Monday, November 28, 2022

குரு தொட்டு காட்டிய எல்லை

Sunday, July 21, 2019 குரு தொட்டு காட்டிய எல்லை புரிதல் இல்லாதவர்களுக்கு ஆயிரம் காலம் சொன்னாலும் குரு தொட்டு காட்டிய எல்லை சொல்லி புரிய வைப்பது மெத்தக்கடினம். அது தான் உண்மை. வித்தை என்பது லட்சியம் கொண்டது. லட்சியத்தை காணாது பிரயாணம் செய்வது தான் உலக நடைமுறை. முதலில் நாம் அடைய வேண்டிய இலக்கு எது என ஒரு ஆசான் நமக்கு உணர்த்த வேண்டும். இலக்கை கண்டு கொண்ட பிறகு தான் பிரயாணம் ஆரம்பமாகும். உலக நடைமுறை என்பது எதாவது ஒரு வித்தையை செய்துகொண்டிரு நீ அங்கே இறைவனை அடைவாய் என சொல்லி விட்டு போய் விடுவார்கள். இதை தான் கூழ் முட்டைத்தனம் என்பது. உண்மையில் குரு பரம்பரையில் முதலில் ஒரு விலக்கை ஏற்றி வைப்பார்கள். அது தான் இலக்கு. அதாவது நமது லட்சியத்தை அன்றே காட்டித்தருவார்கள். அறிவுக்கு அறிவாக கோடி சூரிய பிரகாசத்தை உபதேச சமயத்திலேயே காட்டி விடுவார்கள். அதை பிரயாணம் செய்து அடைவது சீடனின் கடமை. ஏராளம் ஆன்மீகவாதிகள் ஒரு ஜென்மம் முழுதும் கதை பேசி நம்பி ஏமாந்து கடைசியில் வலிய உணர்ந்தே போயிருக்கின்றனர், சீடர்கள் கூட சிரிக்கும் அளவுக்கு கதி கெட்டு அதோகதியாகி இருக்கின்றனர். சொல்லும் போது பெருசாக சொல்லுவார்கள், அனுபவத்தில் பூச்சியம், தெக்கும் தெரியாது வடக்கும் தெரியாது பெரிய மடாதிபதிகளாக வலம் வருவார்கள். கடைசியில் தலை கூட வெளியே காட்ட முடியாத படிக்கு கேவலமரணம், நாய் கூட இப்படி நாறி சாகாது. அறிவிருந்தும் அதை பிரயோசனபடுத்த தெரியாது நாறி செத்து விடுகிறார்கள். அறியவேண்டிய அறிவை அறியாமல் மிதப்பாக திரிவார்கள். எதாவது கேட்டா நாடி காற்றுண்ணு பதில் வரும்.. யாரிடம் சொல்ல எனத்தான் வந்த வந்த பெரியவர்கள் எல்லாம் சொல்லாமலேயே சென்றிருக்கின்றனர். தன்னை விட்டு தானல்லாமல் மற்றொன்று இல்லை, எல்லாம் தானே தன்மயமே தான். மற்றை எல்லாம் கற்பனை மனம் தானன்றி பலதாய் கற்பித்து தன்னையே தான் ஏமாற்றி திரிகிறது பொய் மனம். "நான்" "நான்" என ஏதொன்று சதா மனம் கற்பித்துகொண்டிருக்கின்றதோ அது உண்மையில் தானல்ல, அது மனதின் கற்பிதம். நான் இங்கு இல்லவே இல்லை என்பதே மெய்மை

ஆன்மீகம் ஒரு பொழுதுபோக்கா!

ஆன்மீகம் ஒரு பொழுதுபோக்கா! இச்சைக்கிருந்தும் இறையாசை இன்றேல் பச்சைக்கிருந்தும் பசிதாகம் வேண்டேல் உச்சிக்கிருந்தும் ஒருபோது உண்ணல் பச்சைக்கிளியே பரந்தாமன் வாராரோ..... சாதாரன மக்கள் ஆன்மீகம் என்பது சும்மா ஒரு பொழுதுபோக்காக ஆன்மார்த்தமாக வைத்துகொள்வது கிடையாது, எல்லாம் தெரிந்துகொள்வது அவ்வளவுதான், அல்லாது இந்த சென்மசாபல்யம் கிடைக்கவேண்டும் எனும் ஆழ்ந்த உணர்வு தோன்றுவது கிடையாது, ஆழத்தின் ஆழத்தில் பீறிட்டெழும் வெடிப்பு தான் ஆன்மீகத்தின் உச்சத்தை தொடும், அடையத்துடிக்கும் ஏகாக்கிரதை, பந்தங்களின் மேல் விரக்தி, இது இரண்டும் சேர்ந்ததுதான் பக்தி எனப்படுகின்றது.சும்மா வெறும்பாட்டுக்கு நானும் ஆன்மீகவாதி தான்ணு இருக்கிற பலபேரை தெரியும், அதன் விளைவாக எழுந்தபாடல் இது. இதன் விளக்கம் வருமாறு: ”இச்சைக்கு என ஆன்மீகத்தை கொண்டு நடப்பர், ஆனால் இறை ஆசை என்பது ஆழமாக இருக்காது, அன்பு பக்தி பெருக்கெடுத்து ஆற்றாத புண்ணைப்போன்று சதா ஆழ்மனதில் படர்ந்து ஒருவித ஏக்கத்தையும் துன்பத்தையும் வருத்தத்தையும் தராமல் இருப்பின்,பச்சையான துளசி இலையை பறித்து தின்று கொண்டு விரதம் இருப்பவர்கள் பலர்,அதுபோல பசி தாகத்தத்தை அடக்கி விரதம் இருப்பவர்கள் பலர், உச்சிவேளையில் மட்டும் ஒருபோது சிறிது உணவு மட்டும் கொண்டு விரதம் இருப்பவர்கள் பலர், இவ்வண்ணமான விரதங்களை கொண்டிருப்பவர்கள் பால் கருணைகொண்டு பச்சைமால் அருகில் உறையும் பச்சைகிளியான ஸ்ரீதேவியே பரந்தாமன் வருவாரோ?” என கேள்வியாக கேட்க்கபட்டுள்ளது

“ம்

“ம்” தமிழ் எழுத்துக்களில் ஒன்று. மேலும் தமிழ் நெடுங்கணக்கில் மெய்யெழுத்தான ஓர் மெல்லெழுத்து. “ம்” - அது  தனக்குள்ளேயே சுழன்றாடும் ஓர் உசும்புதல். மேலும் அது புரிந்து உணர்தலின் ஒப்புதல் வெளிப்பாடு - ஆன்மாவின் சாட்சி ! அதற்கு தொடக்கமும் இல்லை ! முடிவும் இல்லை ! குருபிரானின் குருகுலத்தில் வாழ்பவர்களுக்கு – மந்திர உச்சரிப்பில்  “ம்” மை சற்று அழுத்தமாகவும் நீட்டியும் சொல்லி குரு பிரான் பழக்குவார்கள். சான்றோர் இதை மகர மெய் எழுத்து என குறிக்கின்றனர்.  மகரம் என்பதை பொன்னம்பல மேட்டில் உதிக்கும் ஒளி என்பர். ம் + அகரம் = மகரம். “அகரம்”  என்பதற்கு கற்றோர்  பலவிதமாக விளக்கம் அளித்திருந்தாலும் உள்ளார்ந்த புரிதலில் அது ஞான சூரியனாக விளங்கும் சற்குருபிரானிடமிருந்து வெளிப்படும் ஞானோபதேசப்  பேரொளி என்றால் அது மிகையல்ல. “ஓம்”  என்ற பிரணவ மந்திரத்திலும் குர்ரானின் தலைவாசலில் ஒளிரும் - அலிஃப் லாம் மீம் என்பதிலும் “ம்”  பிரம்மோபதேச பீடமாய் இசைந்துகொண்டிருப்பதால் இதை அவரவர் தங்களின் ஆன்மீகத் தேடுதலில் தொடர்வதே சிறந்தது. தெளிந்தோடும் ஆற்று நீரில் தன் தாகத்திற்கு ஒருவன் தன் இரு கைகளைக் கொண்டு அன்னீரை அள்ளிப் பருகி தன் தாகத்தைத் தீர்த்துக் கொள்ளுதல் போலே – நாம் “ம்” எனும் புதையலான ஊற்றிலிருந்து சிறிது அள்ளிப் பருகி உள்ளோம்.

தூக்கம் என்பது "கவனம் அற” நிகழும் சங்கதி

தூக்கம் என்பது "கவனம் அற” நிகழும் சங்கதி கேள்வி: மனம் என்பதே உயிரின் அம்சம் தானே உயிர் சக்தியின் செலவிடுதலே மனதின் இயங்கும் நிலை இதில் ஒடுங்குவதும் அடங்குவதும் உயிரின் சுயம் அன்றி வேறென்ன. . .ஐயா? Hseija Ed Rian: உயிர் இருப்பதனால் தான் மனம் இயங்குகிறது என்பது தெரிந்த ஒன்று... ஆனால் மனமானது உயிரின் அம்சம் தான் என்பது தெரியாத ஒன்று அல்லவா? உயிர், உடல், மனம் வெவ்வேறானவை, வெவ்வேறு குணாதிசயம் சேர்க்கையில் இயைந்து இயங்குவது. உயிரின் அம்சம் உடலுக்கு இருக்காது.... உடலின் அம்சம் உயிருக்கும் இருக்காது... உயிரின் அம்சம் மனதுக்கு இருக்காது.. மனதின் அம்சம் உயிருக்கும் இருக்காது... ஆனால் உடலெனும் கூட்டில் இவை அடக்கம். "நான்" என்பதே மனதின் ஆணிவேர்... சூட்சுமமாக அனுபவத்தில் நிலைகொளத்தான் அது புரிதலுக்கு வரும்... "நான்" இருப்பதினனல் மனம் என இருக்கிறது. "நான்" என்பது தான் மனம் என மலர்ந்திருக்கிறது... எப்போது "நான்" இல்லை என ஆகிறதோ.. அப்போது மனம் இல்லை என்றாகிறது. மிஞ்சுவது அறிவு மட்டுமே.. ஞானசொரூபமான வஸ்த்து. கேள்வி: தூக்கத்தை பற்றி உங்களது கருத்து என்ன? Hseija Ed Rian: தூக்கம் என்பது "கவனம் அற” நிகழும் சங்கதி. அனைத்திலும் கவனம் அற்று போகையில் தூக்கம் நடக்கும்... அக மற்றும் புற நிகழ்வுகளில் இருந்து கவனம் அற அது வரும். இதுக்குத்தான் எவ்வளவோ சொல்லியும் ..மொக்கை என சொல்ராங்க...ஒருவேள சரியா இருக்குமோ? கவனம் என்கிறதை பற்றுதலே தூக்கம் வராம இருக்க வழி. கேள்வி: கவனிப்பவனை கவனித்தால் தூக்கம் வருவதை தடுக்கலாம் அப்படிதானே!!!! ???? Hseija Ed Rian: உபநிஷத்துகளில் ஒரு வசனம் ஞாபகத்துக்கு வருகிறது.. "உத்திஷ்ட்ட ஜாக்ரத” என்பதாகும். அதாவது ”ஜாக்கிரதைக்கு எழுவாயாக” என்பதாகும்.அதாவது கவனத்தை பற்றுவாயாக என விளக்கம். கேள்வி: கவனத்தை பற்றுதல் தான் வள்ளலார் சொன்ன "விழித்திரு" என்பதா? Hseija Ed Rian: ஆமாம். கேள்வி: மனம் உயிரில் ஒடுங்குவதுதான் தூக்கமா? Hseija Ed Rian: தூக்கத்துலயும் சரி விழிப்புலயும் சரி உயிர் இல்லாம இவை இல்லையே... மனம் உயிரில் இருந்து தோற்றம் பெற்றால் அல்லவா அதில் சென்று ஒடுங்கவும் தெரிந்திருக்கும்...அல்லவா? தூக்கத்தில் ஒடுங்க மனதுக்கு தெரிந்திருந்தால் மரணத்தின் போதும் ஒடுங்க முடிந்திருக்குமே... தெரியாததினால் அல்லவா உயிர் விட்டு போகிறது...அல்லவா? கேள்வி: உயிர் நிலைக்க பிராணன் அவசியமல்லவோ ...? Hseija Ed Rian: கருப்பையில் உயிருடன் இருந்த சுக்கில துளிக்கு ஏது பிராணன்? உயிரில் இருந்து பிராணன் வந்த பிற்பாடல்லவா மனதுக்கு மூன்று நிலை... சுக்கில துளிக்கு ஏது கனவும் நனவும்? கேள்வி: ஐயா. மரணத்தை சந்திக்கும் போது உயிர் பல கொடுமைகளை சந்திக்கும் என்று சொல்ராங்க அப்படி தூக்கம் வரும் போது ஏதுமில்லையே!!? Hseija Ed Rian: தூக்கத்தில் மனம் சப்தத்தில் ஒடுங்கியிருக்கும்.. மனதின் சூட்சும தன்மாத்திரையான ஆகாய ரூபம். மரணத்தில் இது இருக்காது. ஆகாய தன்மாத்திரையான சப்தம் உயிருடன் ஒன்றியிருக்கும்...  ஆகையினால் அது ‘விட்டு போகாது’... மரணத்தில் விட்டு போகும்.. கேள்வி: தாயின் கருவில் உள்ள குழந்தை எப்படியா தூங்குது? Hseija Ed Rian: ஐயா.. இங்க ரெண்டு நிலைகள் கவனிக்க தகுந்தவை. பிறவிக்கு முன் பின் என. பிறக்கிறதுக்கு முன்ன பிராணன் வெடிக்கா நிலை... பிறவிக்கு பின் பிராணன் வெடித்த நிலை. சாதாரணமாக பிறவிக்கு பின் நிகழகூடிய மூன்று அவஸ்த்தைகளையே "நனவு, கனவு, தூக்கம்" என வகைபடுத்தி கொள்ளுகிறோம். கருவில் மனம் மொட்டாக இருக்கிறது, அதனால் மனம் வியாபிக்கவில்லை... மனம் வியாபிக்க வாயு விசும்பிதல் ஆகவேண்டும். கண்டம் பிரியவேண்டும். முதல் அழுகையினால் கண்டம் பிரிகிறது... அதற்க்கு முன் பத்தாம் மாதமும் சரி ஒன்றாம் மாதமும் சரி.. எல்லாம் வளர்ச்சி நிலை நோக்கி நகருதல் தாம்.. நிறை ஆகவில்லை. பிராணன் வெடிக்க மனம் சலனம் ஆரம்பிக்கின்றது. மூன்று அவத்தைகள் மனதுக்கு வந்து சேருகின்றது. கேள்வி: ஐயா கருவில் குழைந்தைக்கு சுவாசம் எப்படி நுகரும் தன்மை எப்படி? Hseija Ed Rian: சுவாசம் வெடிக்காது என சொன்னதினாலே புரியவேண்டியது.. அது ஒரு இடத்தில் சுழன்று கொண்டிருக்கும் என்பது தான்... இதனையே "சக்கரம்" என்பர். வெட்டுபட்ட சக்கரம் எனவும் வெட்டாத சக்கரம் என இரண்டு... வெட்டுண்ட சக்கரம் துண்டாகும்... துண்டான சக்கரம் கலை சிறுக்கும்... வெட்டாத சக்கரம் துண்டாகாது.. கலை சிறுக்காது... தட்டுண்டு போகாமல் தலைபடுவது எக்காலமோ..தெரியலியே ஐயா..

வாலறிவும் தலையறிவும்

வாலறிவும் தலையறிவும் ரியான் அண்ணாவிடம் உத்தரவு வாங்கி கொண்டு இந்த பதிவை பதிவிடுகிறேன். அண்ணனின் கருணைக்கு கோடி நமஸ்காரங்கள்.. அறிந்தோர் அறிந்திடுங்கோ! அறிவுள்ளோர் கேட்டிடுங்கோ! தெரிந்தோர் தெரிந்திடுங்கோ! உங்கள் சித்தம்பல தாண்டவரை! ..... சிவகாண்ட அதிகாரப்பத்திரம் ...(அய்யா வைகுண்டர்) நாம பல இடங்களில் ‘வாலறிவு, வாலறிவன்” எனும் வார்த்தைகளை பார்த்திருக்கிறோம், அதன் விளக்கங்களையும் பார்த்திருக்கிறோம், ஆனால் *"வாலும் தலையும்"* அறியாமல் இருக்கிறோம். இது ஒரு உருவகம், ஞான உருவகம், சில விஷயங்களை சூட்சுமமாக சித்தரிக்கும் முறை, அதாவது ஃபார்முலா மாதிரி அல்லது குறியீடு மாதிரி. அந்தந்த குறியீடு அந்தந்த துறைகளில் பணியாற்றுபவர்களுக்கு மட்டும் தெரியும், எது எதை குறிப்பிடுகிறது என்பது, அதன் விளக்கம் இன்னது என்பது.தெரியாதவர்களுக்கு அதன் அர்த்தம் தெரியவராது. அது போலத்தான் குண்டலினீ என்பதும். நம்ம மக்கள் ஏதோ பாம்பு சுருண்டு படுத்திருக்கிறது மாதிரி கற்பனை பண்ணிக்கொள்வார்கள், கதையும் விடுவார்கள். மனிதர்களுக்கு அருளப்பட்டிருக்கும் அற்புத தனித்தன்மை என்பது ஓசை ஒலிநய பாஷை கையாளும் தன்மை. இந்த அறிவு *"வாக்கறிவு"* எனப்படுகிரது. பரை விரித்த கோலம், ஏராளமான புள்ளிகள் போட்ட அற்புதக்கோலம். ஒவ்வொரு கோலமும் ஒவ்வொரு பாஷைகள் போல போட்டு வைத்துள்ளனர் முன்னோர்கள்.ஒவ்வொரு கோலத்துக்கும் ஒரு வித தன்மை உள்ளர்த்தம் கூட இருக்கும், உருவகம் இருக்கும். நம்மில் இயங்கும் ஆற்றல், பிராணசக்தியின் வெளிப்பாடு பல வித கோணங்களில் இருக்கின்றது. அவற்றில் முக்கியமானது பேச்சும் மூச்சும் தான். மூச்சு தலை என்றால் பேச்சு வால். மூச்சின் எழுத்து தான் தலையெழுத்து என்பது, பேச்சின் எழுத்து வாலெழுத்து. மூச்சு சிவம் என்றால் பேச்சு சக்தி, மூச்சு பேசா எழுத்து என்றால் பேச்சு பேசும் எழுத்து.இந்த பேச்சு மூச்சினுள் ஒடுங்கி நிற்கின்றது. அதாவது குண்டலினீ தன் வாலை வாயினுள் கவ்விகொண்டு துயில்கிறது என கற்பனை உருவகம். பிராணாயாமம் முதலான சம்பிரதாயங்களினூடே எவ்வண்ணம் குண்டலினீ சக்தியை உணர்வு நிலைக்கு கொண்டு வருகிறோமோ அவ்வண்ணம் மற்றொரு முறை தான் பேச்சு சக்தியை கொண்டு உணர்வு நிலைக்கு மேலேறும் முறையும்.இதை ஓதி ஓதி உணர்தல், ஓதாதுணர்தல் என வகைபடுத்துவர் ஞானியர்கள். பேச்சின் சூட்சும அறிவு நிலைக்கு பரையறிவு அல்லது வாலறிவு என்பர். பர வித்தை என்பதும் இதை கொண்டு இயற்றப்படும் சம்பிரதாயம்தான். இவ்வண்ணம் பிராணனுக்கும் பேச்சுக்க்கும் மையமாக திகழ்வது ஒரு அமானித விந்துநிலை. அதற்க்கு தான் வித்யா தத்துவம் என பெயர் வைக்கபட்டிருக்கின்றது. எழுநிலை சூட்சுமம் அது, அதில் இருந்து கிளம்புவதால், அமிர்த விந்துவுக்கு எழுத்து என பெயர் வைக்கபட்டிருக்கின்றது. அட்சர சொரூபமாக வாலறிவாக விளங்குவதால் சித்சொரூப சக்திக்கு வாலை என பெயர். அதாவது அமிர்த சொரூபமாக சதா வடிந்து கொண்டிருப்பவள், அமிர்த பாஷிணி. அதி சூட்சுமத்துக்கு செல்லாமல் சற்று குறுக்கி கொண்டமைக்கு மன்னிக்கவும்

பிரம்மஞானத்தின்கண்

பிரம்மஞானத்தின்கண் அவா கொண்டு இருப்பவர்கலை கூட பிரம்மம் என்பது கூட பொய் என சொல்ல விழைகின்றேன். அதுவும் கூட மூடத்தனம் என சொல்வதில் தயக்கமில்லை ஜீ தான்’ அற்றிடத்தில் குணம் இல்லை ஐய்யனே..குணத்திற்க்கு ஆதாரம் ’தான்’ அன்றி வேறில்லை.’தானாகி தன்மயமாய்’ இருப்பது கூட மூடத்தனமே.’தான்’ அற்றவனே தலைவன். தன்னை’ இழப்பது வித்தையின் சொருபம், அதைத்தான் யுக்தி எனவும், உளவு எனவும், தந்திரம் எனவும் புகல்வர் மெய்ஞானியர்.’தன்னை ‘இழப்பது தான் குருமொழி,மவுனமான பாஷை. தன்னை அறியாமல் தவிக்கும் மாக்களுக்கு தன்னை காட்டி,தன் சொருபம் காட்டி, தன் தன் மாயையின் அடையாலம் காட்டி, தன்னை இழக்கும் தவம் காட்டி, அறிவிக்க செய்தலே உபதேசம். அல்லாது வாயாலே முணுமுணுக்கும் மந்திரமோ, கழுத்தையும் நெஞ்சையும் நிமிர்த்தி இருந்து கொண்டு மூச்சை பிடிக்கும் செயலோ, கண்ணை உருட்டி விழித்து கொண்டு மேலேயும் கீழேயும் உற்று பார்த்து பரிதவிப்பதோ மாத்திரை பிரமானம் காட்டி அங்க நியாச மணி மந்திர அவௌடதங்கலை காட்டி தீபதூபம் போடுவது அல்ல  தன்னை காண ,தன் நிலை காண மட்டுமே தான் பொய் என தெரியும், பொய் என திரியும், அவ்வண்ணம் பொய்யை மெய்யென்று கொண்டு திரியும் மயக்கம் பிரியும். மயக்கம் பிரிய வெளி புரியும்  ஓம் என பிரிண்ட் போட்டு வெச்ச படத்தை கண் இமைக்காமல் பார்த்துகிட்டு இருந்து ,அந்த ஓமின் மத்தியில் இருந்து ஒளி பீறிட்டு கெளம்புண்ணு நிச்சயித்து10 வயது முதல் 12 வயது வரை சாதனை பண்ணினவன் நான், இப்பத்தான் புரியுது அந்த சாதனை எந்தளவு அருமையான சாதனை என.ஹ..ஹ..ஹ

அதோகதியாகிய சுவாசத்தை சுவாசித்து கொண்டிருக்கின்றார்

ஒருவர் அதோகதியாகிய சுவாசத்தை சுவாசித்து கொண்டிருக்கின்றார் என கொள்க,ஊர்த்வகதியினை அறிந்த ஒருவர் அதோகதியானவர்களே நீங்கள் சென்று கொண்டிருப்பது அதோகதி,நீங்கள் அதோகதியானவர்கள்.ஆகையினால் அதை விடுத்து பரிபூரணமான ஊர்த்வகதியினை நோக்கி பிரயாணம் செய்யுங்கள் என அழைத்தால் ,அது எவ்வண்ணம் குறையாகும்?.ஏசுநாதர் பாவிகளை ரட்சிக்கவே வந்தேன் என்கிரார்,அவர் பாவிகலையே அழைக்கிறார்,நீதிமான்களையல்ல.பாவிகளே மனந்திரும்புங்கள் எனத்தான் அழைக்கிறார். அவ்வண்ணம் பாவிகளை பாவம் செய்பவர்களே என அழைத்து அவர் உபதேசித்தது தவறா வந்த வந்த எல்லா பாரவான்களும் தவறான மக்களிடத்திலேயே வந்தனர்,அவர்களின் தவறுகலை சுட்டிகாட்டவே வந்தனர்,அவர்களின் தவறுகலை சுட்டி காட்டி மனந்திரும்புதலை உபதேசிக்கவே வந்தனர்,ஒளியினிடத்திர்க்கு அழைக்கவே வந்தனர்.அவர்கள் அவ்வண்ணம் செய்துகொண்டும் இருப்பர் எக்காலத்தும்

உயிர் எங்க இருக்குது? உயிர் எழுத்து எங்க இருக்குது?

உயிர் எங்க இருக்குது? உயிர் எழுத்து எங்க இருக்குது? உலகத்துல பொறகிற எல்லா கொழந்தைங்களும் உச்சரிக்கிற முதல் உயிர் எழுத்து தானே எம்மொழிக்கும் முதலான உயிர் எழுத்தாக இருக்கமுடியும்? அல்லவா..? அதை சொல்லி முதலெழுத்து என காட்டாமல் எதையோ காட்டி உயிரெழுத்துங்கறாங்களே, இதை விட கொடுமை என்ன இருக்கமுடியும்? ... அப்படித்தானே? "இயற்கை உண்மை.. இயற்கை உண்மை” என சன்மார்க்கிகள் கத்துறாங்களே, இதுவல்லவா இயற்கை உண்மையாக இருக்கமுடியும்...??? கொழந்தை மொதலிலே உயிர் அடையாளமானதை வெளிப்படுத்தி அழும்போதல்லவா காத்து கிட்டு நிண்ண தாய்க்கும் தகப்பனுக்கும் சுற்றத்தார் உறவினருக்கும் மகிழ்ச்சி பொங்கும்?.. "உயிர் வந்திருச்சு” என்கிறார்கள்... அப்படித்தானே?.. அப்ப உயிர் எங்க இருக்குது? உயிர் எழுத்து எங்க இருக்குது?... இப்ப புரியுது போல தெரிகிறது அல்லவா.

சாகும் உயிருக்கு சாகாகல்வி

சாகும் உயிருக்கு சாகாகல்வி சாகாகல்வி என்பது சாகாமல் இருக்கும் உயிருக்கு தேவை இல்லையே... சாகும் உயிருக்கு அல்லவா சாகாகல்வி தேவை????? அவ்வண்ணம் சாகும் உயிரை அறிந்து அது சாகா நிலையை அறிந்து அடைந்து கொள்ளுதலே சாகாகல்வி. இறந்துவிடும் உயிரை இறவாத உயிருடன் சேர்ப்பதே சாகாகல்வி ... அதுவே சன்மார்க்கம்

காலிங்க நர்த்தனம்.

காலிங்க நர்த்தனம். கால் என்றால் மூச்சு அல்லது காற்றைக் குறிக்கும் பதமாகும். காற்று என்கிற போது நம் உடலில் பத்து வாயுக்கள் உள்ளன. அவைகளை தச வாயுக்கள் என்போம். அவைகள் முதன்மை வாயுக்கள் ஐந்து, உப வாயுக்கள் ஐந்து என்று இரண்டு பிரிவாகப் பிரித்து சொல்லப்பட்டுள்ளது. இந்த முதன்மை வாயுக்கள் ஐந்தும் பஞ்ச பிராணன்கள் எனப்படும். இவற்றில் ஏற்படும் நிறை குறைகளால் பிராணனில் சலனம் ஏற்படும். பிராணனின் சலனமே மனதின் சலனமாகும். இவற்றை அடக்கி நேர் படுத்தினால் பிராணன் அடங்கும். பிராணன் அடங்கினால் மனம் அடங்கும். மனம் அடங்கி செயலற்றுப் போனால் இறை தரிசனம் கிட்டும். இந்த பஞ்ச பிராணனின் ஐந்து தலைகளையே நாகேந்திரனின் ஐந்து தலைகளாகக் குறிப்பிட்டு, அதை அடக்கினால் இறைவனின் திருக்கூத்தை திரு நர்த்தனத்தைக் காணலாம் என்பதை உணர்த்தும் கதையே காலிங்க நர்த்தனம். யோக இரகஸியத்தை உணர்த்துவதாகும். பஞ்ச பிராணன்கள் என்கிற போது, பிராணவாயு இதுவே எல்லாவற்றிலும் தலையாயது. இது மற்ற எல்லா வாயுக்களுக்குள்ளும் சூக்குமமாக உள்ளதாகும். இதை யஞ்ஞோபவீதம், பிரம்ம சூத்திரம், ஹம்ஷம், பிராணன், உயிர், ஜீவன், நூல், வாசி, கால், பாதம், குதிரை என்று பல பெயர்களால் குறிப்பிடுவார்கள். எனவேதான் இதை ஐந்து தலைகளில் நடுவில் வைத்து அதன் மேல் உச்சியில் பரமாத்மா நின்று ஆடுவது போலக் குறிப்பிட்டார்கள். பிராணனுக்கு வலது புறம் உள்ள தலையானது அபானனாகும். இது குதப் பகுதியில் உள்ளது. அதை ஒட்டி வலது புறம் அமைந்தது ஸமானன் இது நாபிஸ்தானத்தில் உள்ளது. பிராணனை ஒட்டி இடது புறம் உள்ள தலை உதானன். இது கண்டப் பகுதியில் உள்ளது. அதை ஒட்டி இடது புறம் உள்ள தலை வியானனைக் குறிப்பதாகும். இது உடலெங்கும் வியாபித்திருப்பது. இந்த பஞ்ச பிராணன்களை அடக்குவது என்பதை பொதுவாக பிராணனை அடக்குவது என்பார்கள். யோக பலத்தால் பிராணனை அடக்கி விட்டால் மனம் அடங்கி செயலற்றுப் போகும். மனமானது செயலற்ற நிலைக்குப் போனால் தான் யோக நித்திரை செய்ய முடியும் என்பதை உணர்த்தும் தத்துவமே பள்ளி கொண்ட பெருமாள் பாம்பின் மேல் படுத்திருப்பது போல காட்டப்படுவதாகும். நாம் காலிங்க நர்த்தனத்திற்கு வருவோம். நதியின் ஆழமான பகுதியில்  நீரோட்டமில்லாத காலங்களில் நீரானது தேங்கி நிற்கும். இது வட்ட வடிவமாக இருக்கும். இதையே மடு என்பார்கள். நீரோட்டமில்லாத காலங்களில் இந்த மடுவில் உள்ள நீரைப் பயன்படுத்திக் கொள்வார்கள். இதைப் போல நம் உடலில் வட்ட வடிவமாக அமைந்த பகுதி தொப்புளாகும். இதை நாபி என்பார்கள். நம் புருவ மத்தியில் அமைந்துள்ள சுழுமுனைக்கிக் கீழே அடி பருத்து, நுனி சிறுத்துக் காணப்படும் மூக்குத்தண்டை லிங்கம் என்பார்கள். இப்போது இந்த நாபியில் இருந்து கிளம்பும் மூச்சு நேராக நிற்கும் லிங்கமாகிய மூக்குத் தண்டின் வழியாக வெளியே போவதும் உள்ளே வருவதுமாக மேலும் கீழும் இடைவிடாமல் இரவும் பகலும் நர்த்தனம் ஆடிக் கொண்டிருக்கிறது. ஆக தொப்புள் எனும் மடுவில் இருந்து கிளம்பிய காலானது லிங்கத்தின் வழியாக மேலும் கீழுமாக இடைவிடாமல் நர்த்தனம் செய்வதே காலிங்க நர்த்தனம். இவ்வாறு இடைவிடாமல் நர்த்தனம் செய்து கொண்டிருக்கும் காலின் வேகத்தை காலால் யோக சாதனைகள் மூலம் அடக்கினால் மனதற்ற நிலை உண்டாகும். அப்போது உச்சியில் இறைவனின் திருக்கூத்தை, நர்த்தனத்தைக் காணலாம்.  இன்னுமொரு சூக்குமம் என்ன வென்றால் மூச்சு என்றால் கால் என்பதை உணர்த்துவதற்காகவே காலைத் தூக்கி நடனம் ஆடுவது போலக் காட்டினார்கள். நான் முதலிலேயே சொன்னது போலக் கால், பாதம் என்பதெல்லாம் பிராணவாயுவைக் குறிக்கும். எனவே பஞ்ச பிராணன்களையும் அடக்க பிராணனை அடக்க வேண்டும் என்பதைக் குறிப்பதையே பகவான் பாதத்தை உச்சியில் பதித்து அடக்குவது போலவும், ஒரு காலைத் தூக்கி ஆடுவது போலக் காட்டுவதாகவும் சித்தரித்தார்கள். இது யோக இரகசியத்தை வெளிப்படுத்தும் தத்துவக் கதையாகும். அவ்வாறல்லாமல் நீங்கள் எந்த லோகங்களுக்குச் சென்று தேடினாலும் ஐந்து தலை உள்ள நாகத்தைப் பார்க்க முடியாது.