Tuesday, November 8, 2022

வள்ளல்பிரானின் தகர மெய்ஞான தகர விளக்கு

 =====வள்ளல்பிரானின் தகர மெய்ஞான தகர விளக்கு=====

தீட்சை குடுப்பாங்க ,தவம் பண்ணுவாங்க, பெரிய ஞானதானம் வரை பண்ணுவாங்க, ஆனா மெய்ஞான விளக்கு எதுண்ணு கேட்டா பல்லை இளிப்பாங்க.ஆமா, பெரிய குருமார்கள் கதை தான் இது.நயன தீட்சை என சொல்லி குருபீடம் கட்டுவார்கள்..வள்ளலார் காட்டி சென்ற தகர விளக்கின் ரகசியம் தெரியாமல் சன்மார்க்கம் வடலூர் என சுற்றி செத்து போறது தான் தலை எழுத்து...கண்டதில்லை.
அய்யா, வள்ளலார் ஏற்றி வைத்தது தகரகண்னாடி விளக்கு,அது ஞான சூட்சுமம், அது தெரிஞ்சவர் கொஞ்சம் பேர்தான். பாக்கி எல்லாம் பித்தலாட்டங்கள்.விஷயம் தெரியாம குருப்பட்டம் தேடி அலயுர ஜென்மங்கள்.....அந்த விளக்கினால்பெறும் தீட்சையே தகர தீட்சை.அந்த மெய்ஞானந்தான் தகர மெய்ஞானம்.அது தெரியாம கண்ணுதான் கடவுள் எங்கற கூட்டத்தை நம்பி கெட்டது ஏராளம்.
வள்ளலார் சொல்வதை பாருங்கள்,” தகர மெய்ஞான தனிப்பெரும் வெளியெனும் அகர நிலைப்பதி அருட்பெருஞ்ஜோதி”. இது தான் விஷயம், தகர மெய்ஞானம் என்கிற தனிப்பெரும் வெளியினில் உலாவுகிறவர் அகர நிலை என்னப்படுகிற அருட்பெரும்ஜோதியாண்டவர்.இதை சூக்குமமாக வைத்து சென்றுள்ளார் வள்ளல் பெருமான்.அது தெரியாம கண்மணி மத்தியிலே ஜோதியிருக்குது ஜீவனிருக்குது என்பது சுத்த முட்டாள்தனம்.இந்த தகர மெஞ்ஞானம் தெரிந்த ஒருவர் மட்டுமே தீட்சை கொடுக்க வள்ளலார் ஏற்றி சென்ற தகர கண்ணாடி விளக்கை கையில் எடுப்பார்கள். தெரியாதவர் வேறுமாதிரியான விளக்கினால் தீட்சை செய்வார்கள். அதிலிருந்து உண்மை ஏது பொய் எது என தெரிந்து கொள்ளலாம். நன்றி வணக்கம்.

சும்மா இரு சொல்லற

 ======சும்மா இரு சொல்லற====

மனமானது இரண்டு விஷயங்களை பற்றிக்கொண்டே இருக்கும்,ஒன்று நிழல்நினைவுகள் மற்றொன்று நிழல் பேச்சுக்கள். முதலாவது சொன்னது மனமானது தன்னுக்குள் சதா பார்த்துக்கொண்டே இருக்கும் காட்ச்சிகள். இரண்டாவது சொன்னது மனமானது சும்மா சதா சொல்லிக்கொண்டே இருக்கும் பேச்சுக்கள். இப்படி ரெண்டுவிதம் எப்போதும் ஓடிக்கொண்டிருக்கும். இது ரெண்டும் இல்லாது இருப்பதே “ சும்மா இரு சொல்லற” என்பதாகும். இதுவே முருகவேள் அருணகிநாதருக்கு உபதேசித்தது.அதாவது மனதில் எந்த கட்ச்சிகளும் ஓடாது, அதுபோல எந்த பேச்சுசம்பாஷணைகளும் நடக்காது. அப்படி இருப்பது தான் சுத்த மவுனம் எனும் சும்மா இருத்தல்.
ஆனால் இன்று தமிழ்நாட்டில் ஒருகூட்டம் வள்ளலார் பெயரை சொல்லிக்கொண்டு ”சும்மா இருக்கும் வித்தை” என சொல்லிக்கொண்டு வழிப்பறி கொள்ளை நடத்துகின்றனர். ஆன்மீகவாதிகள் இந்த கூட்டத்தினரிடம் சற்று ஜாக்கிரதையாக இருப்பது நலம். அவர்கள் சொல்வது “சும்மா இரு’ என்பதுவாகும், ஆனால் “சொல்லற” என்பதை நாசூக்காக தெரிந்தே விட்டு வைத்துள்ளனர். ஏனெனில் “சொல்லற” என்பது எதை கு்றிக்கும் என்பது அந்த கூட்டத்தினருக்கு தெரியாது.கண்ணையே நினைந்து கண்மணியிலேயே உணர்வை நிலைநாட்டிக்கொண்டு அதுவே தான் ”சும்மா இருத்தல்” என்பதை தானும் ஏமாந்து பிறரையும் ஏமாற்றி பிழைத்துக்கொண்டிருப்பவர்களை கருத்தினால் கண்டு கொள்ளுங்கள். ஒளியின் பிள்ளைகள் ஒளியினடத்திற்க்கே நடவுங்கள்.

திருச்சிற்றம்பலம்

 திருச்சிற்றம்பலம்.

அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும்ஜோதி.
முதலில் நாம் தெரிந்து கொள்ளவேண்டியது “மணி’ என்பது என்ன ? இதை என்ன என்று கூறுமிடத்து வள்ளலார் சொல்லுவதை பாருங்கள், “ நமது புருவமத்தியில் ஆறுபட்டையாய் உருட்சியுள்ள ஒரு மணி பிரகாசம் பொருந்தி இருக்கின்றது “ என்பார்….அந்த “ஒரு மணியே” மணி  மந்திர அவுடதம் என அறிந்து கொள்ளவேண்டும்….அந்த ஒரு மணியே ரெண்டு கண்ணிலும் உயிருக்கு உயிராயும் கருணை கடலாயும்  கைபடா கனலாயும்  ஜோதியாயும்  தந்தையாயும் தாயாயும் குருவாயும் ஞானமாயும் மிளிர்கின்றது. அந்த “ஒரு மணியே குருமணி” என அறிதல் வேண்டும்….அப்படி ”ஆறு பட்டையுடன் கூடிய ஒரு மணியை” தக்க குருவின் துணை கொண்டு அறிதலே ஞான தீக்கை. . அதனை தக்க ஆசாரியன் திருவருளால் அறிந்து திறந்து கொள்ளுதலே “நடுக்கண் பூட்டை” திறத்தல்.அதுவே ஞான சாதனம். ..
இங்கு கற்றவர் உளத்தே இனிக்கும் என்பது அறியப்படவேண்டியது, கண் நுதல் கடவுள்  என்பவர் உளத்தே இனிக்கும் தன்மையினர் என தெளிகிறது..ஆனால்  ஊனக் கண் மணியானது உளத்தே இனிக்கும் தன்மை அற்றது. “கண் நுதல்” கடவுள் என்பதுவே அறியப்படவேண்டியது. அதுவே உளத்தே இனிக்கும் தன்மையது. ஆதலின் உளத்தே இனிக்கும் தன்மை உடைய கண்நுதல் கடவுளை  அறிதல் வேண்டும். அன்றியும் “கண் மணியே ”இங்கு வள்ளலாருக்கு  ஞான மணியாயும்  ஞான மருந்தாயும் இருக்கின்றது. ஆதலின் “மணி” என்பது என்னவென்று  புரிதல் அவசியம்.. “ மணி மந்திர அவுஷதம்” என்பர் பெரியோர். மணியானது மந்திரமாயும்  மருந்தாயும் இருக்கிறது என பொருள். அதையே வள்ளலாரும் தெரிவிக்கிறார்.
பொற்சபை நடஞ்செய் புண்ணியரை கண்ணினுள் மணியாயும் ,கைபடா கனலாயும், கறைபடா மதியாயும் ,கணிப்பரும் கருணை கடலாயும்  ,தெய்வமாயும் கருதி திருப்பணி புரிந்திருக்கின்றேன் என்றே வள்ளலார் பாடுகின்றார்.ஆதலின்  இங்கு ஊன  கண்மணியே தான் கடல் என கொள்ளுதல் தகுமோ?, அல்லது ஊன கண்மணி தான் மதியென கொள்ளுதல் தகுமோ?, அல்லது ஊன கண்மணிதான் கனலாயும் கொள்ளுதல் தகுமோ?..அப்படி கொளின் ஊன கண்மணி தான் கடல் எனவும் கொளவேண்டுமே.?ஒரு ஊன் உறுப்பு, ஊன்பொருள் எப்படி கனலாகவும் கடலாகவும் இலங்கும் என்பதை சற்று கூர்ந்து நிச்சயித்தல் நன்றல்லவா?. ஆதலின் இஃது உவமையாக கொண்டதே அன்றி ஊன கண்மணி தான் கனல் என்றோ, ஊன கண்மணி தான் கடல் என்றோ, ஊன கண்மணி  தான் மதியென்றோ, ஊன கண்மணி தான்  பொற்சபை என்றோ கொள்ளுவதெங்ங்னே?. இப்பாடலில் வள்ளலார் உபயோகிக்கும் வார்த்தையானது “தெய்வமே என நான் நின்னையேகருதி” என்பதாகும். அதாவது மேற்கூறியவை உவமையாகும். அதாவது,கண்ணின் மணி போலவும், கைபடாத கனல் போலவும்,கறைபடா மதி போலவும், கருணை கடல் போலவும்  புனைந்துரைக்கின்றார் பெருமான் அவர்கள்.ஆதலின் “கண்   நுதல் கடவுளை  என்பது மேற்சொன்ன  “மணி’ என் தெளிதல் நலம்.
அடுத்து மெய்ஞானம் என்ன என வினவுமிடத்து வள்லலார்  கூறும் மெய்ஞானமானது “தகரமெய்ஞானம்” எனப்படும். அதை “தகர மெய்ஞான தனிப்பெரும் வெளியெனும் அகர நிலைப்பதி அருட்பெரும்ஜோதி” என்பார் அகவலில்.  அப்படியான தனிப்பெரும் வெளியினி விளங்கும் தனிப்பெரும் கருணையளரே அகர நிலையான  அருட்பெரும் ஜோதியார்., அப்படியல்லவா?.ஆகையினால் ஊனக்கண்ணும் அதில் இருக்கும் மணியும் தனிப்பெரும் வெளியாவதெங்ங்னே என சிந்தித்தல் நன்மை பயக்கும். முன்சொன்ன ஆறுபட்டையுள்ள மணியிலங்கும் தலமே ”தகர வெளி”. அல்லாது செத்துபோகும் போது அழுகி மண்ணோடு மண்ணாகி போகும் தன்மையான ஊனகண்மணி தகர மெய்ஞானமாகாது.
அன்றியும் மெய்பொருள் என்பது பஞ்சபூதங்களால் உருவாக்கப்பட்ட தூல பருப்பொருளக இருக்கமுடியுமா என சிந்தித்து தெளிதல் நலம். கண் என்பதும் கண் மணி என்பதும் பஞ்ச பூதங்களால் உருவாக்கப்பட்டதும் மரணகாலத்தில் அழிவை தருவதும் ஆகும்.  ஆனால் வள்ளலார் கூறும் தகரவெளியில் விளங்கும் மணியானது பஞ்ச பூத சேர்க்கையினால் உருவாக்கபடாததும் அனாதி முதல் இருப்பதுமாகிய “உண்மை வஸ்த்து”. அதை ”ஏக வஸ்த்து” என்பர் சான்றோர். அதுவே “மணி”, கண்ணுக்கு கண்ணாகவும், உயிருக்கு உயிராகவும்,மாமருந்தாகவும் கைபடா கனலாகவும் , இன்பத்தை தரும் அமிர்தமாகவும் உள்ளது. அதையே கண்ணார் ஒளி எனவும், ஒளியின் கதிர் எனவும் சொல்லுவர்.
கதிர் என்பது கதிரவனை குறிக்கும்,அதை ஞான சூரியன் என்பார், அல்லது சிவசூரியன் என்பாருமுளர். “தினம் சூரிய கலையில் செல்லும்படி மனதை அந்த கண்களில் செலுத்தவேண்டும்” என வள்ளலார் சொல்வதை சற்று கவனிக்க அதன் உண்மை புலப்படும். அதாவது சூரிய கலையில் செல்லும்படி மனதை அந்த ”கண்களில் ” செலுத்தவேண்டுவது கடமை. சூரிய கலை என்பது ஒரு கண்ணில் அல்லவா இருப்பதாக சொல்லுகிறார்கள், அப்படியெனில் ஏன் வள்ளலார் “கண்களில்’ என பன்மையில் குறிப்பிடுகின்றார்? ரெண்டு கண்களிலும் எப்படி சூரிய கலை வரும் என நினைக்கவேண்டாமா?
”விண்ணேவிண் உருவேவிண் முதலே விண்ணுள்
வெளியேஅவ் வெளிவிளங்கு வெளியே என்றன்
கண்ணேகண் மணியேகண் ஒளியே கண்ணுட்கலந்துநின்ற கதிரே”,  என்பதில் வரும் கதிரே ”அகர ” நிலைப்பதியான அருட்பெரும் ஜோதி, இதில் வரும் விண்ணே என்பது ”தகர வெளி” எனப்படும்.  ஆகையினால் தினமும் சூரிய கலையான “அகர’ நிலையின் பால் மனதை செலுத்தவேண்டும்.. இதுவெ வள்ளலார் கூறும் தகர மெய்ஞானம். அல்லாது யோக சாத்திர சம்பிரதாயப்படியான அகரம் என குறிப்பிடும் சூரியகலை இயங்கும் வலது கண் இல்லை என தெளிதல் நலம் அன்றோ
மேற்படி விளக்கங்களினால் நாம் புரிந்து கொள்ளவேண்டியது என்னவென்றால் “ஆறு பட்டையுடன் கூடிய மணி” இலங்கும் புருவமத்தியே ஆன்ம ஸ்தானம்,ஆதலினாலே வள்ளலார் ”ஆன்மாவுக்குச் சகல விளக்கமாகிய சாக்கிர ஸ்தானம் லலாடம், ஆதலால், விசேடம் சிறந்தது லலாடத்தில் மூக்குநுனியாகிய புருவமத்தி.” என்கிறார் . புருவமத்தியை விளக்குமிடத்து  “இருதயத்திற்குமேல் இரண்டரை அங்குல இடமான கண்டத்தில் மகேசுவரனும், அதற்குமேல் இரண்டரை அங்குல அண்ணாக்கில் சதாசிவமும், அதற்குமேல் இரண்டரை அங்குல உயரத்தில் புருவமத்தியில் விந்துவும், அதற்குமேல் இரண்டரை அங்குலத்தில் நாதமும், அதற்குமேல் இரண்டரை அங்குலத்தில் பரவிந்துவும், அதற்குமேல் இரண்டரை அங்குலத்தில் பரநாதமும், அதற்குமேல் இரண்டரை அங்குலத்தில் திக்கிராந்தம் அதிக்கிராந்தம் துவாதசாந்தம் முதலானவைகளும், அதீதத்தில் சுத்தசிவமு முள” என்கிறார். அதாவது புருவமத்திக்கு கீழ் ரெண்டரை அங்குலத்தில்அண்ணாக்கும், புருவமத்திக்கு மேல் ரெண்டரை அங்குலத்தில் நாதமும் இருக்கும் .புருவமத்தி விந்துஸ்தானம். அந்த விந்துஸ்தானம் அக்கினி பீடமாகவும் அதன் மேல் ஆன்மாவும் விளங்கும். இதுவே “மணியாடும் மன்று” அல்லவா?.அப்படியெனில் கண்டிப்பாக இந்த புருவமத்திக்கு ரெண்டரை அங்குலத்திற்க்கு மேல் நாதஸ்தானம் வரவேண்டும், அப்படி  வராத எந்த ஒருஇடமும் புருவமத்தி என சொல்லக்கூடது, ஏற்கவும் கூடாது அல்லவா?.
மேலும் , சோம சூரி யாக்கினி பிரம விஷ்ணுக்கள் இருக்குமிடம்: நேத்திரம் புருவமத்தி, அண்ணா, பிரமரந்திரம் என்றும் வள்ளலார் புருவமத்தியை குறிப்பிடுகின்றார் அல்லவா?...அதை விளக்கமாக பார்ப்போம். முதலில் மேலிருந்து கீழாக முதலில்பிரம்மரந்திரத்தில் யார் இருக்கிறார்கள் என பார்ப்போம். பிரம்மரந்திரத்தில் விஷ்ணு இருக்கிறார் என சொல்கிறார்., அடுத்து அண்ணாவில் பிரம்மாவும், அதற்க்கு கீழ் புருவமத்தியில் அக்கினியும், நேத்திரம் என்பதில் சோமசூரியனும் இருக்கிறார்கள். அப்படித்தானே? ரெண்டு கண்களிலும் சோம சூரியன் இருவரும், புருவமத்தியில் அக்கினியும் இருப்பதாகத்தானே சொல்கிறார்?..அப்படி அக்கினி இருக்கும் புருவமத்தியே ஆன்மஸ்தானமாகிய ”மணியாடும் மன்று” எனப்படும் சிற்சபை.. இதற்க்கு ஆதாரமாக வள்ளலார் சொல்லுவதை பார்ப்போமா? அதாவது நெற்றியில் ரோமம் தோன்றியும் தோன்றாமலும் இருக்கிறதல்லவா? அது ஏன் என சொல்லும்கிறார் ,” இவை அல்லாது மற்ற இடங்களில் தோன்றுவது தத்துவக் கெடுதி. தத்துவங்களின் உட்புற மலங்களே வாயுவின் பிருதிவி. ஆதலால், மேற்குறித்த இடங்களில் அக்கினியின் காரிய மில்லாததினால் உரோமம் உண்டாகின்றது. அக்கினி காரியப்பட்ட இடங்களில் தோன்றியும் தோன்றாமல் அருகியிருக்கின்றது.
நெற்றியில் தோன்றா திருப்பது மேற்படி இடத்தில் ஆன்ம விளக்கம் விசேஷ முள்ளது. அதைப் பற்றி மேற்படி இடத்திற்கு விந்துஸ்தானம் என்றும், அறிவிடம் என்றும், லலாடம் என்றும், முச்சுடரிடம் என்றும், முச்சந்திமூலம் என்றும், நெற்றிக்கண் என்றும், மஹாமேரு என்றும் புருவமத்தி என்றும், சித்சபா அங்கம் என்றும் பெயர். ஆதலால், விந்து என்பதே ஆன்மா. விந்துவின் பீடம் அக்கினி. இந்த இரண்டினது காரியமே பிரகாசமாகிய அறிவின் விளக்கம் ஆதலால், உரோமம் அருகி யிருக்கின்றது.’ ‘ இதிலிருந்து நாம் தீர்க்கமாக புரிந்துகொள்ளவேண்டியது என்னவென்றால் புருவமத்தி என சொல்லப்படுகிற இடத்தினில் அக்கினியின் காரியத்தினால் ”ரோமம் தோன்றியும் தோன்றாமலும் அருகி இருக்கும்”. அப்படி ரோம அருகி இருக்கும் இடமே புருவமத்தி எனப்படும் விந்துஸ்தானமாகிய நெற்றிக்கண் என்ற சித்சபா அங்கமாகும் மஹாமேருவாகிய லலாடம்.
தகரவெளி சிற்றம்பலவாணர் துணை

கடவுள் என்பவர் யார்?

 

கடவுள் என்பவர் யார்?


ஜீவர்களை இந்த பூமியில் படைக்குமுன்னே, அதற்க்கும் அனாதிகாலம் முன்னே, ஜீவர்கள் பூமியில் உருப்பெற்ற எண்ணிறந்த காலம் முன்னே, கடவள் அருட்சக்தியால் தோற்றுவித்ததே உணவு. அவ்வுணவே அவர் தன்னுடைய அருட்கொடையாக ஜீவர்கள் உண்டு பசியாற தோற்றுவித்த அமிர்தம். பசியெனும் கொடூரத்தை வைத்த இறைவன் அது போக்க அதன் முன்னே உணவை உலகில் படைத்து வைத்தான். அந்த படைப்பே தாவர வர்க்கம் எனும் விசேஷ ஜீவ உணவு. தாவரம் எனும் படைப்பு இல்லை எனில் பசி எனும் சண்டாளன் ஜீவர்களின் உயிரை ஆட்டி படைத்திருப்பான் என்பது திண்ணம்.

பசியால் வருந்துகின்ற சீவர்களுக்கு ஆகாரங்கொடுக்க நினைத்தபோது, நினைத்த புண்ணியரது மனம் வேறு பற்றுக்களை விட்டுச் சுத்தக் கரணமாகி நினைத்தபடியால், அந்தப் புண்ணியர்களை யோகிகளென்றே உண்மையாக அறியவேண்டும். ஆகாரங் கொடுக்க நினைத்தபடி உபசரித்துக் கொடுக்கும்போது, அவருண்ணுவது தாமுண்ணுவதாக அறிந்து களிக்கின்ற படியால், ஞானிகளென்றே உண்மையாக அறியவேண்டும். ஆகாரங்கொடுக்க உண்டு பசி தீர்ந்தவர்களுக்கு அத்தருணத்தில் ஆன்மாவின் உள்ளும் புறத்தும் கீழும் மேலும் நடுவும் பக்கமும் நிறைந்து கரண முதலிய தத்துவங்களெல்லாம் குளிர்வித்துத் தேகமுழுதும் சில்லென்று தழைய முகத்தினிடமாகப் பூரித்து விளங்குகின்ற கடவுள்விளக்கத்தையும் திருப்தியின்பமாகிய கடவுளின் இன்பத்தையும் பிரத்தியட்சத்தில் தரிசித்து அனுபவிக்கின்றார்க ளாதலால், அந்தப் புண்ணியர்கள் கடவுளைக் கண்டவர்களென்றும் கடவுளின்பத்தை அனுபவிக்கின்ற முத்தரென்றும் அறியவேண்டும். பசி நீங்க உண்டு சந்தோஷ’த்தவர்கள் இந்தப் புண்ணியர்களைத் தெய்வமாகப் பாவிக்கின்றார்களாதலால், இவர்களே தெய்வமுமென்று உண்மையாக அறியவேண்டும் என வள்ளலார் கூறுகின்றார்.ஆகையினால் ஜீவர்களுக்கு பசியாற்ற உணவாகிய தாவரங்களை படைத்து உணவளிக்கின்றவரே கடவுள். இதுவே சத்தியம்.

அப்படியெனில் ஜீவர்களின் பசியை போக்க தாவரங்களை படைத்த ஒருவரே இறைவன். அந்த மாபெரும் கருணையாளரே அருட்பெரும் ஜோதி ஆண்டவர் என சத்தியமாக அறியவேண்டும். எப்போது எப்போதெல்லாம் தாவரங்களை பார்க்கிறோமோ அப்போது அப்போதெல்லாம் அந்த அருட்கருணையை நாம் பார்க்கவேண்டும். பார்க்க பழகவேண்டும். அப்போது தான் அருள் பூரணப்படும் எனவறியவேண்டும். உணவளித்தவரே கடவுல் என்பதை நாம் நினைவில் வைக்கவேண்டும். பசியால் துன்பமுறும் ஏழைகளுக்கு பசியாற்றும் போது அந்த உணவானது தாவர உணவே என நினைந்து ,அது முகாந்திரம் அருளை வழங்கிய கடவுளை நன்றி செலுத்த பழகவேண்டும். அப்போது அருள் பூரணப்படும் என அறியவேண்டும்.கடவுள் இன்பம் பூரணப்படும் என அறியவேண்டும்.

அருட்பெரும்ஜோதி அருட்பெரும் ஜோதி
தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி.

ஜீவனும் ஆன்மாவும் இரண்டா ஒன்றா??

 =====ஜீவனும் ஆன்மாவும் இரண்டா ஒன்றா??=====


வள்ளலார் இதற்க்கு விளக்கமாக சொல்லுவது என்ன என பார்க்கலாமா?...இந்தத் தேகத்தில் ஜீவன் இருக்கின்ற ஸ்தானம் 5. அதில் முக்கிய ஸ்தானம் 2. அவை யாவை? கண்டம், சிரம் சிரத்திலுள்ளது பரமாத்மா என்னும் சாமானிய ஜீவன்; இது இறக்காது. கண்டத்திலுள்ளது ஜீவாத்மா என்னும் விசேஷஜீவன்; இது இறந்துவிடும். மேற்படி தேகத்தில் பிரமபேதம் கீழும் மேலு மிருப்பதால், நாமடைய வேண்டிய பதஸ்தானங்கள் எவை என்றால்; அவை கண்டமுதல் உச்சி வரையில் அடங்கியிருக்கின்றன. மேற்படி பதங்களாவன சொர்க்க பூர்வமாக சதாசிவபத மீறாக வுள்ளன. இதற்கு மேல் நாதாதி சுத்த மீறாக உள்ளன. கைலாசாதி பதங்கள் உந்திக்கு மேல் கண்ட மீறாக வுள்ளன; இது சாதாரணபாகம். நரக இடமாவன உந்தி முதல் குதபரியந்தம். கர்ம ஸ்தானம் குத முதல் பாத மீறாக வுள்ளது. இவைகளில் பிரமாதிப் பிரகாச முள்ளது. அனுபவிப்பது கண்டத்தில். இந்தத் தேகத்தில் எமனிருக்குமிடம் குதமாகிய நரகஸ்தானத்துக்கு இடது பாகம். மேற்படி தேகத்தில் ஆன்மா தனித்திருக்கும்; ஜீவன் மனமுதலிய அந்தக்கரணக் கூட்டத்தின் மத்தியிலிருக்கும்.

அப்படியெனில் ஜீவன் என்பது முக்கியமாக இரண்டு வகைகளும் ,ஆன்மா என்பது முக்கியமாக ஒன்றுமாகும் என காணலாம் அல்லவா?.இனி ஏன் ஜீவன் இரண்டாக இருக்கிறது என அறியவேண்டாமா? அல்லாது ஏனையா மூன்று ஜீவன்களும் எவை எவை எனவும் அறிய வேண்டாமா?.

ஆன்மாவானது தனித்து இருக்கிறது என கூறும் வள்ளலார் ஜீவன்களில் முதலானது புருவமத்தியிலும், இரண்டாவது ஜீவன் கண்டத்திலும் இருக்கிறதாக சொல்லுகிறார் அல்லவா?. முதலாவது சொன்னது சாமானிய ஜீவனும் இரண்டாவது சொன்னது விசேஷ ஜீவனும் ஆக சொல்லுகிறார். ஆனால் இவை இரண்டையும் பரமாத்மா எனவும் ஜீவாத்மா எனவும் பெயரிட்டு அழைக்கவும் செய்கிறார், அப்படித்தானே?..அப்படியெனில் இவை ஜீவனா அல்லது ஆத்மாவா என கேட்க்க தோன்றுகிறதல்லவா?.சரிதானே??

ஆனால் வள்ளலாரோ மீண்டும் சொல்லுவது என்னவென்றால்,” ஆன்மா தனித்திருக்கும் ஜீவன் மன முதலியு அந்தகரணங்களின் மத்தியில் இருக்கும்” என்பதல்லவா?..அப்போது தெரிவது என்னவென்றால் தனித்து இருக்கின்ற ஆன்மாவானது கண்டத்தில் இருக்கின்ற ஜீவனோடு சேர்ந்து செயல்படும்போது அது ஜீவான்மா எனவும் , அதே போல அந்த ஆன்மாவானது புருவமத்தியில் இருக்கின்ற ஜீவனோடு சேர்ந்து இருக்கின்றபோது அது பரமான்மா எனவும் எனவும் கொள்லப்படுகிறது. அல்லவா?.

ஆனால் நமக்கு ஆன்மாவானது கண்டத்தில் இருக்கின்ற ஜீவனோடு அல்லவா ஆன்மாவானது சேர்ந்து இருக்கிறது?...அல்லாது புருவமத்தியில் இருக்கின்ற ஜீவனோடு சேர்ந்து இருப்பதில்லையே?..அப்படித்தானே?..ஆகையினால் தானே கண்டத்தில் இருக்கின்ற ஜீவனோடு சேர்ந்துிருக்கும் நாம் கண்ட ஜீவன் இறந்து போகும் போது இறந்து போகின்றோம்?..சரிதானே?..

ஆகையினால் கண்டத்தில் இருக்கின்ற ஜீவன் இறந்து போகாமல் இருப்பின் நாமும் இறந்து போகாமல் இருக்கலாமல்லவா?..அதற்க்கு நாம் செய்யவேண்டியது என்னவென்றால் கண்டத்து ஜீவனை புருவமத்தியில் இருக்கும் ஜீவனோடு சேர்ப்பது என்பதல்லவா?..சாகாதிருப்பது தானே சன்மார்க்கம்?..செத்துப்போவது சன்மார்க்கமாகாதே.....ஆகையினால் செத்துப்போகும் ஜீவனை செத்துப்போகாமல் செய்வது தானே சுத்த சன்மார்க்கம் ?...அதனால் கண்டத்து ஜீவனை புருவமத்திக்கு கொண்டு செல்வோம் தக்க ஆசான் துணையுடன். வாழ்க வள்ளலார் மலரடி.

ஞான மணி

ஞான மணி===

இலங்கும் பொருளதனை யெலாவரும் காண்கில் நலங்கு

துனியாவதனை நாடார் விலங்கினங்கள் பத்தாறோடீர் பத்து

நான்கு நூறாயிரத்தில் வற்றாமல் நிற்க்குமறை பொருளை

கற்றார்கள் காட்டினார் பாரெனவே ”காதை வளைத்துட்

பொருளை” பூட்டினார் ஒன்றனவே போதமுற

அறிந்தேனிறையை யறியாத நாளில்லல்லல் பட்டிருந்தேன்

குருவந்துபதேசம் ”காதிலிருத்திய பின்”வருந்தேன்

பலதொன்றும் வையேன் மனதினில் வையகத்தை

பொருந்தேன் புறமகத்திட்டேன் நிறை பூரணமே

==பீர்முஹமது அப்பா....(ஞான மணி மாலை)

”காதை வளைத்து“ எத்தனை பேருக்கு குருவுபதேசம்

தந்திருக்கார், கையை தூக்குங்க

வெட்டாத சக்கரமும் இறையாத தீர்த்தமும்

 ===வெட்டாத சக்கரமும் இறையாத தீர்த்தமும்====


உலகத்தில் தீர்த்தம் என்பது பரிசுத்தமாகும் பண்பை கொண்டதுவாம். ஏதொன்று அசுத்தத்தை மாற்றி பரிசுத்தப்படுத்துகிறதோ அது தீர்த்தம்.”அண்ணாக்கென்றதின் மேற்புறத்தில் கொண்டது அக்கினி தீர்த்தமாம் ஞானபெண்ணே” என்பர் சித்தர்கள்.அதுவே இறையாத தீர்த்தம்,கண்களில் இருந்து வழியும் நீர் இறைக்கப்படுகிறது....அது இறையாத தீர்த்தம் இல்லை. அப்படியான தீர்த்தத்தில் இருக்கும் புட்பமே எட்டாத புட்பம்...எல்லா நீர்நிலைகளில் இருக்கும் புட்பங்களும் எட்டி பறிக்கமுடியும் தன்மையிலே இருக்க, அக்கினி தீர்த்தத்தில் இருக்கும் புட்பமோ எட்டி பறிக்க முடியாது இருக்கின்றதுவாம்.அந்த புட்பத்தின் மத்தியில் இருக்கும் மணியானதுவோ ஷண்முகமான மவுன மணியாயிருக்க அந்த ஷ்ண்முகங்களும் வெட்டப்பட்ட நிலயில் அல்லாமல் சக்கரவடிவமாய் இருக்கிறதாம்.ஏனெனில் வெட்டப்பட்ட முகங்களை உடைய மணியானது சக்கரமாய் இருக்காது, ஆனால் வெட்டாத சக்கரமாய் இருக்கும் ஷண்முக மவுனமணியானது புருவமத்தியில் இருக்கும் ஆன்ம சொரூபமே அன்றி வேறல்ல.அதையே வள்ளலாரும் ஆன்மாவின் பீடம் அக்கினி என்பார், அவ்வக்கினியோ தீர்த்தமாகிய சுக்கிலத்தில் உள்லது. அதுவே இறையாத தீர்த்தம். சுக்கிலம் புட்ப வடிவத்துடன் இருக்கிறது என்பார் வள்ளலார்.அதுவே புருவமத்தியில் பிரகாசிக்கின்றது.

சன்மார்க்கக் கொடி எங்க போச்சு?

 சன்மார்க்கக் கொடி எங்க போச்சு?


நானும் பாத்துகிட்டே தான் இருக்கேன், எல்லாரும் அதை சொல்றாங்க இதை சொல்றாங்க, ஆனா ஒருத்தரும் சொல்ல வேண்டியதை சொல்லின பாடில்லை. சன்மார்க்க கொடியை தான் சொல்றேன், தப்பா எடுத்துக்காதீங்க.

சன்மார்க்கிகள் சன்மர்க்கிகள் என சொல்லிகொண்டு திரியறவங்க அதிகமாகத்தான் படுறாங்க, நல்லது ,சந்தோஷமாத்தான் இருக்கு. ஆனா திரியறதோட சரி, உள்ள நொழயறத காண முடியலே என நெனக்கும் போது தான் வருத்தமா இருக்கு. பலபேருட்ட கேட்டு பாத்துட்டேன்,ஏம்பா சொல்லித்தாங்க, இதுக்காவது விளக்கம் சொல்லுங்கேண்ணேன், யாரும் சொன்னபாடில்லை. பிறகு எதுகுய்யா சன்மார்க்கிண்ணு சொல்லிக்கணும்னு கேக்க தோணுது.அதாங்க சன்மார்க்க கொடி கட்டிக்காதவன்லாம் சன்மார்க்கிண்ணா கோவம் வரத்தானே செய்யும், இது தப்பா? சொல்லுங்கப்பா.....

வள்லலாரும் கொடிகட்டிக்கணும்னு சொல்லுப்புட்டு போயிட்டார், அப்ப நாமும் கொடிகட்டிக்க வேணுமில்லையா? அது தானே சரி? அதுக்கு கொடிண்ணா என்னண்ணு தெரிஞ்சுக்க வேணுமில்லையா, அப்படீண்ணு கேட்டா “ஆமா”ண்ணு பதில் மட்டும் தான் எல்லாரும் சொல்றாங்க.ஆனா யாரும் அது எங்க இருக்குணு கேட்டா முழிக்கிறாங்க....ஒருசில பேர் ’எனக்கு தெரியும் நான் சொல்லமாட்டேன் அது குரு ரகசியம்’ங்கிறாங்க...அது உண்மையாண்ணா சுத்த பொய். தெரியாதனாலே சும்மா கதை விடுறாங்கண்ணு புரியுது.பெரிய “குரு”மார்கிட்ட வரை கேட்டுபாத்துட்டேன், ம்ஹூம்.....தெளிஞ்ச பாடில்லை, அப்படீண்ணா விட்டுட முடியுமா என்ன? எப்படி விடுறது?...அதான் நீங்க யாராச்சும் சொல்லுங்கோண்ணேன்.சொல்லுறீங்களா....அல்லது எடுக்கவேண்டியதை எடுக்கவா என்ன?...சும்மா தமாஷுக்கு சொன்னேன்.

சரி விஷயத்துக்கு வருவோம், நாபியிலேர்ந்து கொடி புருவ மத்திக்கு போகுதாம்லே...அதுக்குள்ள ரெண்டு நாடி இருக்குதாம்லே...அதுக்கும் சன்மார்க்கத்துக்கும் என்னய்யா தொடர்பு? அது எப்படியா சன்மார்க்கத்துக்கு ஒத்து வரும்ணு கேக்கலாம்லே...அதான் நான் கேக்கிறேன்...தப்பா என்ன?..ஹூம் ,அதெல்லாம் ஒண்ணுமில்லே, சன்மார்க்கம்ணா ஜீவகாருண்யம் மட்டுந்தேன்ணு சொல்றது காதிலே விழுது...கேட்டுகிட்டே தான் இருக்கேன், அப்படீண்ணா கொடி எதுக்கு?..சன்மார்க்கம் என்ன யோக மார்க்கமா என்ன, நாடியிலே ஏறவும் இறங்கவும்? அப்படி கேக்க தோணுதா என்ன?..ஆமா ,கேட்டுத்தான் ஆகணும். அப்படீண்ணா ஜீவகாருண்யம் சத்விசாரம் இவை ரெண்டும் விட்டு என்னய்யா சன்மார்க்க கொடி சொல்லும் சேதி?...சொல்லுங்கோண்ணேன்.....காத கழுவிக்கிட்டு இருக்கேன்......சொல்லுங்கோண்ணேன்......

கொஞ்சம் இருத்தி பாத்தீங்கண்ணா சன்மார்க கொடி என்பது யோக சம்பிரதாயத்தை சார்ந்து இருக்கிறதை காணலாம். கொடி ஏற்றிகொண்ட வள்ளலார் இக்கொடி இப்போது ஏற்றி கொண்டமையால் எல்லோரும் உண்மையை தெரிந்து கொள்வார்கள் என்று கூறுகிறார் அல்லவா?..எந்த உண்மை?, சன்மார்க கொடி என்பது யோக மரபு சார்ந்தது என்பதை தானே? உடம்பில் நாபியில் இருந்து புருவமத்தி ஈறாக இலங்கும் நாடியினை தானே வள்ளலார் கொடி என கூறுகிறார்? அது சன்மார்கம் சம்பந்தபடாமல் யோகம் சம்பந்தப்பெட்டே இருக்கிறதல்லவா?,,மட்டுமல்ல அந்த நாடியில் ஊடே “ஏறவும் இறங்கவும்” எனும் ஒரு சமாச்சாரத்தையும் அவர் கூறுகிறார் அல்லவா?..என்னது அது “ஏறுவதும் இறங்குவதும்”?...புருவமத்தியிலே ஏறவும் இறங்கவும் கூடிய யோக நுணுக்கமே வள்ளலார் கூறுவது என தெளிவாக தெரிகிறதல்லவா?..அப்படியெனில் சீவகாருண்யம் எனும் சன்மார்கத்தையும் கொடியினால் உணர்த்தப்பெறும் ஞான யோகத்தையும் இணைத்து அப்பியசித்தலே வள்ளலார் நோக்கம் என தெளிவாக புரிகிறதல்லவா?..அப்படியான யோக சம்பிரதாயத்திற்க்கு உறுதுணையாகவே கரிசலாங்கண்னி தூதுளை பொற்றலை முதலியவை வைக்கப்பட்டுள்ளன என விளங்குகிறதல்லவா?..மேலும் ஞான யோக நுணுக்கங்களை தெளிந்தோர்க்கு “ வள்ளல் பிரினோர்க்கு வாய் கோபுர வாசல்” என திருமூலர் கூறுவது பகல் போல் வெளிச்சமானதுவே....கோபுர வாசலான வாயும் அதன் உள்ளே வள்ளலார் கூறும் கொடிமரமும் கொடியும் அறிந்தவர் ஞான யோகம் புரியும் மகத்துக்களே,....அவர்கள் சீவகாருண்யம் எனும் செங்கோலும் ஏந்துவராகில் அருள் இப்புவியில் பெருக்கிட்டோடும் என்பதில் ஐயமில்லை.

சத்விசாரத்தினால் உஷ்ணம் உண்டு பண்ணுவது எப்படி??

 ==சத்விசாரத்தினால் உஷ்ணம் உண்டு பண்ணுவது எப்படி??==


இங்குள்ள நீங்கள் எல்லவரும் இதுவரைக்கும் இருந்தது போல் இனியும் வீண்காலம் கழித்துக்கொண் டிராதீர்கள். இது முதல் சாலைக்கு ஆண்டவர் போகிற - பத்துத் தினமாகிய கொஞ்சக் காலம் - வரையில், நீங்கள் எல்லவரும் நல்ல விசாரணையில் இருந்து கொண்டிருங்கள். அந்த விசாரணை எது வென்றால்: நம் நம்முடைய நிலை எப்படிப்பட்டது? நமக்கு மேல் நம்மை அதிஷ்டிக்கின்ற தெய்வத்தினுடைய நிலை எப்படிப்பட்டது? என்று விசாரிக்க வேண்டியது. அதற்குத் தக்கபடி, நீங்கள் ஒருமித்தாவது, அல்லது தனித்தனியாகவாவது, உங்களறிவிற்கும் ஒழுக்கத்துக்கும் ஒத்தவர்களுடன் கூடியாவது, அல்லது - வேலாயுத முதலியாரைக் கேட்டால் மனுஷ்ய தரத்தில் போதுமான வரையில் சொல்லுவார் - அவரிடம் அப்படிக் கேட்டாவது நல்ல விசாரணையி லிருங்கள். அல்லது, தனியாகவும் விசாரிக்கலாம். இவ்விசாரணை முகத்திலிருந்தால், நமது ஆன்ம அறிவை விளக்கமின்றி மூடிக் கொண்டிருக்கின்ற அனந்தத்திரைகளில் அழுத்தமாயிருக்கின்ற முதல் திரையாகிய பச்சைத்திரை முதலில் நீங்கிவிடும். அது நீங்கினால், மற்றத் திரைகள் அதிக விரைவில் நீங்கிப் போய்விடும். அந்தப் பசுமை வர்ணம் எப்படிப்பட்டதென்றால், கருமைக்கு முதல் வர்ணமான பசுமையாக இருக்கின்றது. இப்படிப்பட்ட அழுத்தமான திரை நீங்கவேண்டுமென ஸ்தோத்திரித்தும், தெய்வத்தை நினைத்தும், நமது குறையை ஊன்றியும் - இவ்வண்ணமாக, இருக்கின்றபோதும் படுக்கின்றபோதும் இடைவிடாது இவ்விசாரத்தோடு ஆண்டவர் நமக்குண்மை தெரிவிக்க வேண்டு மென்கின்ற முயற்சியுடனிருந்தால், தெரிய வேண்டியதைத் தெரிந்துகொள்ளலாம்.

அவ்விசாரம் பரம் அபரம் என்று இரண்டு வகையா யிருக்கின்றது இவற்றிற் பரம் பரலோக விசாரம், அபரம் இகலோக விசாரம். இவ்விரண்டில் இகலோக விசாரம் விசார மல்ல. சாதாரணமாக ஒருவன் விசாரம் செய்து கொண்டிருக்கின்றானேயென்றால், அவ்விசாரம் விசாரமாகாது, உண்மை விசாரமுமல்ல. ஏனெனில்: விசார மென்கின்றதற்குப் பொருள்: வி-சாரம் என்பதில் வி சாதாரண உலக விசாரத்தை மறுக்க வந்தது; அது மேலும் பரலோக விசாரத்தையே குறிக்கும் பொருட்டு வந்தது. ஜலத்திலிருக்கின்ற பாசியை நீக்குவதுபோல், நமது ஆன்மாவைத் தெரியவொட்டாமல் மூடியிருக்கின்ற பச்சைத் திரையாகிய ராகாதிகளை விசார அதியுஷ்ணத்தாலல்லது, மற்ற உஷ்ணங்களால் நீக்க முடியாது. அந்த உஷ்ணம் யோகியினுடைய அனுபவத்தில் தெரியும். அதை மனுஷ்ய தரத்தில் உண்டுபண்ணுவதற்குத் தெரியாது. அந்த விசாரத்தைவிட ஆண்டவரை ஸ்தோத்திரம் செய்கின்றதிலும் தெய்வத்தை நினைக்கின்றதிலும் அதிக உஷ்ணம் உண்டாகும். யோகிகள் வனம் மலை மழை முதலியவற்றிற்குப் போய், நூறு ஆயிரம் முதலிய வருஷ காலம் தவஞ்செய்து, இவ் உஷ்ணத்தை உண்டு பண்ணிக் கொள்ளுகிறார்கள். இப்படித் தவம் செய்து உஷ்ணத்தை உண்டு பண்ணிக் கொள்ளுகிறதைப் பார்க்கிலும், தெய்வத்தை ஸ்தோத்திரம் செய்கின்றதிலும் நினைக்கின்றதிலும் - இதைவிடக் - கோடிப்பங்கு, பத்து கோடிப் பங்கு அதிகமாக உஷ்ணம் உண்டு பண்ணிக் கொள்ளலாம். எவ்வாறெனில்: ஒரு ஜாம நேரம், மனத்தில் இக விசாரமின்றிப் பர விசாரிப்புடன் ஆன்ம நெகிழ்ச்சியோடு தெய்வத்தைச் சிந்தித்துக் கொண்டாவது அல்லது ஸ்தோத்திரம் செய்து கொண்டாவதிருந்தால், நாம் பெற வேண்டியதைப் பெற்றுக் கொள்ளலாம்.

அந்த விசாரம் செய்வது எப்படியென்றால்: அண்டத்தில் சூரியன் சந்திரன் நக்ஷத்திரங்கள் - இவைகள் எப்படிப்பட்டன? இவைகளினுடைய சொரூப ரூப சுபாவம் என்ன? இவை முதலான அண்ட விசாரமும், பிண்டத்தில் நாம் யார்? இத் தேகத்தின் கண் புருவம் கைம்மூலம் - இவைகளிலும் இவை போன்ற மற்ற இடங்களிலும் உரோமம் உண்டாவானேன்? நெற்றி முதலான இடங்களில் அது தோன்றாதிருப்பதென்ன? கால் கைகளிலுள்ள விரல்களில் நகம் முளைத்தலும் அந் நகம் வளர்தலும் - இவை போன்ற மற்றத் தத்துவங்களினது சொரூப ரூப சுபாவங்களும் என்ன வென்னும் பிண்ட விசாரமுஞ் செய்து கொண்டிருங்கள்.

இங்கு வள்ளலார் அண்ட விசாரத்தையும் பிண்ட விசாரத்தையும் சொல்லுகிறார் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். ஏனெனில் இப்படி அண்ட விசாரமும் பிண்ட விசாரமும் மட்டும் செய்து கொண்டிருப்பில் ஆன்மாவை தெரியவொட்டாமல் மறைத்திருக்கின்ற அனந்த திரைகள் விலகுமா என கேட்டுப்பாருன்கள்.....பதிலாக தோன்றுவது முடியாது என்பதே. ஆதலினாலே வள்ளல் பெருமானார் வேலாயுத முதலியாரிடம் சத் விசாரத்தினை கேட்டு தெளிவு பெற சொல்லுகிறார்.

இவற்றில் அண்ட விசாரமும் பிண்ட விசாரமும் பர விசாரமாகுமா என்பது ஆரய்வது அவசியம். இவை சத் விசாரத்தின் கீழ்நிலை விசாரமேயாம்., அல்லது உலக விசாரமேயாம். அப்படியெனில் நாம் விசாரிக்கவேண்டிய பரநிலை விசாரிப்பு எவ்வண்ணமானது என்பதை வள்ளலாரும் குறிக்கவில்லை, வேலாயுத முதலியாரும் விளக்கவில்லை அல்லவா?....ஆதலினால் அந்த ரகசியமான சத்விசாரத்தை நாம் எவ்வண்ணமேனும் அறிந்து கொள்ளுதல் நலமன்றோ?.

சன்மார்க்கிகளின் லட்சிய ஸ்தானம் என்பது “பெரு வெளி’ என்பது திண்ணம். நாம் அடையவேண்டியதும் அறிந்து கொள்ளவேண்டியதும் பெருவெளியேயாகும். அதையே வள்ளலாரும் “இவ்வண்ணம் அண்ட விசாரமும் பிண்டவிசாரமும் செய்து கொண்டிருக்க அறிய வேண்டியதை அறிந்து கொள்ளலாம்” என்கிறார்...அதாவது நாம் அறிந்து கொள்ளவேண்டிய “உண்மை” என்பது பெருவெளி என்பது தான்.

பெருவெளி என்பது என்ன என சத் விசாரம் பண்ணுவதே பரவிசாரத்தின் உண்மை நோக்கம். ஆதலினால் அந்த “தகர மெய்ஞான தனிப்பெரு வெளியெனும் அகர நிலைப்பதி அருட்பெரும் ஜோதி” என்ன என்பதை சத் விசாரம் பண்ணக்கடவோம்.... அதுவல்லவா உண்மை பர விசாரிப்பான சத் விசாரம்?...அதுவல்லவா நமக்கு பர இன்பத்தை வழங்கும் தன்மையது?...அதனால் அல்லவா ஆன்மாவுக்கு உஷ்ணம் பெருகும்?....ஆனால்........எப்படி உஷ்ணம் பெருகும்?
தகர நிலை என்ன என்பதும் அதனுள் விளங்கும் அகர நிலை என்ன என்பதும் இப்போதைக்கு சத் விசாரம் பண்ணுவோம்...காலம் கனியட்டும் , விளங்க வேண்டியது உண்மையாக விளங்கும் வள்ளல் குரு பிரானின் ஆசியுடன்.

அருட்பெரும் ஜோதி ஆண்டவர் என்பவர் யார்?

 =====அருட்பெரும் ஜோதி ஆண்டவர் என்பவர் யார்?======


வடலூர் வள்ளல்பிரானால் வெளிப்பெடுத்த பெற்ற ஜோதி ஆண்டவரை யார் என்று நாம் அறிந்து கொள்ளுதல் நல்லது தானே அன்பானவர்களே?. தற்போது எங்கு பார்க்கினும் சன்மார்க்கிகள் என்பவர்கள் ஜோதி வழிபாடினை கொண்டிருப்பதை நம் காணலாம். வடலூரிலும் இதே முறைப்படி ஜோதி தரிசனம் காட்டப்பட்டு ஆராதனை செய்யப்பட்டு வருவது நாம் எல்லோரும் அறிந்ததே. ஆனால் வள்ளலார் வழிமுறை தானா இது என வினவுங்கால் சந்தேகமே மிஞ்சுகின்றது. ஏனெனில் அருட்பெரும் ஜோதியார் என்பவர் இவ்வண்ணம் விளங்குபவர் அல்லர் என்பதே வள்ளலார் கூறும் உண்மை மொழி.

இதோ அவர் கூற்று, படித்து தெளிவு பெறுங்கள்.

நாம் நாமும் முன் பார்த்தும் கேட்டும் லக்ஷியம் வைத்துக் கொண்டிருந்த வேதம், ஆகமம், புராணம், இதிகாசம் முதலிய கலைகள் எதனிலும் லக்ஷியம் வைக்க வேண்டாம். ஏனென்றால், அவைகளில் ஒன்றிலாவது குழூஉக்குறியன்றித் தெய்வத்தை இன்னபடி என்றும், தெய்வத்தினுடைய உண்மை இன்னதென்றும், கொஞ்சமேனும் புறங் கவியச் சொல்லாமல், மண்ணைப்போட்டு மறைத்து விட்டார்கள். அணுமாத்திரமேனுந் தெரிவிக்காமல், பிண்ட லக்ஷணத்தை அண்டத்தில் காட்டினார்கள். யாதெனில்: கைலாசபதி என்றும் வைகுண்டபதி என்றும் சத்தியலோகாதிபதியென்றும் பெயரிட்டு, இடம் வாகனம் ஆயுதம் வடிவம் ரூபம் முதலியவையும் ஒரு மனுஷ்யனுக்கு அமைப்பதுபோல் அமைத்து, உண்மையாக இருப்பதாகச் சொல்லியிருக்கின்றார்கள். "தெய்வத்துக்குக் கை கால் முதலியன இருக்குமா?" என்று கேட்பவர்க்குப் பதில் சொல்லத் தெரியாது விழிக்கின்றார்கள். இஃது உண்மையாக இருப்பதாகவே முன்னும் பின்னும் உள்ள பெரியவர்களென்று பெயரிட்டுக் கொண்டிருந்தவர்களும் உண்மையை அறியாது, அப்படியே கண்ணை மூடிக்கொண்டு உளறியிருக்கிறார்கள். ஆனால், ஆதியிலே இதை மறைத்தவன் ஓர் வல்லவன். அவன் மறைத்ததை இதுவரைக்கும் ஒருவரும் கண்டபாடில்லை. அவன் பூட்டிய அந்தப் பூட்டை ஒருவரும் திறக்கவில்லை. இதுவரைக்கும் அப்படிப்பட்டவன் பூட்டிய பூட்டை உடைக்க ஒருவரும் வரவில்லை.

இதுபோல், சைவம் வைணவம் முதலிய சமயங்களிலும், வேதாந்தம் சித்தாந்தம் முதலிய மதங்களிலும் லக்ஷியம் வைக்க வேண்டாம். அவற்றில் தெய்வத்தைப் பற்றிக் குழூஉக் குறியாகக் குறித்திருக்கிறதேயன்றிப் புறங்கவியச் சொல்லவில்லை. அவ்வாறு பயிலுவோமேயானால் நமக்குக் காலமில்லை. ஆதலால் அவற்றில் லக்ஷியம் வைக்க வேண்டாம். ஏனெனில், அவைகளிலும் அவ்வச்சமய மதங்களிலும் - அற்பப் பிரயோஜனம் பெற்றுக் கொள்ளக்கூடுமேயல்லது, ஒப்பற்ற பெரிய வாழ்வாகிய இயற்கையுண்மை என்னும் ஆன்மானுபவத்தைப் பெற்றுக் கொள்கின்றதற்கு முடியாது.

சமயந்தவிர மதங்களில் உள்ள வேதாந்தி சித்தாந்தி யென்று பெயரிட்டுக் கொண்ட பெரியவர்களும் உண்மை யறியாது, சமயவாதிகளைப் போலவே ஒன்று கிடக்க ஒன்றை உளறுகிறார்கள். ஆதலால் நீங்கள் அஃது ஒன்றையும் நம்பவேண்டாம் எவைகளிலும் தெய்வத்தைப் புறமுகமாகப் புலப்படச் சொல்லவில்லை. ஒரு பதார்த்தத்தை அனுபவித்தாலல்லது அந்தப் பதார்த்தத்தினுடைய ருசி தெரியாது. ருசி தெரியாத பதார்த்தத்தின் மேல் இச்சை போகாது. அதுபோல், தெய்வத்தையுள்ளபடி அனுபவித்தாலல்லது, தெய்வத்தினிடத்தில் பிரியம் வாராது. ஆதலால், தெய்வத்தைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்கிற முக்கிய லக்ஷியத்திலிருந்து கொண்டு விசாரஞ் செய்துகொண்டிருங்கள்.

மேலும், சமய மதங்களில் தெய்வத்தினது உண்மையைக் குழூஉக்குறியால் குறித்து, அக்குறிப்பையும் வெளிப்படையாகக் காட்டாது சிவாயநம என்றும், நமசிவாய என்றும், இது போன்ற அனந்த வர்ணங்களைச் சேர்த்து, ஒன்று இரண்டு மூன்று ஐந்து ஆறு எட்டு பத்து பதின்மூன்று பதினைந்து பதினாறு இருபத்துநான்கு முதலிய சங்கையில் மந்திரங்களாய் அமைத்து வழங்கி வருவிக்கவிட்டு நடந்து வருகின்றது. அவ்வவ் மந்திரங்களின் அர்த்தம் பலவாக விரியும் ஆதலால்.... நாம் அடைய வேண்டுவது முடிவான ஆன்மலாபமாகிய சிவானுபவமேயன்றி வேறில்லை.

இத் தருணம் ஆண்டவர் எல்லாவற்றையும் நீக்கி எல்லோரும் மேலான இன்பத்தை அடையும் பொருட்டு, முடிவான இன்பானுபவத்திற்குச் சாதக சகாயமான திருவருள் மகாவாக்கியத் திருமந்திரத்தை - தமது உண்மையை வெளிப்படக் காட்டும் மகாமந்திர வாக்கியத்தை - எனக்கு வெளியிட்ட அவ்வண்ணம், எனது மெய்யறிவின்கண் அனுபவித்தெழுந்த - உண்மையறிவனுபவானந்த இன்பத்தை நீங்கள் எல்லவரும் என்போல் ஐயம் திரிபு மயக்கம் இன்றி அடைய என்னுள்ளே எழுந்து பொங்கிய ஆன்ம நேய உரிமைப்பாட்டுரிமையைப் பற்றிக் குறிப்பித்தேன்; குறிப்பிக்கின்றேன்; குறிப்பிப்பேன். நமது ஆண்டவர் கட்டளையிட்டது யாதெனில்: நமக்கு முன் சாதனம் கருணையானதினாலே, ஆண்டவர் முதற்சாதனமாக

அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி தனிப்பெருங் கருணை அருட்பெருஞ் ஜோதி

என்னும் திருமந்திரத்தை வெளிப்படையாக எடுத்துக் கொண்டார். தயவு, கருணை, அருள் என்பவை ஒரு பொருளையே குறிக்கும். ஆதலால் பெரிய தயவுடைய அறிவே பூரண இன்பமாம். அது ஒப்பற்ற பெருந் தயவுடைய பேரறிவேயாம். இஃது வாச்சியார்த்தம். இவ்வண்ணம் சாதனம் முதிர்ந்தால், முடிவான இன்பானுபவம் பெறுவதற்குத் தடையில்லை.

மேலும், இதுகாறும் தெய்வத்தின் உண்மையைத் தெரிய வொட்டாது, அசுத்த மாயாகாரிகளாகிய சித்தர்கள் மறைத்து விட்டார்கள். சுத்தமாயாகாரியாகிய தெரிந்த பெரியோரும் இல்லை. சன்மார்க்கமும் இல்லை. சன்மார்க்கம் இருந்தால், அனுபவித்தறியாத அனுபவமும் கேட்டறியாத கேள்வியும் நாம் கேட்டிருப்போம். மேலும் இறந்தவர்கள் மீளவும் எழுந்து வந்திருப்பார்கள். ஆதலால், கேட்டறியாத கேள்விகளைக் கேட்கும்படி ஆண்டவர் செய்தது இத்தருணமே. ஆதலால் இத் தருணம் இக்காலமே சன்மார்க்கக் காலம்.

முன் உள்ளவர்கள் உண்மையைத் தெரியவொட்டாது மண்ணைப் போட்டு மறைத்து விட்டார்கள். இத்தருணம் ஆண்டவரும் தெரிவித்தார், தெரிவிக்கின்றார், தெரிவிப்பார். நீங்கள் எல்லவரும் உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள். இப்போது நான் சொல்லி வந்த பிரகாரம் ஜாக்கிரதையுடன் உண்மையறிவாய் விசாரம் செய்து கொண்டிருங்கள். அவசியம் இதற்குக் காரணமான தயவிருக்க வேண்டியது. அந்தத் தயவு வருவதற்கு ஏதுவான உரிமையும் கூட இருக்க வேண்டும். இப்படி இருந்து கொண்டிருந்தால் ஆண்டவர் வந்தவுடனே எல்லா நன்மையையும் பெற்றுக் கொள்வீர்கள். இது சத்தியம், சத்தியம், சத்தியம். இஃது ஆண்டவர் கட்டளை.

இங்கு மஹாமந்திரத்திற்க்கு பொருள் சொல்லும் போது அதை “வாச்சியார்த்தம்” என வள்ளலார் சொல்லுகின்றார், அதாவது மஹா மந்திரத்தின் உண்மை பொருள் விளக்கமே அது. இதையே சித்தர்களும் முன் உள்ள ஞானிகளும் மறைத்து விட்டதாக வள்ளலார் சொல்லுகிறார்.அந்த உண்மை தான் என்ன என அறியும் போதே அருட்பெரும் ஜோதி ஆண்டவர் என்பவர் யார் என நமக்கு விளங்க ஆரம்பிக்கும். அதனை பார்ப்போம்.

மஹாமந்திரமான,’அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி’ எனும் வாக்கியத்தின் பொருளாக வள்ளலார் குறிப்பிட்டுள்ளது என்னவென்றால் “பெரிய தயவுடைய அறிவே பூரண இன்பமாம். அது ஒப்பற்ற பெருந் தயவுடைய பேரறிவேயாம். இஃது வாச்சியார்த்தம்“ என்பதாகும். சற்று கவனித்து பார்க்கில் இது புலப்பெடும்.

இங்கு மஹாமந்திரத்தின் பொருள் என்பதில் எங்குமே’ ஜோதி ’என சொல்லப்படவில்லை என்பதை கவனிக்கவும். அருட்பெரும் ஜோதி என்பதனை வள்ளலார் ”பேரறிவு” என்றே விளக்கம் தருகிறார். அப்படித்தானே?.அப்படி பார்க்கும் போது இப்படி ’ஒப்பற்ற பெரும் தயவை உடைய பேரறிவே ’ அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை என்பது புலப்படுகிறதல்லவா? இதை தான் சித்தர்களும் ஞானிகளும் மண்ணை போட்டு உண்மை தெரியவொட்டாமல் மறைத்து விட்டதாக வள்ளல் பெருமான் சாடுகிறார். ஆதலினால் அன்பார்ந்த சன்மார்க்க அன்பர்களே நீங்களும் “உண்மை” கடவுளான “பேரறிவினை” வணங்கி வழிபடுங்கள்.அதை விடுத்து ஒரு விளக்கினை வழிபடுவது சன்மார்க்கமல்ல என்பது வள்ளல் கழலிணை தொட்டு விளம்புகிறேன்.நன்றி வணக்கம்.