Tuesday, August 8, 2023
ஒத்த பொருள் யாது?
Wednesday, February 8, 2023
கடவுளின் பார்வையில்
உலகத்தில் பசி பஞ்சம் பட்டினி அடக்குமுறை கொடுமை வறுமை கொலை கொள்ளை நோய் இயற்கையின் தாண்டவம் என நெஞ்சை உருக்கும் நிகழ்வுகள் நடக்கும் சமயங்களில் பலபேரும் கேட்க்கும் ஒரு கேள்வி, கடவுள் ஏன் இதையெல்லாம் பார்த்துக்கொண்டு வெறுமனே உள்ளார் என்பதாகும்.
உண்மையில் கடவுள் இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டு உள்ளாரா? பார்த்துகொண்டு உள்ளார் எனில் அவர் ஏன் இவற்றை தடுக்கவில்லை அல்லது உதவவில்லை என சிந்தனை செய்யாதவர் இருக்க முடியாது என தோன்றுகிறது.நாத்திகர்கள் இதை சுட்டிக்காட்டி கடவுளை ஏளனம் செய்வதையும் பார்க்கிறோம். உன் கடவுள் வல்லமை படைத்தவன் எனில் ஏன் உன்னை காப்பாற்ற வரவில்லை என ஏளனம் செய்யும்போது பதில் சொல்ல முடியாமல் தவித்து போகின்றோம் அல்லவா?
கடவுள் கண்கள் இல்லாமலேயே அனைத்தையும் பார்க்கின்றவன்,காதுகள் இல்லாமலேயே அனைத்தையும் கேட்கின்றவன்,அளப்பரிய வல்லமை உடையவன் மிகப்பெரிய கருணை உடையவன் என்றெல்லாம் சொல்வதெல்லாம் புளுகு மூட்டையா?
ஆம். கடவுள் இவையனைத்தும் கொண்டவன் தான்.ஆனால் அவன் இவற்றை செய்வதில்லை.ஏனெனின் அவனுக்கு மனம் எனும் பொருள் இல்லை.மனம் உடையவனே செயல் உடையவன்.மனம் கொண்ட நாம் அந்த மனதை கொண்டு இவற்றை நிர்ணயிக்கிறோம்,அளவிடுகிறோம்,கட்டளை படுத்துகிறோம்.இறைவன் இவ்வண்ணம் நிர்ணயிப்பதில்லை அளப்பதில்லை கட்டளையிடுவதுமில்லை.அப்படி அவர் செயலாற்ற துணிந்தாரெனில் அவரும் மனோவயத்தவர் என வரையறைக்கும் வந்துவிடுவார்.மனோவயத்தவருக்கு இன்ப துன்பங்கள் பாவபுண்ணியங்கள் என வினைப்பயன் அமைந்துவிடும்.இவை வாழ்க்கை எனும் சம்சாரத்தின் அங்கம்.இறைவனுக்கு இவை ஒன்றுமில்லை.ஆகையினால் அவன் இவற்றில் இருந்து முற்றிலும் அன்னியன்.இந்த உலகம் அவனுக்கு முற்றிலும் அன்னியம்.இந்த உலகம் அவனுக்கு தேவையில்லாதது.தேவையில்லாத ஒன்றை யார் தான் சுமந்து கொண்டிருப்பர்?. உலகத்துக்குத்தான் அவன் தேவையே தவிர உலகம் அவனுக்கு தேவையில்லை.
Friday, January 20, 2023
கடவுளின் பெயர் என்ன?
உன்னை பெற்ற தாய் தந்தையர் உனக்கு ஒரு பெயர் வைக்கவில்லை என்றால் உனக்கு பெயர் இருக்குமா என்ன? பெயர் இல்லாமல் வாழ முடியாதா என்ன? இவ்வளவோ பெரிய உலகில் மனிதனை தவிர ஏனய உயிரினங்கள் எல்லாம் தான் எந்தவொரு தனித்துவமான பெயருமின்றி வாழ்ந்து வருகின்றனவே அல்லவா? பெயரென்பது வெறும் வியவகார வழங்கு பொருளன்றி மற்றொன்றன்று.இயற்கையில் எந்தவொரு உயிரினத்துக்கும் தனியென ஒரு பெயரில்லை,சர்வ வல்லவரான இறைவனுக்கும் தான் இது பொருந்தும். தனிப்பட்ட ஒரு பெயரை கொண்டவர் தான் எம் இறைவன் என சொன்னால் உம் இறைவன் பொய்.நாமரூப மன கற்பனைகளை கடந்தவனை உன் வசதிக்கு என பொய் பெயர் புனைந்து மெய்யென பேசித் திரிகின்றாய்.
Friday, December 30, 2022
தேடுதல்
முல்லா நஸ்ருதீன் இரண்டு மணி நேரமாக தேடிக்கொண்டிருக்கிறார். கையில் ஒரு சிம்னி விளக்கு வேறு அரேபிய பாலைவனக் காற்றில் அங்குமிங்கும் அசைந்தாடி அணைவதும் ஒளிர்வதுமாக இருந்து கொண்டிருந்தது.
"என்ன முல்லா ரெம்ப நேரமாக தேடிக்கொண்டிருக்கிறீர்களே?"வழிபோக்கர் ஒருவர் வினவினார்;
"என்னுடைய பொக்கிஷம் தொலைந்து விட்டது, அதைத்தான் தேடிக்கொண்டிருக்கிறேன்" என சொல்லிக்கொண்டே விளக்கின் பிரகாசம் எட்டும் இடம் வரை தன் தேடுதலை முல்லா தொடர்ந்தார். நண்பரான அந்த வழிபோக்கரும் முல்லாவுக்கு உதவியாக அவர் கூட சேர்ந்து தேட ஆரம்பித்தார்.
இவர்கள் தேடுவதை கண்டு மற்று சிலர் கூட வந்து சேர்ந்து கொண்டனர். அந்த சின்ன மங்கலான வெளிச்சத்தில் எல்லோரும் சேர்ந்து நீண்ட நேரம் தேடியும் முல்லாவின் பொக்கிஷம் கிடைத்த பாடில்லை.
அதில் ஒருவர் சற்று புத்தியுள்ளவர், அவர் வினவினார் "முல்லா இவ்வளவு தேடியும் பொக்கிஷம் கிடைக்கவில்லையே, நீங்கள் எப்போது தொலைத்தீர்கள்?".
"அது ஞாபகம் இல்லை" முல்லா பதிலளித்தார்.
"இங்கே தான் தொலைத்தீர்களா?" நண்பர் விடுவதாக இல்லை.
"எங்கே தொலைத்தேன் என்பதுவும் சரியாக எனக்கு ஞாபகம் வரவில்லை" அப்பாவியாக முல்லா பதிலளித்தார்.
கடுப்பாகி போன நண்பர் சற்று குரல் உயர்த்தி கேட்டு விட்டார், "முட்டாள் முல்லாவே ,எங்கேயோ எப்போதோ தொலைத்த பொருளை இப்போது இங்கே தேடுகின்றீர்களே, அது இங்கே கிடைக்குமா? எவ்வளவு நேரமாக நாங்களும் சேர்ந்து உங்கள் கூட தேடுகின்றோம்"
சாந்தமாக முல்லா சொன்னார்,"இங்கே தான் வெளிச்சம் இருக்கின்றது அதனால் தான் இங்கே என் பொக்கிஷத்தை தேடுகின்றேன்".
[எங்கேயோ தொலைத்த ஆன்மாவை இங்கே தேடுகின்றோம் ,முல்லா நஸ்ருதீனைப் போல.....]
Sunday, December 25, 2022
லா அலா நூர்
அந்த நாளையில் அஹமதை துதிக்கும் முன் இறையோன்_விந்தை ஆகிய லாமலிபு ஆனதை விரும்பி_சிந்தையுள் எழு மஹமூதை படைத்தனன் செல்வம்_வந்தவாறதை கண்டே ஞானப்பூட்டினில் வகுப்பாம்~பீரு முஹம்மது றபியுல்லாஹ்.
ஆதியில் இறைவன் வானத்தையும் பூமியையும் படைத்தான்...பின்னர் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார் வெளிச்சம் உண்டாயிற்று~ பைபிள்.
ஆதியில் அல்லாஹ் தன்னிலிருந்து தன்னுடைய நூரை வெளியாக்கினான் அந்த நூரில் இருந்து முஹம்மதை படைத்தான்~அல் குறான்.
நானே மெய்யான ஒளி .என்னை ஏற்றுக் கொள்ளுகிறவன் என் பிதாவை ஏற்றுக் கொள்ளுகிறான்.நான் என் பிதாவில் இருந்து வருகின்றேன்~ யோவான் எழுதிய சுவிசேஷம்.
Thursday, December 22, 2022
Who am I ?
இந்த ஆன்மீக பயணத்துக்கு வந்து விட்டாலே முதலில் சொல்லி கொடுக்கப்படும் விஷயம் என்பது இது ஒன்று தான். வந்து வந்து போன மாமஹரிஷிகள் என அழைக்கப்பட்டவர்கள் பெரிய ஞானம் என வைத்து விட்டு போன கேள்வி இது.இதைப்போல ஒரு பைத்தியக்காரத்தனம் உலகில் வேறெதுவும் இல்லை எனலாம்.நான் யார் என கேட்டு தியானம் செய்து கொண்டிருந்தால் ஞானம் வந்து விடுமாம்.இதை நம்பி பைத்தியக்காரத்தனமாக அலைந்தது எத்தனை காலம்.தானும் கெட்டு தன்னை நாடி வந்தவனையும் கெடுத்து குட்டிச்சுவரானது தான் பலன்.இதனால் ஒரு ஞானமும் ஒரு காலத்திலும் விளையப்போவதில்லை என்பதே நிஜம். நான் யார் என தியானிக்கும் ஒவ்வொருவனும் உண்மையை அறிந்து கொள்ளப்போவதில்லை.ஏனெனில் நான் யார் என கேள்வி கேட்பவன் உண்மையில் நான் என ஒன்று இருக்கிறதா இல்லையா எனக்கூட நிச்சயமாக தெரிந்து கொள்ளாமல் கேட்கும் கேள்வியானது சரியா தவறா எனக்கூட புரிந்து கொள்ளாமல் வாழ்நாள் முழுவதும் இந்த கேள்வி கேட்டுக்கொண்டே மாண்டு போகின்றான்.
நான் யார் என தியானிப்பவன் உண்மையில் நான் என ஒரு பொருள் இருப்பதாக எந்த சந்தேகமும் இன்றி முதலில் ஏற்றுக்கொள்கின்றான்.இருக்கிறதா இல்லையா என யோசிக்கிறவனுக்கு புத்தி வேலை செய்ய ஆரம்பிக்கிறது.இது இல்லாதவனுக்கு புத்தி மந்தம் ஆனதினால் அவன் நேரடியாக நான் யார் என ஆரம்பித்து விடுகின்றான்.
தன்னை அறிவதே தலையாய தவம் என இவனுக்கு கற்றுக்கொடுக்கப்பட்டிருக்க இவன் சுற்றுமுற்றும் பாராமல் முதலிலேயே தன்னை அறிய முற்படுகின்றான்.தன்னை அறிய தன் தலைவனை அறியலாம் என மேலும் இவனுக்கு ஊக்க மருந்து வேறு ஊட்டப்பட்டிருக்கின்றது.போதை கொண்டவன் பைத்தியத்துக்கு சமம்.