Wednesday, October 11, 2023

வைராக்கியம்2

 ஒரு யோகியின் சுய சரிதை எனும் நூலை பலபேர் படித்திருப்பீர்கள்.யோகானந்த பரமஹம்ஸர் அதில் இமயமலையின் ரகசியமான ஓர் குகையில் பாபாஜியுடன் இருந்த போது நடந்த ஒரு நிகழ்வை விளக்குகின்றார்.

இதே குகையில் தான் யோகானந்தரின் குருவான லாகிரி மகாசயர் பாபாஜியிடம் தீட்சை பெற்று தியானத்தில் ஆழ்ந்தார்.லாகிரி பிரிட்டீஷ் காலத்தில் ரயில்வேயில் பணிபுரிந்தவர்.ஒருநாள் எதிர்பாராத விதம் அவருக்கு ராணிகஞ்ச் எனும் இமயமலை சாரலுக்கு பணிமாற்றம் நிகழ்ந்தது.அங்கே தான் பாபாஜியை காணும் பாக்கியத்தை லாகிரி பெற்றார்.ஏதோ ஓர் ஈர்ப்பினால் கவரப்பட்ட லாகிரி நடக்க ஆரம்பித்தார்...தூரத்தில் ஓர் சிறுவன் இவரை நோக்கி நிற்பதை கண்டார்.அவனை நெருங்கிய லாகிரியை அச்சிறுவன் அன்புடன் வரவேற்று ..வா வா லாகிரி என கூப்பிட்டு இந்த குகைக்கு அழைத்து வந்திருந்தார்.உள்ளே சுருட்டி வைக்கப் பட்டிருந்த மான் தோல் விரிப்பும் பக்கத்தில் ஓர் கமண்டலவும் இருந்தன.சிறுவன் லாகிரியை நோக்கி ..அங்கே பார் லாகிரி ..உன் கமண்டலவும் விரிப்பும்..நீ வைத்தபடியே அப்படியே இருக்கின்றன என்கின்றான்.அதைப் பார்த்த கணத்தில் லாகிரியின் சித்தத்தில் மாபெரும் ஓர் வெடிப்பு ஏற்படுகின்றது.யுகாந்தரங்களுக்கு பின்னால் அவர் நினைவு பாய்கிறது...அங்கே அந்த குகையில் கோடானு கோடி காலங்களுக்கு முன்னால் தன் குருநாதரிடம் தீட்சை பெற்ற நினைவு திரும்ப வருகிறது..சிறுவனோ லாகிரின் நினைவுகளில் புகுத்து ...எத்தனைகோடி ஜென்மங்கள் கடந்து விட்டிருக்கின்றன..உனக்காக நான் இங்கே காத்துக் கொண்டிருக்கிறேன் என்கிறார்.கண் திறந்து பார்த்த லாகிரி தன்முன்னால் சிறுவனாக நிற்கும் தன் குருநாதரை அடையாளம் கண்டு கொண்டு சாஷ்ட்டாங்கமாக விழுந்து பணிகிறார்.

அதே குகையில் பாபாஜி முன்னால் யோகானத்தர் உட்கார்ந்திருக்கிறார்.அப்போது அங்கே ஓர் மெலிந்த உடலமைப்பு கொண்ட ஒருவர் வலிந்து வருகின்றார்.பாபாஜியின் பக்கத்தில் அனேகம் பேர் ஆழ்ந்த சமாதியில் அமர்ந்திருக்கின்றனர்.வந்தவர் பாபாஜியை பணிந்து வணங்கி தன்னையும் சேர்த்துக் கொள்ள மன்றாடுகின்றார்.ஆனால் கருணையற்ளவர் போல பாபாஜி அவரை மறுக்கின்றார்.கடைசியில் வந்தவர் தன்னை சேர்த்துக் கொள்ளவில்லயெனில் இந்த மலையில் இருந்து குதித்து தற்கொலை செய்துக் கொள்வேன் என மிரட்டல் விடுக்கிறார்.பாபாஜியின் முகத்தில் எந்த சலனமும் இல்லை..முகம் பாராமல் இருந்துவிட...வந்தவர் திடீரென அதளபாதாளமான பள்ளத்துக்கு குதித்து விட்டார்.அனைவரும் தம்பித்து போய்விட்டனர்..பாபாஜியைத் தவிர.மவுனமாகவே இருந்த பாபாஜி சொன்னார்..அவன் எத்தனையோ ஜென்மங்கள் இங்கே மறுபடியும் மறுபடியும் கடினமான பிரயாசைகள் பட்டு வந்து கொண்டே இருந்தவன் தான்..ஒவ்வொரு முறை வரும்போதும் அவனை சேர்த்துக் கொள்ள மறுக்கும் போதும் கொஞ்ச நாள் கழித்து போய் விடுவான்.அப்படி பல ஜென்மங்களை வீணாக கழித்மு விட்டிருக்கின்றான். இப்போது தான் அவனுக்கு வைராக்கியம் வந்திருக்கின்றது..செல்லுங்கள் ..சென்று அவனுடைய சிதறுண்னு போன உடல் பாகங்களை கொண்டு வாருங்கள் எனச் சொல்லி அந்த நபரை உயிர்ப்பித்து சீடனாக்கி அருள் புரிந்தார்.யோகானந்தருக்கு அப்போது தான் புரிந்தது குருவின் திருவிளையாடல்கள்.வைராக்கியம் இல்லாதவனுக்கு வித்தை பாழ்.ஒவ்வொன்றுக்கும் அதற்கான விலை உண்டு.ஒன்றை இழக்காமல் மற்றொன்றை பெற்றுக் கொள்ள முடியாது என்பது ஆன்மீக நிதர்சனம்.ஆணவம் இழக்காமல் ஞானம் வராது.உடலை இழக்காமல் உயிரை பற்றிக் கொள்ள இயலாது.தன்னை இழந்து போகையில் ஒருவன் தன்னை காப்பாற்றி கொள்கிறான் என்பதை கிறிஸ்துவும் சொல்கிறார் என்றால் அதன் உட்கிடை புரிதல் வெகு துல்லியமானது.


No comments:

Post a Comment