Monday, October 9, 2023

கண்

 கண் என்பது அது அனைத்திற்க்கும் மையமாக இருப்பதினால் கண் என புனை பெயர், ஊற்றுக்கண் என சொல்லுவது போல.


 அதிலிருந்து தான் ஜீவ வெப்பம் கிளம்புகிறது.. அது இரெத்தத்தின் ஊடாய் கலந்து உடம்பு முழுதும் ஜீவனை பிரதிபலிக்கிறது...

அது கெட்டுபோகாமல் இருக்க செய்வது உபாயத்தால் ஆகும்.


 உடலில் எங்காவது உஷ்ணம் அற்று போனால் அந்த இடம் முழுதும் மரத்து போய்விடும்., பிறகு அது ஜீவனற்று விடும், உணர்ச்சிக்கு வராது, புலனுக்கு வராது.


 அப்படி தன்னுக்குளே இருக்கும் அக்கினிக்கு உணவு கொடுப்பதே உண்மை ஹோமம்.


-

ஏதோ தியானம்

 ஏதோ தியானம் ஆரம்பிக்கபோறோம்ணு பெரிய விஷயம்ணு நெனைக்காதீங்க, தியானம் ஒண்ணும் பெரியசங்கதி ஒண்ணுமில்லே, ஆனா பெரிய விஷயத்துக்கு ஆரம்பம் தான்.


எல்லோரும் ரொம்பவும் தான் தியானம்ணு அலட்டிக்கிறாங்க, அப்படி இருக்கணும், இப்படி இருக்கபடாது, அந்த நெனைப்பு வரகூடாது, இப்படித்தான் இருந்து செய்யணும்ணு ஏராலமான கட்டுப்பாடுகளை தியானத்துக்கு விதிச்சுருவாங்க, அதனால தியானம் சரியாக எப்பவுமே அமையறதுல்லை. 


இது தான் தியானத்துக்கு வரும் குறுக்கீடு.


 தியானத்துக்கு எந்த கட்டுபாடுகளும் தேவையில்லை, கட்டுபாடுகளை களைந்து இருப்பதே தியானம், அது அருமையானது.


உருவதியானம் அருவதியானம்ணு ரெண்டு இருக்கு, அதுல உருவதியானம்ங்கிறது சுமா எதாவது ஒரு பொருள்மேலயோ அல்லது நமக்கு மனதுக்க் பிடிச்ச சிலை விக்கிரகம் சக்கரம் முதலியவற்றின் மீது மனம் செலுத்தி இருப்பது.


 மற்றொண்ணு அருவதியானம், அது இறை கலப்பில் மனம் இருப்பது, சிலை விக்கிரகம் என ஒண்ணும் இருக்காது, மனம் எப்பவும் இறைநினைப்பிலேயே ஆழ்ந்து இருக்கும். இந்த ரெண்டுவித தியானத்துமேலயும் கட்டுபாடுகள் விதிச்சுகிட்டு ஏதோ சாதிக்கபோறோம்ங்கிற நெனைப்புல இருந்துகிட்டீங்கண்ணா நீங்க சத்தியமா தியானத்துக்கு வரமாட்டீங்க. 


இந்த புரிதல் இல்லாம தியானம் கைகூடாது. அதுனால சிம்பிளாக தாகத்துக்கு தண்ணிகுடிக்கிறமாதிரி தியானம் பண்ண புரிஞ்சுக்குங்க. தாகத்துக்கு தண்ணிகுடிக்கிறது ரெம்ப கேசுவலானது, தியானமும் அப்படித்தான் இருக்கணும். ஆன்மதாகத்துக்கு குடிக்கிற தியான தண்னீர். அதை சும்மா குடியுங்க, கட்டுபாடு்களை களையுங்க.....

அனாதி இயற்கை இல்லை

 வள்ளலார் மரணத்தை பற்றி தன் ஞான விளக்கங்களில் எவ்வாறு விளக்குகின்றார் என்பதை கண்ணுறும் போது, அது ஆச்சரியமடைய செய்கின்றது. 


ஆம், என்னதான் அவர் பார்வை என்பதை சற்று சிந்திப்போம், அது நமக்கு நலம் பயக்குமல்லவா?


மரணம் என்பது “அனாதி இயற்கை இல்லை, ஆதி செயற்கையாம்” இது வள்ளலார் வாய்மொழி, அவர் உபதேச குறிப்பு. 


இங்கு மரணம் எப்படி “ஆதியில் செயற்கையானது?” அதை பற்றி விளக்கம் வரவேண்டுமெனில் “ஆதி இயற்கை" என்பது என்னவென நாம் முற்றாக அறிந்திராவிடில் அறிவுதயமாகா, அல்லவா?. 


ஆகையினால் “ஆதி எது- அனாதி எது?” என்பதை திட்டமாக அறிந்து நாம் நம்மை உய்ய்த்தேற்றவேண்டுமல்லவா? 

அனாதியில் இல்லாதிருந்த மரணம் எங்கிருந்து ஆதியில் செயற்கையாக ஜீவகுலங்களை பிடித்துகொண்டது என்பதின் வம்ச வரலாறு தான் என்ன?


அன்பர்கள் சிந்திக்ககடவீர்கள். மரணம் வந்த வழி என்ன? வந்த வரலாறு என்ன? வந்தோன்றிய காரணம் தான் என்ன? மனுபயிர்குலங்கள் மாளாவழிதான் என்ன?

சத்தம் அடங்குமிடம் சற்குரு நின்றவிடம்

 சத்தம் அடங்குமிடம் சற்குரு நின்றவிடம் என்பர்... அதுவே மூச்சு அடங்குமிடம்.... இதுவே செவிச்செல்வத்தின் பயன் என்பர் அறிவுடையோர்.....


சத்தம் அடங்குவது ஆகாயத்தில்.... எந்தளவு சத்தம் ஆகாயத்தில் சென்றாலும் அது ஆகாயத்தில் அடங்கிவிடும் இல்லயா?....(இது குழப்புற வேலை)


காற்றும் ஆகாயத்தில் அடங்கிவிடும் இல்லயா... ஐம்பூத தன்மாத்திரைகளில் சத்தம் ஆகாயதன்மாத்திரை... அதாவது ஆகாயம் சத்தத்தில் அடங்கும்.... ஆகாயமே சத்தத்தில் அடங்கும்போது காற்றும் மூச்சும் எம்மாத்திரம்?


நாதமும் நாதர்களும் மட்டுமே மிஞ்சுவர் எனப்பொருள் அன்பரே...


வெளி அறிவுக்கு சத்தம் ஆகாயத்தில் அடங்கும் தான் தெரியும்... ஆனால் ஆகாயம் "சத்தத்தில் அடங்குவது அகமியம்".....


ஆதியில் வார்த்தை இருந்தது,அந்த வார்த்தை தேவனோடிருந்தது,அந்த வார்த்தை தேவனாயிருந்தது,,சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று, உண்டானதொன்றும் அவராலேயன்றி உண்டாகவில்லை...அவருக்குள் சீவன் இருந்தது, அந்த சீவன் மனிதருக்கு ஒளியாயிருந்தது....(பைபிள்)


புறம் என்பது அகத்தின் விரிவே....தன்னிலையின் போதே இது தெளியும்....கூறுபட்ட மனதுக்கு இது விளங்காது....ஒருமையின் ஓர்மை நினைவுக்குள் அடங்கும் போதே ஒருமையும் பன்மையும் புலம்படப்புலரும்....புலத்துக்கு புலர்ந்ததா?


உதாகரணமாக, எப்படி அகமியமான இறைவன் அகத்திலும் புறத்திலும் காரணகாரிய சொரூபராகி விளங்குகிறவராயும் விளங்கப்படுகிறவராயும் உளரோ அச்சொரூபம் என்க..


வள்ளலாரும் இதையே குறிக்கும் பொருட்டு, "இயற்கையில் தானே இருக்கின்றவராய் விளங்குகின்றவரும், இயற்கையில் தானே விளங்குகின்றவராய் இருக்கின்றவரும்" என்பார்....


உள்ளும் புறம்பும் இல்லாமல் உள்ளும் புறம்பும் நீக்கமற நிறைந்திருக்கும் நிறைவை அறிவதே....இதுவே ஆறாம் அறிவு.....அதுவே அகத்தையும் புறத்தையும் காணும் மார்க்கம்....அவ்ர்களே மனு ஈசர்கள்


அதுவே சூக்கும "இருதயம்"..... அதை உணர்த்துபவர் குருபிரானே அன்றி வேறில்லர்....


இதை தெரிந்து கொள்ளாதவர்களே இங்கு அதிகம் சவுடால் விடுபவர்கள்....இருதயத்தை அறிந்தவனே அறிவுடயவன்....அவர்களே கற்றவர்கள்...அக்கல்வியே சாகாகல்வி....


தேடல் உள்ளவர்களுக்கு உள்ளார்...இருத்யமும் கிடைக்கும்


ஒரு குரு வந்து உபதேசித்தும் குரு உபதேசித்த பொருள் என்ன என்று புரிந்திராத சீடர்களையும் பார்த்திருக்கிரேன்...அப்படியானால் குரு உபதேசத்தினால் ஒன்றும் ஆகப்போவதில்லை என்று பொருள்.....அதாவது வயல் வளமாக இருந்தாலே பயிர் செழிப்பய் வளரும்....


வளமில்லாது கூறுகெட்ட வயலினால் ஆவது என்ன? பயிர் முளை கூட விடாது....ஆதலால் குருவை அடையும் முன் வயலை பண்படுத்திக்கொண்டு அவர்கள் முன் செல்லவேண்டும்...அல்லாவிடில் அவர்கள் விதைக்கும் வித்தானது எந்த பயனும் இன்றி போகும்...


ஏனெனில் அவர்கள் விதைக்கும் விதையானது பூமியின் விதையன்று...கூறுகெட்ட சீடனுக்கு அது என்னவென்றே தெரிய வாய்ப்பில்லை....அவர்கள் விதை தேவ உலகத்து விதை..அதன் வண்ணமும் வனப்பும் அறிந்தவரே அறிவார்...அது அறியா சீடன் பாரத்த மாத்திரத்திலே கதைக்கு உதவாது என சொல்லி தூக்கி போட்டு விடுவதே அதிகம்....பிறகு காலம் கடந்து காலன் கைஇகு கதி...


பாராயணம் பண்னுவது என்பது ஒரு நொடுக்கு வித்தை...அதை அவர்கள் சாமர்தியமாக மறைத்து வைத்துள்ளனர்...வித்தை கற்றவர்களுக்கு தான் அதன் சூட்சுமம் தெரியும்....


சாமர்த்தியமாக அவர்கல் மறைத்தது நன்மைக்கே...எள்ளளவினும் அறிவற்ற மாக்கள் உய்யும் பொருட்டே அவர்கள் அதை மறைத்து அருள் செய்துள்ளனர்...எப்படியெனின், சிறு மதலைகளுக்கு கசப்பான மருந்தை கொடுக்கும் போது அவர்கள் அதை உமிழ்ந்துவிட வாய்புண்டு என்பதை கருத்தில் கொண்டே வைத்தியர் மருந்தை கருப்பட்டி பாகில் குழைத்து வைத்திருப்பார்,,, குழந்தையும் ஆவலுடன் வெறுப்பின்றி உட்கொள்ளும்...இதுவே நொடுக்கு வித்தை....


இப்படியெ பாராயனமும்...கருப்பட்டி பாகில் குழைத்த வித்தயே அது....பாகில் குழைக்காவிட்டால் அதன் கடுமை தன்மையினால் மக்கள் அதை நிரசித்துவிடுவர்....


முற்றிலும் இது குருபிரான் அவர்களின் கனிவே, கருணையே...அவர்கள் மனப்பூர்வமாக கிடைக்ககூடாது என்று மறைத்த மறைப்பு அல்ல...ஆனால் பண்பட்டவர்களுக்கு அதுவே போதும்...அதிலிருந்து மருந்தை தெரிந்து கொள்வர்...கருப்பட்டிபாகை சிறிது சொரண்டி பார்க்க வேண்டும்..சிறிது நிறம் மாற்றம் தெரியும் கொஞ்சம் கூட சொரண்டும் போது புரியும் உள்ளே இருப்பது அருமருந்து என்பது புரியும்

அமிர்த பாஷிணி

 அமிர்த பாஷிணி

பிராணாயாமம் முதலான சம்பிரதாயங்களினூடே எவ்வண்ணம் குண்டலிணீ சக்தியை உணர்வு நிலைக்கு கொண்டு வருகிறோமோ அவ்வண்ணம் மற்றொரு முறை தான் பேச்சு சக்தியை கொண்டு உணர்வு நிலைக்கு மேலேறும் முறையும்.  இதை ஓதி ஓதி உணர்தல், ஓதாதுணர்தல் என வகைபடுத்துவர் ஞானியர்கள்.


பேச்சின் சூட்சும அறிவு நிலைக்கு பரையறிவு அல்லது வாலறிவு என்பர்.  பர வித்தை என்பதும் இதை கொண்டு இயற்றப்படும் சம்பிரதாயம்தான்.  இவ்வண்ணம் பிராணனுக்கும் பேச்சுக்க்கும் மையமாக திகழ்வது ஒரு அமானித விந்துநிலை. அதற்க்கு தான் வித்யா தத்துவம் என பெயர் வைக்கபட்டிருக்கின்றது. எழுநிலை சூட்சுமம் அது, அதில் இருந்து கிளம்புவதால்,  அமிர்த விந்துவுக்கு எழுத்து என பெயர் வைக்கபட்டிருக்கின்றது.  அட்சர சொரூபமாக வாலறிவாக விளங்குவதால் சித்சொரூப சக்திக்கு வாலை என பெயர்.  அதாவது அமிர்த சொரூபமாக சதா வடிந்து கொண்டிருப்பவள், அமிர்த பாஷிணி.

மண்ணும் நீரும் - சிருஷ்டி

 மண்ணும் நீரும் - சிருஷ்டி 


”ஐந்துகரத்தனை யானை முகத்தனை 

இந்தினிளம்பிறை போலுமெயிற்றினை

நந்தி மகன்தனை ஞானகொழுந்தினை

புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே”


வினாயகர் “நந்தி மகன்” ஆவது எங்ஙனம் என நாம் சற்று கவனித்து விடைகொள்ளுதல் நலம் அல்லவா?


நந்தி என்பது சிவனாரின் வாகனமாக சொல்லபடுகின்றது .. அப்படியிருக்க நந்தியும் சிவனாரும் ஒன்று என்பது எவ்வாறு? 


திருமூலரும் நந்தி என்பது சிவனார் நாமம் என சொல்லியிருக்கின்றார்?... ஏன் இந்த நந்தி எனும் நாமம்?..


திருமந்திரத்தில் கூட ‘தந்தைக்கு முன்னே மகன் பிறந்தானே” எனும் ஒரு பாடல் உண்டு... அதுபோல மூவர்க்கும் மூத்தவன் ஞானகணபதி எனவும் வழக்கம் உள்ளது... இதுவெல்லாம் ஏன்? கணபதி எங்ஙனம் மூவருக்கும் மூத்தவன் ஆக சொல்லபடுகிறார்?


பிரணவ சொரூபராகவும் கணபதியை காட்டுகின்றனர்.

 மூலாதாரத்தில் கணபதியின் இடபக்க மடியில் தான் பராசக்தி அமர்ந்திருக்கிறார் என்கிறார்கள். 


கணபதியின் மடியில் பராசக்தி அமர்வது எங்ஙனம் தகும்?


ஆனா பாருங்க... சிவனார் போலவே இவருக்கும் "இளம்பிறை" கொண்டிருப்பார்.... வேறு யாருக்கும் இது கிடையாது.. பராசக்தி சிவன் கணபதி மூவருக்கு தான் உள்ளது.


இந்த கணபதியே “ஆதி குரு” என்கிறது நூல்... 


ஆதிமூல கணபதியான இவர் தாய் தகப்பன் இல்லாமல் தனியனாக இருந்தவராம்... இவர் தான் தன்னுக்குள் இருந்து பிரணவ வடிவிலான பராசக்தியை வெளிப்படுத்தியவராம்.. அதனால் இவர் பிரணவமூர்த்தமாகின்றார்.


*ஓம்-னம*

======


ஆதியில் இருந்த பொருள் இரண்டாக பிரிந்தது *“ஓம்-னம”* என அண்டமும் பிண்டமும் ஆச்சு.


"நம" என்பதை நாம நமஸ்கரிக்கும் விதமாக புரிஞ்சுண்டிருக்கோம், ஆனா தத்வார்த்தம் என்பது வேறு.


 எப்படி பிரணவத்துக்கு தத்வார்த்தம் இருக்குதோ அது போல "நம"-வுக்கும் இருக்குது. இவை இரண்டும் ஆதியானவையே.. சர்வ பிரபஞ்சமும் சர்வ ஆற்றல்கலும் இந்த "நம'வில் ஒடுக்கம்


"ஓம்" என்பது ஆன்மீகம் எனில், "நம" என்பது பவுதீகம். பிரபஞ்ச காரணீ, மாயாகாரணீ. கீதையில் கண்ணன் கூட மாயையின் தன்மையை அளக்கமுடியாது, அதை விவரிக்கமுடியாத தன்மை கொண்டது என்கிறார். புரிந்துகொள்ளமுடியாதது மாயை. விசித்திரமானது, எல்லையில்லாதது. பிரணவத்தை போல.


ஓம் என்பதில் ஒரு ஒடுக்கம் உள்ளது ஆனால் நமவுக்கு ஒடுக்கம் கிடையாது.. சர்வ வியாபினி, சர்வ பஹிர் வியாப்தினி, சர்வ குருத்வாஹர்ஷிணி, சர்வ விக்‌ஷேபிணி என பலமுகம்.


ஆதியாகமத்தில் தேவனின் சிருஷ்டி விபரம் இதைக் குறித்துச் சொல்லியுள்ளது *ந - மண். ம- நீர்* என்றும் எங்கோ படித்த ஞாபகம். 


நம என்பது காரியபடாமல் போனால் சித்தி பிராப்தி இல்லை. மாயா பந்திதமாகவே இருப்போம். சைவத்தில் இதை மாயை திரோதாயி என விளக்குவார்கள். 


*மண்ணும் நீரும் சேர்ந்த கலவை தான் உடல்.* ஆனால் உரை கடந்த பொருள் சொல்லபட்டுள்ளன.


ஓம் எனும் பிரணவத்தை விளக்க எண்ணற்ற நூல்கள் இருக்கின்றன, ஆனால் நமவை விளக்க ஒரு நூல் கூட இல்லை.


*சிறு குழந்தைகள் மண்ணும் நீரும் கொண்டு தான் விளையாடுவார்கள், அதனால் இதை விளையாட்டு பொருள் என மறைப்பாக சொல்லுவார்கள், அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உண்டு என்றால் அது இது தான்.*


இறைவனும் மண்ணும், நீரும் கொண்டு படைத்தழித்து விளையாடுகின்ற பொருள் என சொல்லலாம். சிருஷ்ட்டி சம்ஹாரம் போல.  (பிள்ளையார் பிடிச்சி அதன் மேல் புல் வைக்கும் பழக்கம். )


ஓம் என்பது ஆன்மீகத்தின் உச்சிக்கு கொண்டு செல்லும் என்றால், நம உடலை கற்பமாக்கும் செயல்திரம் கொண்டதுவாம் என சொல்லுகின்றனர் அறிந்தோர் சிலர்.


ஓம்-லிங்கம்; நம-சக்தி யோனி. அதான் புள்ளையார் பூசிக்கிறார் போல --- 


Thanks

riansathvicharam blogspot  com


தங்கள் அன்பு குடும்பமும் வாழ்வில் அனைத்து வளங்களையும் பெற்று குரு அருளாலும் இறை அருளாலும் அமைதி மகிழ்ச்சி வெற்றி பெற்று மேன்மேலும் சிறப்பாய் வாழ எனது மனமுவர்ந்த வாழ்த்துக்கள்.. 


விநாயகர் சதுர்த்தி தின வாழ்த்துக்கள். 


வாழ்க வளமுடன்..!

உள் அளவீடு

 ஏராளமான குருமார்கள்,ஏராளமான வழிமுறைகள்,ஏராளமான சம்பிரதாயங்கள்,ஏராளமான சித்தாந்தங்கள் என ஏராளம் பிரிவுகளாக ஆன்மீகம் விரிந்து கிடக்கின்றது. இவற்றில் எந்த வழிமுறையை பின்பற்றுவது என போகப்போக ஆன்மீக பிரயாணம் மேற்கொள்பவர்களுக்கு சந்தேகம் எழும்ப ஆரம்பிக்கின்றது.இது சகஜமான சந்தேகமே.ஏனெனில் இன்றைய காலகட்டத்தில் உண்மையை அறிந்தவர்களை எப்படி கண்டறிவது என்பதில் பெருத்த குளறுபடியே நிகழ்கின்றது.அனைவரும் தத்தமது வழிமுறையே சிறந்தது எனக் கொண்டு முன்னுக்கு செல்கின்றனர்.அவர்களாக அவர்களை அளவிட்டு கொள்வதிலும் சிரமம் தான் நிலவுகின்றது. அப்புறம் எதனைக் கொண்டு ஏனையவர்களை அளவிட்டு தெரிந்து கொள்வதாம்? ஏனெனில் தக்க அளவீட்டுமுறை எதுவென தெரியாத காரணத்தினால் எதனைக் கொண்டு அளவீடு செய்வதாம்? எந்த அளவுகோலை கைக்கொள்ளுவதாம், அல்லவா?

எந்தவொரு சாதனை சம்பிரதாயங்களும் முடிவானவை அல்ல,யோகமாயினும் தத்திரமாயினும் இவை ஆரம்பநிலை கருவிகளே தாம்.இதை புரித்து கொள்ளாதவர்கள் இவற்றையே பெரியது என நம்பி ஏமாந்து போகின்றனர்.தன்னை அறியும் தவமே தவங்களில் எல்லாம் தலை சிறந்தது.தானாக இருக்கும் தற்பரத்தை சார்ந்து ஒழுகும் தவமே மெய்த்தவம்.ஆனால் பிரச்சனை என்னவென்றால் தன்னை அறிதல் எவ்வாறு சாத்தியமாகும் என்பதை யோக தந்திரங்களில் சார்ந்துள்ளவர்களால் புரிந்து கொள்ள முடிவதில்லை.மனமானது அந்த படிநிலைக்கு உயர்ச்சி அடைந்து கொள்ளுவதில்லை.யோக சப்பிரதாயங்களோ தந்திர நுணுக்கங்களோ தான் மேலானவை எனும் நினைப்பில் மனம் அவற்றில் சிக்குண்டு அனேகம் காலங்கள் உழலுகின்றனர்.இவ்விதமான கட்டமைப்பு கொண்ட மனமானது எந்த அளவீட்டு முறையை கொண்டு உண்மை ஞான முறையை கண்டடையும்?ஆனால் இவர்கள் தங்களிடம் இருக்கும் அளவு கோலின் தகமைக்கு தக்கபடி அளந்து கொண்டு திரிவார்கள்.இவ்வண்ணமான அளவீட்டு முறைகளினால் உண்மை ஞானமான தன்னிலை அறிதல் சாத்தியமாகாது என்பதை இவர்கள் புரிந்து கொள்ளுவதில்லை.

வள்ளலாரின் உபதேசங்களில் தன்னை அறியும் குறிப்பு உள்ளது.ஆனால் அதை மக்கள் கருத்தில் எடுத்துக் கொள்ளுவதில்லை.அதை வேதாந்தப் எனக் கொண்டு கடந்து செல்லுகின்றனர்.வேதாந்த உபநிடதங்களில் உண்மை யாதெனில் தன்னை அறிதலே தாம்.பார்க்கும் தான் கெடுவது அத்வைதம் , பார்க்கப்படும் பொருளும் கெடுவது அதீதம் ,உண்மை என வள்ளலார் விளக்கிச் சென்றிருக்கின்றார்.இது என்னது என சாதாரண யோக தந்திரங்களில் இருப்போருக்கு புரிய வாய்ப்பில்லை.அவர்கள் கண்களுக்கு படுவதில்லை.அறிவுக்கு புலப்படாமலேயே கடந்து போய் விடுகின்றனர்.இதுவே தன்னை அறியும் தவம்.இதனை விட்டு விட்டு பரணெல்லாம் தேடித் துழாவுகின்றனர்.தேடுபவர்களும் இவ்வண்ணமான அறிவு எவரிடமாவது இருக்கின்றதா எனத் தேடவும் தெளிவு இன்றி,ஏதேதோ அளவுகோல்களினால் அளந்து கொண்டு திரிகின்றனர்.தெரிந்தவர்களும் இதனை பயிற்றுவிக்க தக்க மனப்பக்குவம் உள்ளவர்கள் எவராவது வரமாட்டார்களா என ஆவலுடன் எதிர்பார்ப்புடன் அமர்ந்திருக்கின்றனர்.

Tuesday, October 3, 2023

அவனின்றி அருளில்லை

 திருமந்திரத்தில் குருவே சிவனென கூறினான் என் நந்தி என ஒரு பாடல் வருகிறது. இந்த பாடலை காணும் போது குரு எங்ஙனம் சிவனாவார் என கேட்கத் தோன்றும்.ஏனெனில் குருவை பணியாதார்க்கு அருவமாய் நிற்கும் சிவம் என்பார்கள். குருவை பணிதலே அருளை பெற்றுக் கொள்ளும் உபாயமாம்.அந்த சிவ அருளானது குருவின் இருதய கமலத்திலே ஒளிந்துள்ளதாம். அவ்வருள் வெளிப்பட வேண்டுமெனில் பணிவு என்பதே திறவு கோலாம். பணிவின்றி நிற்கும் சீடனுக்கு குருவருள் என்பது கானல் நீரே தாம்.எத்தனை காலம் பயிற்சி செயினும் முன்னேற்றம் என்பது அடைய முடியாது போம்.அவனின் பணிவின்மையே அவனுக்கு தடையாக அமைந்து விடும்.ஆகையில் குருவருளே சிவம். பணிவற்ற எவனும் குருவை புரிந்து கொள்ளுவதில்லை.பணிவு வெளிப்படத் தான் எவனும் குருவை அறிகின்றான்.அவனுக்கு குருவின் சுயம் வெளிப்பட்டு தோன்றுகின்றதாம்.

Friday, September 22, 2023

நினைவெதுவோ அதுதானே சீவனாகும்

 அத்வைத வேதாந்த சாத்திரங்களான

கைவல்ய நவநீதம், ஞான வாசிட்டம் போன்று மெய்ஞ்ஞான தேட்டத்தில் உள்ளோர் அவசியம் படிக்க வேண்டிய நூல் ரிபு கீதையாகும்.


நான்கு வேதங்களின் ( உபநிடதங்கள்) சாரமான நான்கு மகா வாக்கியங்களின் விளக்கமே ரிபு கீதையாகும்.


இதிலிருந்து இரண்டு பாடல்கள் :


" நினைவெதுவோ அதுதானே சீவனாகும்

நினைவெதுவே அதுதானே ஈசனாகும்

நினைவெதுவோ அதுதானே சகமுமாகும் 

நினைவெதுவோ அதுதானே மனமுமாகும்

நினைவெதுவோ அதுதானே காமமாகும்

நினைவெதுவோ அதுதானே கருமமாகும்

நினைவெதுவோ அதுதானே துக்கமாகும் 

நினைவெதுவோ அதுதானே அனைத்துமாமே."



நினைவின்றி நிற்பதுவே அகண்ட மாகும்

நினைவின்றி நிற்பதுவே நிட்டையாகும்

நினைவின்றி நிற்பதுவே ஞானமாகும்

நினைவின்றி நிற்பதுவே மோட்சமாகும்

நினைவின்றி நிற்பதுவே சகசமாகும் 

நினைவின்றி நிற்பதுவே பிரமமாகும்

நினைவின்றி நிற்பதுவே சிவமுமாகும்

நினைவணுவு மில்லையெலாம்பிரமந் தானே!"


நம் நினைவுதான் சீவனாகும் .


நினைவற்ற பரிசுத்த நிலைதான் சிவமாகும் .


அருமையான உபதேச மொழி.

Tuesday, August 29, 2023

பாபாஜியின் குரல்

 அந்த பிரம்மாண்டமான மௌனத்தில் ‘நானும்’ நீயும் இல்லை, அவனும் இல்லை. 

அந்த விளக்குகளின் ஒளியில் கிழக்கோ, மேற்கோ, பகல், இரவு என்று எதுவுமில்லை. 

பிரம்மன் கால் இல்லாமல் நடக்கிறான், காது இல்லாமல் கேட்கிறான், நாக்கில்லாமல் பாடுகிறான், வாய் இல்லாமல் சுவைக்கிறான், கைகள் இல்லாமல் பிடிப்பவன். 

காற்றோ, நெருப்போ, பூமியோ, வானமோ, சூரியனோ, சந்திரனோ இல்லை. 

எதிர் ஜோடிகள் அங்கு இல்லை. 

தேவனுடைய ராஜ்யத்தில் இன்பமோ துன்பமோ இல்லை, அன்போ வெறுப்போ இல்லை, சந்தேகமோ மாயையோ இல்லை. 

அங்கே மரங்கள் அழியாப் பழங்களைத் தருகின்றன. 

அங்கு ஆறுகள் ஆனந்த அமுதத்துடன் பாய்கின்றன. 

தெய்வீக அன்பின் மலர்கள் நித்தியமாக மலர்கின்றன. 

தெய்வீக கருணையின் வற்றாத நீரோடை பாய்கிறது.



இந்த உயர்ந்த சுயத்தைப் பற்றிய அறிவு உங்களுக்குள் உள்ளது. 

உங்கள் இதயத்தின் ஆழத்தில் உள் குரல் கேட்கும் இடத்தில் அவரைத் தேடுங்கள். 

அங்கே தெய்வீக பிரகாசம் பிரகாசிக்கிறது. 

இந்த மிக இனிமையான, தெய்வீக சாரத்தை குடித்து அழியாதவராக ஆகுங்கள்.



ஓம் நமஹா பாபாஜி குந்தர காந்தா அப்பாதி (ஒளிரும் ஒளியைக் கொடுப்பவர்/கொடுப்பவர், பாபாஜிக்கு நான் தலைவணங்குகிறேன்)



- ‘பாபாஜியின் குரல்’ என்பதிலிருந்து ஒரு பகுதி