இந்த ஆன்மீக பயணத்துக்கு வந்து விட்டாலே முதலில் சொல்லி கொடுக்கப்படும் விஷயம் என்பது இது ஒன்று தான். வந்து வந்து போன மாமஹரிஷிகள் என அழைக்கப்பட்டவர்கள் பெரிய ஞானம் என வைத்து விட்டு போன கேள்வி இது.இதைப்போல ஒரு பைத்தியக்காரத்தனம் உலகில் வேறெதுவும் இல்லை எனலாம்.நான் யார் என கேட்டு தியானம் செய்து கொண்டிருந்தால் ஞானம் வந்து விடுமாம்.இதை நம்பி பைத்தியக்காரத்தனமாக அலைந்தது எத்தனை காலம்.தானும் கெட்டு தன்னை நாடி வந்தவனையும் கெடுத்து குட்டிச்சுவரானது தான் பலன்.இதனால் ஒரு ஞானமும் ஒரு காலத்திலும் விளையப்போவதில்லை என்பதே நிஜம். நான் யார் என தியானிக்கும் ஒவ்வொருவனும் உண்மையை அறிந்து கொள்ளப்போவதில்லை.ஏனெனில் நான் யார் என கேள்வி கேட்பவன் உண்மையில் நான் என ஒன்று இருக்கிறதா இல்லையா எனக்கூட நிச்சயமாக தெரிந்து கொள்ளாமல் கேட்கும் கேள்வியானது சரியா தவறா எனக்கூட புரிந்து கொள்ளாமல் வாழ்நாள் முழுவதும் இந்த கேள்வி கேட்டுக்கொண்டே மாண்டு போகின்றான்.
நான் யார் என தியானிப்பவன் உண்மையில் நான் என ஒரு பொருள் இருப்பதாக எந்த சந்தேகமும் இன்றி முதலில் ஏற்றுக்கொள்கின்றான்.இருக்கிறதா இல்லையா என யோசிக்கிறவனுக்கு புத்தி வேலை செய்ய ஆரம்பிக்கிறது.இது இல்லாதவனுக்கு புத்தி மந்தம் ஆனதினால் அவன் நேரடியாக நான் யார் என ஆரம்பித்து விடுகின்றான்.
தன்னை அறிவதே தலையாய தவம் என இவனுக்கு கற்றுக்கொடுக்கப்பட்டிருக்க இவன் சுற்றுமுற்றும் பாராமல் முதலிலேயே தன்னை அறிய முற்படுகின்றான்.தன்னை அறிய தன் தலைவனை அறியலாம் என மேலும் இவனுக்கு ஊக்க மருந்து வேறு ஊட்டப்பட்டிருக்கின்றது.போதை கொண்டவன் பைத்தியத்துக்கு சமம்.
No comments:
Post a Comment