு, அட்டை, பாம்பு,பல்லி முதலானவை.
4. பறவையினம்- ஈ,கொசு, புறா ,பருந்து,கழுகு முதலானவை.
5. விலங்கினம்: எலி ,பூனை, நாய், ஆடு ,மாடு,புலி, கரடி புலி ,சிங்கம் ,யானை முதலானவை
.
இவற்றோடு 6. மனிதர் -7. தேவரென உயிரினங்களின் தோற்றத்தை எழுவகைத் தோற்றம் என்றனர்.
மனிதப் படைப்பின் உன்னதத்தை உணர்த்தவே நால்வகை யோனி,எழுவகைத் தோற்றம் எடுத்து வைக்கப் பெற்றது.
உயிரினங்களின் தோற்றத்தைக் கூர்ந்து கவனித்தால், இறைவன் ஜீவ ராசிகளைப் படிப்படியாக படைத்த பின்னரே, மனிதனை மட்டுமே மகா உன்னதத்தில் வைத்து படைத்துள்ளான் என்பதும், ஏனைய ஜீவ ராசிகள் அனைத்தும் மனிதனுக்கு ஊழியம் செய்வதற்காகவே படைக்கப் பெற்றுள்ளன என்பதும் தெரிய வரும்.
நால்வகை யோனி எழுவகைத் தோற்றத்தில் வைத்துப் படைக்கப் பெற்ற உயிரினங்கள் அதனதன் உடல் வளர்க்கும் அளவிற்கு உணவு தேட, ஜீவிக்க, இனவிருத்தி செய்ய ஓரறிவு முதல் ஐந்தறிவு வரையிலான அறிவுத் தோற்றத்தையும் அதற்குள்ளே வைத்து இறைவன் படைத்துள்ளான்.
உற்றறிவு ( ஸ்பரிசம்), சுவைத்தல் ( ரசம்), நுகருதல்(கந்தம்), பார்த்தல் (ரூபம்), கேட்டல் ( சப்தம்) எனும் ஐந்தறிவோடு பகுத்தறிவெனும் ஆறாவது அறிவோடு- ஆறறிவு பொதிந்து வைத்து, மகா உன்னதத்தில் வைத்து மனிதனை இறைவன் படைத்தான்.
அதனால் தான் சிவானந்த போதம் என்னும் சாத்திரம்,
"நாலு வகை யோனியிலும்
எழுவகைத் தோற்றத்தும்
நளினமாக
மேலுகந்த மானிடந் தான்
எடுப்பதுவே அருமை"... யெனக் கூறுகிறது.
எழுவகைத் தோற்றத்தில் முடிபாகக் குறிப்பிடப் பெறும்
அமரர் என்பவர் யார்?
புழுக்கள் தொடங்கி மனிதர்கள் வரை பிறப்பிடம் (யோனி) குறித்தவர்கள்- அமரர் (தேவர்) பிறப்பதற்கான யோனி எதுவெனக் குறித்தனர்?
அவர்கள் மண்ணுலகில் வாழ்பவர்களா? அல்லது விண்ணுலகில் உள்ளவர்களா?
புராணக் கதைகளின் புனைந்துரையா? என்பதெல்லாம் மானுடம் அறியாத பிரம்ம ரகசியமாகவே இருக்கிறது.
அந்த பிரம்ம ரகசியம் என்னவென்று அடுத்த பதிவில் பார்ப்போமே!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment