"நாட்டமிரண்டும் நடு மூக்கில் வைத்திடில்
வாட்டமுமில்லை மனைக்கும் அழிவில்லை
ஓட்டமுமில்லை உணர்வில்லை தானில்லை
தேட்டமுமில்லை சிவனவனாமே"
=திருமந்திரம்.
தேட்டம் என்றால் தேடுதல் எனப் பொருள்.இந்த தளத்தின் முதல் அறிவிப்பாக வைக்கப்பட்டிருக்கும் கருத்து என்பது," தேடுபவனும் தேடப்படுபவனும் இங்கு இல்லாத போது தேடுதல் என்பது தேவையற்றது எனத் தெளி" என்பதுவாகும்."இங்கு" என இங்கே குறிப்பிடுவது தற்பொழுதை குறிக்காது."இங்கு" என்பது மனதின் ஓர் உன்னத நிலை.அதாவது "இக்கணம்" எனும் அவத்தையில் மனம் விளங்கும் பொழுதையே அது குறிக்கின்றது.மனதில் கடந்த காலமோ அது குறித்தான எண்ணங்களோ இன்றியும்,எதிர் காலமோ அதன் கற்பனைகளோ ஏதுமின்றியும் விளங்கும் நிலை.இதனை வடமொழியில் வர்தமான காலம் என்பார்கள்.அதனால் தான் மகாவீரரை வர்தமானர் என அழைக்கிறோம்.அதாவது சதா நிகழ்காலத்தில் விளங்குபவர்கள் எனப்பொருள்.மனம் எப்போதும் கடந்த காலத்திலோ அல்லது எதிர் காலத்திலோ நிகழ்ந்தவற்றையோ அல்லது நிகழப்போகின்றவற்றையோ பற்றியே உலா வரும்.எப்பொழுது நிகழ்காலத்துக்கு வருகின்றதோ அப்போது மனமற்றுப் போகின்றது.
அடுத்ததாக வருவது,"தேடுபவனும் தேடப்படுபவனும்". அதாவது தியானிப்பவனும் தியானிக்கப்படுபவனும் எனக் கொள்க. இதன் ஊடாக நிகழ்வது தியானம் என்பதுவாகின்றது.தியானம் என்பது தேட்டமாக இருக்கின்றது.தியானிப்பவனும் தியானிக்கப்படுபவனும் அற்றுப் போகும் போது கூடவே தியானமும் அற்றுப் போகிறது.ஏனெனில் அங்கு தேடுதல் முடிந்து போகின்றது.அந்த நிலையே "இக்கணம்".
No comments:
Post a Comment