Tuesday, October 10, 2023

*சித்திரை திருநாள் இரகசியம்*

 *சித்திரை திருநாள் இரகசியம்*


தவசீலர்களுக்கு ஆத்ம வணக்கம்!


தமிழ் வருடம் என்பது சித்திரையில் துவங்கி பங்குனியில் முடிவது. சூரியனின் நீள்வட்டப்பாதையை (elliptical) பன்னிரண்டு பகுதிகளாகப் பிரித்து , ஒவ்வொரு பகுதியையும் ஒரு ராசியாக கணக்கிட்டு மேஷம் முதல் மீனம் வரை சூரியனின் சுற்றுவட்டப்பாதையைக் கணித்திருக்கிறார்கள் நம் சித்த குருமார்கள்...


சூரியன் மேஷராசியில் நுழையும் நாள் சித்திரை அதாவது ஆண்டுத் துவக்கம், மீன ராசியிலிருந்து வெளியேறும் நாள் பங்குனி முடிவு. அதாவது ஆண்டின் முடிவு.


*_சித்திரை மாசம் ஏன் தமிழ் மாதத்தின் முதல் மாதமாக இருக்க வேண்டும்?_*


சூரியனின் ஒளிகிரணங்கள் அதிகமாக இருக்கின்ற நாட்கள் சித்திரை மாதத்தில் தான். சூரிய ஒளி கிரணங்கள் அதிகமாக இருக்கிற மாதம் சித்திரை மாதம். அதாவது சூரியன் தனது சொந்த வீட்டில் மேஷ ராசியில் இருப்பது சித்திரை மாதம்.


ஒளி கிரணங்கள் அதிகமாக இருக்கிற காரணத்தால் இதை சித்தர்களோட விழாவாக, சித்தர்கள் விழா என இந்த மாதத்தின் முதல் நாளைக்கொண்டாடுகிறார்கள்.


*_சித்திரை என ஏன் பெயர் வந்தது?_*


நமது தேகத்தில் உயிர் பொருள் ஒன்றிருக்கிறது இதற்கு *"சித்"* என்று பெயர்"; ஆன்ம பொருளுக்கு *"சத்"* என்று பெயர். இந்த உயிர் பொருள் ஆன்ம பொருளாக மாற முடியாமலிருப்பதற்கு இடையிலே ஒரு *"திரை"* இருக்கிறது. உயிர்பொருளிலுள்ள மலத்தை, அசுத்தத்தை நீக்கி அந்த திரையை பயிற்சிமுறைகளால் நீக்கத்தெரிந்தால் உயிர் பொருளே ஆன்ம பொருளாக மாறுவதற்கு ஒரு வாய்ப்பு வந்துவிடும். ஆன்மாவாகிய சத்தை காணவிடாமல் சித்தாகிய உயிரை மறைத்துக்கொண்டிருக்கும் திரையை விலக்குவதற்கான நாள் தான் *"சித்திரை திருநாள்".*


இதனை ஏன் *"சித்திரை விஷு"* என்று சிறப்பாக சொல்லக்காரணம் என்னவென்றால் விஷு என்றால் (visual) பார்ப்பது எனப்பொருள். பல ஆங்கில சொற்கள் தமிழ் கலைச்சொற்களிருந்து தான் சென்றிருக்கிறது.


_எடுத்துக்காட்டாக:-_


விஷு - Visual

மாதா - வடமொழியில் மாத்ரு எனத் திரிந்து பின்பு Mother என மாறியிருக்கிறது - பிதா என்பது வடமொழியில் பித்ரு எனத்திரிந்து Father என மாறியிருக்கிறது

ஹோரை - என்பதே மருவி "Hour" ஆகியிருக்கிறது

எனவே விஷூ என்றால் காண்பது என்றுபொருள்,


எதைக் காண்பது???


இந்த *சித்தாகிய உயிர் பொருளிலுள்ள திரையை விலக்கி ஆத்மாவாகிய மெய்பொருளைக் காண்பதற்கான வசந்தகாலப் பண்டிகையே சித்திரை விசு.*


தமிழ்நாட்டில் நாகர்கோவில், மற்றும் கொங்கு மண்டலத்திலுள்ள ஈரோடு, திருப்பூர் போன்ற இடங்களில் மற்றும் கேரளாவிலும் இன்றைய தினத்தில் "சித்திரை கனி" எனும் ஒரு நிகழ்ச்சி நடக்கிறது. அதிகாலையில் அந்த வீட்டிலுள்ளவர்களைக் கண்ணைத் திறக்காமல் கூட்டிக்கொண்டு போய் கண்ணாடியின் முன்பு நிறைய பழங்களை வைத்து அப்பழங்களை கண்ணாடியின் வழியாக பார்க்கச்சொல்கிறார்கள். இந்த கனிகாணும் நிகழ்வுக்குப் பின்னால் ஒரு ஞான சூட்சும பயிற்சி முறையையே மறைமுகமாகக் கற்றுத்தருகிறார்கள் நமது சித்தகுருமார்கள்....


நமது பிண்டமாகிய உடலிலும் *_"கண்ணாடி"_* ஒன்றிருக்கிறது...... இந்த கண்ணாடி இப்பொழுது நமக்கு ஆடிக்கொண்டிருக்கிறது, இக்கண்ணாடியை முதலில் ஆடாமல் நிறுத்தப் பழக்கிக்கொண்டு இதன் வழியாக நமக்குள்ளிருக்கும் ஆத்மனாகிய *_"ஞான"_* பழத்தை தரிசிக்க முடியும். பழம் என்றால் *_"பழமையான பொருள்"_* என அர்த்தம்... இதனையே


*கண்ணாக்கு மூக்கு செவி ஞானக் கூட்டத்தில்*

*பண்ணாக்கு வைத்த பழம் பொருள் ஒன்றுண்டு*

*அண்ணாக்கினூடே அகண்ட வொளி காட்டி*

*பண்ணாக்கி நம்மைப் பதித்தவரே...* - என


சித்தர்கள் சொல்கின்றனர் . அந்த பழம்பொருளை பார்க்க வேண்டியதின் அவசியத்தை சூட்சுமமாக நமக்கு புரிய வைப்பதற்குத்தான் கணிகாணும் பண்டிகை.


சித்த புருஷர்கள் நமக்கு சூட்சுமமாகக் கருணையோடு கொடுத்த இந்த சிறந்த நாளைத்தான் *"சித்திரை திருநாள்"* என்றும் சித்திரை விசு என்றும், *"தமிழ் புத்தாண்டு தினமாகவும்"* கொண்டாடுகிறோம். நாம் கொண்டாடும் ஒவ்வொரு பண்டிகைக்குள்ளும் ஆன்ம இரகசியம் புதைந்திருக்கிறது, சிந்தித்தால் ஞானம் பிறக்கும். சிந்திப்பவனே மனிதன்..


உங்கள் அனைவருக்கும் எனது சித்திரை விஷு தின வாழ்த்துக்கள். 



No comments:

Post a Comment