Tuesday, October 10, 2023

பிராணாயாமம்

 ஆன்மீகத்தில் மக்கள் பிராணாயாமம் செய்து மனதை ஒருமுகப்படுத்தி இறைவனை காணவேண்டும் என்ற முயற்சி செய்வதில் தவறில்லை.  ஆனால் ஞானிகள் இப்பயிற்சியின் உண்மையை பரி பாடலாக எழுதியுள்ளதால் உண்மை ஞானம் அறியாத ஆசிரியர்கள் நூலைப் பார்த்து மூக்கில் வரும் மூச்சைப் பிடித்து செயல்பட செய்வது ஆபத்துக்குரியது என்பதை ஆசிரியர்களும், மாணவர்களும் தெளிவாக உணர்ந்து பழக வேண்டும். 


ஆச்சப்பா இந்த முறைப் பதிணென் பேரும்

அயன்மாலும் அரனோடும் தேவரெல்லாம் 

மூச்சப்பா தெய்வமேன்றே யறியச் சொன்னார்

முனிவோர்கள் இருடியரிப் படியே சொன்னார்

பேச்சப்பா பேசாமல் நூலைப் பார்த்துப்

பேரான பூரணத்தை நினைவாய்க் காரு

வாச்சப்பா பூரணத்தை காக்கும் பேர்கள்

வாசிநடு மையத்துள் வாழ்வார் தானே – அகத்தியர் ஞானம் – 15 


மேற்படி பாடலின் உண்மைப் பொருளை அறியாத ஆசிரிய பெருமக்கள் மூச்சென்று சித்தர் கூறியிருப்பதாக இப்பாடலையே ஆதாரமாக கூறி மாணவர்களுக்கு கற்பிப்பது தவறாகும். மேலும் 


அறிந்து கொள்ளு சித்தருடைய மறைப்பை எல்லாம்

அகாரமுடிதனில் ஏறி உகாரந்தொட்டுச்

செறிந்துபார் இராசலிங்க சொரூபம் தன்னை

சிகாரத்தின் நடுவெறி மகாரத்துள்ளே 

கருவறிந்து கைலைமலை ஏறினாக் கால்

காணுமடா சின்மயம்தான் கார்மேகம் போல் 

புருவநடு முனையாகிச் சுழியும் ஆகிப் 

புகுந்தனடா பரவெளியில் ஞானமுற்றே.  --- என்றும்


இந்த பாடலில் புருவநடு முனை சுழியாகி விளங்குகிறது என்று கூறப்பட்டுள்ளது.  ஆகவே நடுக்கண் புருவப்பூட்டு என்று வடலூர் வள்ளற்பிரான் கூறியருளியுள்ளது சுழி முனைப்பூட்டு என்கிறது.

இதை ஆசாரியர் அனுக்கிரகத்தால் திறக்கப்பெற்று கொள்வது நலம் என்று கூறுகிறார்.  நெற்றிக்கண், நுதற்கண் என்பதையும் இதனையே ஆகும். 


ஆனால் சுழிமுனை என்பது முதுகெலும்பின் அடிப்பாகத்தில் இருந்து உச்சி வரையில் ஆறு இடங்களில் இருப்பதாக படம் வரைந்து காட்டி ஆயிரக்கணக்கான நூல்களை வெளியிட்டு இருப்பதைக் காண்கிறோம் 


அஷ்டாங்கயோகம், ஆதாரம் ஆறு அவத்தை ஐந்தும் விட்டேறிப் போன வெளி, பரவெளி, சிவவெளி, பெருவெளி முதலிய இரகசியங்களையும் உலகிற்கு முதலிய உணர்த்திய ஆதி பரமகுரு முருகப்பெருமான் ஆவார். 


அதன்பின் அகத்திய மகாமுனிவர், நந்தீசர், புலத்தியர், திருமூலர், பதஞ்சலி முனிவர், போக மாமுனிவர் முதலிய கைலாய பரம்பரைச் சித்தர் மரபினர்கள் இயற்றியருளிய பாடல்களே யோக ஞானத்தின் ஆதாரமாகும். 


இவற்றின் ஆதாரங்களைக் கொண்டு ஆராய்ந்து பார்க்கும் பொழுது, யோக ஞானத்தில் இன்றுள்ள நிலையில் உலகில் மேற்குறித்த விபரங்கள் யாருக்குமே தெரியவாய்ப்பில்லை. 


இதை மக்களுக்கு அறிவித்து, ராஜயோகம் என்ற பெயரில் உலகில் இன்று போலிச் சாமியார்களும், யோகி என்று கூறிக்கொண்டு பரப்பிவிட்டிருக்கும் தவறான பயிற்சிகளால் ஏற்படும் கேடுகளில் இருந்து மக்களை விடுவிக்கும் நோக்கத்தோடு இவற்றை தக்க சான்றுகளோடு விளக்கியுள்ளோம். 


யோகப் பயிற்சியின் முடிவும் பயனும் மெய்ஞானம் பெற்றுக் சாகாநிலை அடைதலே பிறவியின் பயனாகும்.  ஆனால் ராஜயோகம் என்ற பெயரால் என்று விளம்பரப் படுத்தப்பட்டிருக்கும், மூச்சுப்பயிற்சியால் நிச்சயம் ஞானம் பெற இயலாது.   இதைப் பொது மக்களும் உணர்ந்து, நம் உறவினர்கள், அல்லது நண்பர்கள் இம்மூசுப் பயிற்சியில் ஈடுபட்டு இருந்தால், அவர்களுக்கு இந்நூலின் மூலம் விளக்கம் பெறவும், போலி யோகிகளிடம் ஏமாந்து போகாமல் இருக்க உதவ வேண்டும் 


மாண்டுக்கிய உபநிடதம் 


மாண்டுக்கிய உபநிடதப்படி ஆத்மாவாகிய பிரம்மத்திற்கு நான்கு நிலைகள் உள்ளன. 


1. விழிப்புநிலை   -      சாக்கிரதம் (விழிப்பு நிலையில் மனம் செயல்படுவது)

2. சொப்பனநிலை -       கனவு (உறக்க நிலையில் மனம் செயல்படுவது)

3. சுழுத்தி நிலை -       நித்திரை (உறக்க நிலையில் மனம் செயல்படாது 

                                                            இருத்தல்)     

4. துரிய நிலை    -      தன்னுடைய சுயநிலையாகிய ஆன்மா.

                    (விழிப்பு நிலையில் மனம் செயல்படாது இருப்பது – அதுவே தவம்) 


துரிய நிலையில் உள்ள ஆத்மாவுக்கு மற்ற மூன்று நிலைகளும் சொப்பன நிலையாகும்.  இந்த மூன்று நிலைக்குள் உலகம் முழுவதும் அகப்பட்டுள்ளது.  ஆகவே எல்லாம்  பிரம்மம் பிரம்மத்தை சத்தியம் என்போமானால் சத்தியமே சர்வம். 


பிரம்மம்-ஆத்மா- பிராணன்-கடவுள்

ஆத்மாவே பிராணனாகவும், மனமாகவும், புத்தியாகவும், சித்தமாகவும், அகங்காரமாகவும், பஞ்சேந்திரியங்களாகவும் இவைகள் அனுபவிக்கும் உலகங்களாகவும் ஆகின்றது. 


மனம் நான்கு விதமாக திகழ்கின்றது:


1. பஞ்சேந்திரியங்களோடு வியாபாரத்தில் ஈடுபடும் மனம்.

2. மனத்தை அடக்கியாளும் புத்தி 

3. எப்பொருளையும் தனதாகக் கொள்ளும் அகங்காரம் 

4. அதன் சுத்த நிலையாகிய சித்தம் 


இச்சித்தம் தான் இதயத்தில் பிராணனின் உறைவிடம். 


இருக்கும் தன்னுடைய சுயவீடாகிய சித்தத்தில் குடிக்கொண்டிருக்கும் கடவுளிடம் செல்லுவோமானால் விசித்திர அனுபவம் ஏற்படுகிறது.  கடவுளின் அருள் ஏற்படுகிறது. 


இதுதான் உண்மை ஞான அறிவு.  இந்த அறிவால் பிரம்மத்தை அறிந்து கொள்ளலாம்.  எல்லா தத்துவங்களையும் எளிதாக அறியலாம்.  மனம் இப்படி அடிக்கடி கடவுளிடம் போக்குவரத்து வைத்துக் கொண்டு இருக்குமானால் பேரின்பம் உண்டாகும்.  இதனை அடையச் செய்யும் சாதனையே பிராணாயாமம் ஆகும். 


பிராணாயாமம் பற்றி ஞானிகள் கூறும் மெய்ஞான விளக்கம் வருமாறு. 


ஞானவழிவெண்பா – திருமூலர்

நாதவிந்து வென்றும் நடுவனையிலே யிருந்த 

போதமென்று மீண்டும் புகன்றதெல்லாம் ஓதரிய

வாசிக்கே சொன்னா வகையல்லால் வேறன்று 

நேசித்து நீ முனையில் நில். 


நாசிவரும் வாசி நடுவனையிலே மறித்து

ஊசித்துளை வழியே யுள்ளேற்றிப் – பேசும் 

இடமறிந்து சென்றே யெல்லாமும் நீயதுவாய்த்

திடமறிந்து கண்டு தெளி.


கண்டதுண்டந் தானறிந்த காரணராஞ் சற்குருவைத்

தெண்டனிட்டு நின்று தெரிசித்தாற் – றுண்டமதிற்

காலைமே லேற்றுங் கருத்தனைக் – காட்டுவார் 

வேல் முனையைக் கண்டுமே லேற்று. 


உப்பும் புளியும் விட்டு யோகத் திருப்பனென்று 

தப்பிதமா மூச்சடக்கிக் சாகாமற் – றற்பரத்திற் 

பேசாமலே யிருந்தாற் பேரின்பங் காணலாம்

ஆசானைக் கொண்டே யறி.


வாசியென்று மூச்சுதனை வயிறுப்பவே யூதிக்

கூசிமுகங் கோணிக் குருடாவார் நாசிநுனி

தன்னை யறிந்து தவத்தி லிருக்காதார் 

என்ன விருந்து மினி. 


வாசியு மூசியும் பேசி வகையினால்

பேசி யிருந்து பிதற்றிப் பயனில்லை

ஆசையும் அன்பும் அறுமின் அறுத்தபின் 

ஈசன் இருந்த இடம் எளிதாமே. 


பொருள்: பிராணனையும், சுழுமுனையும் பற்றி பேசியும், பேசுவதோடு அவற்றை நெறிப்படுத்தும் முறையை அறிந்து பிறர்க்கு எடுத்து உரைத்தும் ஒரு பயனையும் அடைய முடியாது.  போருள்மேல் செல்லும் பாசத்தை நீக்குங்கள்.  அவ்வாறு நீக்கின பிறகு ஈசுவரன் இருக்குமிடம் எளிதாக உணரப்பெறும். 


வாசி என்பது  பிரமரந்திரம் நோக்கிச் செல்லும் பிராணனுக்கு பெயர், ஊசி என்பது சுழுமுனைக்கு பெயர், ஊசி துளையில் பாம்பு அடைப்போம் என்றார் ஒரு பெரியோர். 


அதன் செயல் கீழ்முகமாகச் செல்லும் அபானனது கதியை மேல் நோக்க செய்தல், பயன் இல்லை என்பது.  வாய் பேச்சால் பயன் இல்லை முதலியவற்றை விட்டவர் இறைவனை அடைவர். 


இடக்கை வலக்கை இரண்டையும் மாற்றித்

துதிக்கையால் உண்பார்க்குச் சோரவும் வேண்டாம்

உறக்கத்தை நீக்கி உணரவல்லார்கட்

கிறக்கவும் வேண்டாம் இருக்கலுமாமே.


இடைகலை, பிங்கலை நாடிகளின் வழிப் பிராணன் இயங்குவதை மாற்றி, சுழுமுனை வழியாகப் பிராணனை செலுத்த வல்லார்க்குத் தளர்ச்சி இராது.  உறங்கும் காலத்தில் விழித்திருந்து, பயில்வார்க்கு இறப்பின்றி அழியாது இருக்கக்கூடும். 


சுழுமுனைத் தியானந்தை அதிகாலையில் தொடங்குவார்க்கு அழிவில்லை என்று திருமூல நாயனார் அருளியுள்ளார். 


சிவானந்தமானது எவ்வாறிருந்ததென்று சொல்ல முடியாது.  அது சுட்டறிவினால் அறியத் தக்கதன்று உணரக்கூடியதாகும்.

No comments:

Post a Comment