Monday, October 9, 2023

நாதம் உண்டான பிறகே மனிதப்பிறவியில் ஆண் பெண் என்ற வித்தியாசம்

 நாதம் உண்டான பிறகே மனிதப்பிறவியில் ஆண் பெண் என்ற வித்தியாசம் ஏற்படுகிறது. அது வரையில் ஒரே தன்மை தான். ஆண் பெண் என்ற வேற்றுமை இல்லாமல் ஒன்றாகவே விளையாடுவார்கள்.


பெண் பருவமடைந்ததும் அவளது தேகத்தில் பல மாற்றங்கள் காணப்படுகின்றன . குணத்திலும் அப்படியே.


ஆணுக்கு பதினாறு வயது எட்டினதும் அவனது தேகத்தில் சுக்கிலம் உற்பத்தியாகி, பாலனின் தொனி மாறி, கம்பீரமான ஆண்மைகுரல் எழும்புகிறது. ஆக நாதம் தான் ஆண். இந்த நாதமில்லையேல் ஞானமில்லை. னாதமே ஞானத்துக்கு மூலம்.


நாதன் உன்னை தொட வேண்டுமென்றால் உன்னிடத்தில் நாதம் இருக்கவேண்டும். அப்போது தான் உனது நாதத்தை எழுப்பமுடியும். ஆதலால் தான் இளமை ததும்பும் போதே ஞானத்தை அடைய வேண்டுமென்கிறோம்.


ஆதலால் தாம் *'இளமையில் கல்'* என்று எழுதி வைத்தார்கள். இளமையில் நாதம் னிரம்பி வழியும். ஞானத்தை எளிதாக பற்றும்.

நானே நானில்லையே

 💢💢 நானே நானில்லையே 💢💢


என்றோ அழிய போகும் உடலையே நான் நான் என சொல்லிட்டு இருக்கும் மனதிற்கு எப்போது தற்போதம் அற்று, மெய்யாக இருக்கும் ஜீவனை அறிய முடியும்? 


நான் இல்லை என்று சொல்லிக்கொண்டே நான் என்ற தன்முனைப்புடன், வீண் அகங்காரம் கொண்டு கர்மவினை செய்கிறது.


கடவுளுக்கு பூஜை நமஸ்காரம் செய்வதாலோ, வெள்ளை அல்லது காவி உடை அணிந்து, நெற்றியில் பெரிய பட்டையிட்டு, ருத்ராட்சம் அணிவதாலோ, தினமும் சாதனை செய்கிறேன் என்று மனதை அங்குமிங்கும் அலைபாய விட்டுட்டு இருந்தாலோ, குருவே சரணம் என காலடியில் விழுந்து கிடந்தாலோ, ஒன்றும் நடவாது. கர்மச்சக்கரத்தில் இருந்து தப்பிக்கவே முடியாது. 


விண்ணில் இருந்து வந்த மெய்பொருள் அறியாத வரை, திரும்ப திரும்ப தாயின் வழியாக மண்ணில் பிறந்துக் கொண்டே தான் இருக்க போறோம்.


இயற்கை உண்மையாக, ஆதி அனாதியாக இருக்கும் மெய்யை உணர, மனம் எனும் ஆற்றை அறிவு எனும் தோணி கொண்டு கடப்பது சிறந்தது. அதாவது, மனதை அடக்கவோ, கட்டுப்படுத்தவோ முற்படாமல், மனதிற்கு அறிவு ஊட்ட ஊட்ட, மனமே மனதை செம்மை படுத்திக்கொள்ளும். அறிவு வர, நான் நான் என சொல்லும் மனம் அதிலிருந்து விடுபட்டு, ஜீவனை நோக்கி பிரயாணம் செய்யும்.


மனிதனுக்கு மட்டுமே தன்னை அறிந்துக்கொள்ளும் சிறப்பு உண்டு. ஆகையால் இந்த மனித பிறப்பை சரியாக உபயோகப் படுத்தி, தன்னை அறிந்து, நான் என்ற அகங்காரத்தினால் அழிந்து போகாமல், விண்ணிலிருந்து வந்தவனை பற்றிக் கொண்டால், மண்ணில் மறுபிறவியில் இருந்து விடுபடலாம்.


💥💥 மெய்ஞானம் ஓங்கி வாழ்க வளமுடன் 💥💥

அகாரம் எனும் அட்சரம் இருப்பு

 அகாரம் எனும் அட்சரம் இருப்பு சுவாதிஷ்ட்டானம்.. அகாரமாய் மலர்வதற்க்கு முந்திய இருப்பு மூலாதாரம்... அதையே உணரா நிலை என்பார்கள்.. அதாவது அகார சக்தி தூங்கும் நிலை... அகாரத்தில் இருந்து உகாரம் பிறக்கிறது... இது இரண்டின் மத்தியே ரீங்காரமான குண்டலினி... ரகாரம் என்பது சுழிமுனை... இகாரம் தான் மேலேறும் குண்டலினி.

ஏழாம் வாசலின்

 ”ஏழாம் வாசலின் கீழாய்ந்து வந்தெதிர்த்த தலத்திற்க்கு மேலே தசை மூளை எலும்பிற்க்கு நடுவே நெற்றி முகமூக்கிடையில் முண்டகபார்வையில் நாளாம் பதினாலில் உலாவி நின்ற நாயகனே நானுன்னோடிரந்து கேட்ப்பேன் கேளா செவிக்கு மீளாநெருப்பாய் கிருபை விளைத்தெனக்கு உதவி செய்வாய் பாழாம் குபிரென்னை அணுகாமலே படைத்தோனே உன்றன் அடைக்கலமே


 == பீருமுஹம்மது ஒலியுல்லாஹ்

இறைவனுக்கு பிறந்தநாள். ===

 === இறைவனுக்கு பிறந்தநாள். ===


மக்கள் எல்லோரும் அந்த ஊரில் மகிழ்ச்சியாக இருந்தார்கள் . 


அவருக்கு பிறந்தநாள் விழா கொண்டாட வேண்டும் என்று முடிவு செய்தார்கள் . அதற்காக ஒரு பெரிய ஆன்மிக ஊர்வலம் ஒன்றை ஏற்பாடு செய்தார்கள் . 

அதில் கலந்து கொள்ள  மதத்தலைவர்கள், ஆன்மிகவாதிகள், மடத்தலைவர்கள்  சொற்பொழிவாளர்களை கலந்து கொள்ள ஏற்பாடு செய்தார்கள் . 


விழா நாள் அன்று பெரிய ஊர்வலம் நடந்தது அதில் மக்கள் கூட்டம் கூட்டமாக அவரவர் மதத்தலைவர்கள் ஆன்மிகவாதிகளின் மடாதிபதிகள் பின்னே பாடிக் கொண்டும் ஆடிக் கொண்டும் சென்றார்கள் .


ஒரு துறவி அந்த ஊரின் வழியாக செல்லும்போது அந்த ஊர்வலத்தைக் கண்டார் . அவருக்கு இதைப்பற்றி ஒன்றும் தெரியவில்லை ..


ஊர்வலத்தின் ஓரமாக நின்று அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். பக்கத்தில் நின்ற ஒருவரிடம் இது என்ன ஊர்வலம் எதற்காக என்று கேட்டார்.


உங்களுக்கு தெரியாதா இன்று இறைவனுக்கு பிறந்த நாள் . அதற்காகத்தான் இந்த ஊர்வலத்தை மக்கள் நடத்திக் கொண்டிருக்கின்றார்கள் என்றார் .


அப்போது ஊர்வலத்தில் ஒரு யானையில் ஒருவர் அமர்ந்து இருந்தார். அவரை பின்பற்றி மக்கள் கூட்டமாக சென்றனர் .


அந்த துறவி பக்கத்தில் நின்றவரிடம் யார் இவர் என்றார் . அதற்கு அவர் இவரைத் தெரியாதா. இவர் ஒரு பெரிய மதத்தின் தலைவர். அவருக்கு பின்னே செல்லும் மக்கள் அவரை பின்பற்றி நடப்பவர்கள் என்றார்.


அடுத்து ஒரு குதிரையில் ஒருவர் அமர்ந்திருக்க அவரைப்பின்பற்றி மக்கள் கூட்டமாக ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் சென்றார்கள் .


துறவி இவரைப்பற்றிக் கேட்க இவர்தான் ஒரு மடத்தின் மடாதிபதி . அவரை பின்பற்றி செல்பவர்கள் எல்லாம் அவருடைய சீடர்கள் என்றார் .


அடுத்து ஒரு பெரிய தேர் போன்ற வாகனத்தில் ஒருவர் அமர்ந்திருக்க அவரைத்தொடர்ந்து மக்கள் பாடல்களை பாடிய வண்ணம் சென்று கொண்டிருந்தனர் ..

இவர் ஒரு பெரிய ஆன்மிகவாதி பேச்சாளர். அவரின் பேச்சில் மயங்கி அவரை பின் தொடர்பவர்கள்தான் இந்த மக்கள் என்று துறவியிடம் கூறினார் .


இப்படி கூட்டமாக குழுவாக மதத்தலைவர்கள் ஆன்மிகவாதிகள் மடத்தலைவர்கள் அவர்களது சீடர்கள் அவரை பின்பற்றுபவர்கள் என்று ஊர்வலம் போய்க்கொண்டிருந்தது .


ஊர்வலத்தின் இறுதியில் ஒருவர் மட்டும் தனியாக நடந்து சென்றார் .


அவர் பின்னால் யாரும் செல்லவில்லை ..

அவரைப்பார்த்து துறவி இதோ தனியாக ஒருவர் நடந்து செல்கின்றாரே யார் இவர் என்று கேட்டார் .


அவரைத் தெரியாதா?!  அவர்தான் இறைவன். இவருக்குத்தான் இன்று பிறந்தநாள் விழா. அதைக் கொண்டாடுவதற்குத்தான் மக்கள் அவரவர் மதத்தலைவர்கள் கூட முன்னே சென்று கொண்டிருக்கின்றனர் என்றார் பக்கத்தில் நின்றவர் ..

ஒக்கச் சொன்ன அலிபு நடு

 ”ஒக்கச் சொன்ன அலிபு நடு முச்சுடரெண்டெழுத்தும் ஒன்றுபட்டு வரும் விதத்தை உவந்து இங்ஙனம் சொல்வேன்”...   இது தான் மறையான மறையான அறுநான்கில் ஓரெழுத்து.


பழுதனுகாதுய்ய பொருள் பரமனைத்தும் பாய்ந்து பாங்குபெறும் ஹூவுடைய பேருமது தானே இந்த இறை நாமம் இரண்டு லாம் ஒரு அலிபு இருலாமும் நடுமூலத்திரு புறமும் நிற்க்கும்


                              ~ (#பீருமுஹ்ம்மது #ஒலியுல்லாஹ்)


இரண்டு லாம் ஒரு அலிபு சேர்ந்து வரும் முறை அது.


ஒரு அலிபு, அதன் இரு புறமும் இரு லாம் சேர்ந்து வரும் அமைப்பு...


 சதா நம்மோடு இயங்கி நிற்க்கும் உயிர்நிலை, ஆனால் நம் அறிவுக்கு வராமல் இருக்கின்றது. ரொம்ப பக்கத்துல தான் இருக்கு ஆனால் கோடி சென்மம் பிறந்தாலும் ஒருவர் காட்டிகொடுக்காமல் அறிவுக்கு வராது என்பது தான் உண்மை


"மூச்சினோடியங்கி நிற்கும் முடிவிலா பொருளை நோக்கி....” என்ற நான்கு வரிகள். இது தெளிவான விஷயம். மூச்சுக்கும் பேச்சுக்கும் ஆதாரமாக நிற்க்கும் உயிர்நிலை தான் அது.

மண்ணும் நீரும்

 இந்த உலகத்தின் மண்ணும் நீரும் மனதை நிர்ணயிக்கின்றது, மண்ணின் வளம் மனதின் குணம், அரிசி சாப்பிடுகின்றவன் மனம் ஒண்ணு, கோதுமை சாப்ப்டிடுகின்றவன் குணம் ஒன்று, கஞ்சா சாப்பிடுகிறவன் மனம் ஒண்ணு, கரும்பு சாப்பிடுகிறவன் மனம் ஒண்ணு, எது ரத்தத்தில் கலந்திருக்கின்றதோ அந்த குணம் மனதுக்கு பலமாக அமையும். விஷமான பொருட்களை சாப்பிட்டால் ரத்தம் விஷமாகும், மனமும் அதை பிரதிபலிக்கும். ஒரு நாள் இரவோடு இந்த மண்ணின் தனிமங்கள் மாறிவிட்டால் அனைவரின் ரத்தமும் மாறிவிடும், மனமும் மற்றொரு கோணத்தில் பிரதிபலிக்கும். அல்லது நீ மற்றொரு உலகத்து தனிமங்களினூடு தாவர மாமிச உனவுகளை உண்ண ஆரம்பித்துவிட்டால் உன் மனமும் அவ்வண்ணமாக மலரும், தோற்றமும் அவ்வண்னமாக தோற்றமாகும், பரினமிக்கும்.


மனம் உணவினாலும் நீரினாலும் நிலை கொள்கின்றது, உணவும் நீரும் அற்றால் மனம் அற்றுவிடும், கண் காணாது பஞ்சடையும், காது கேட்க்காமல் அடைந்துவிடும், மண்ணின் மணமானது இல்லையெனில் நீ சுவாசிக்கும் காற்று கூட உன்னால் சுவாசிக்கமுடியாது, காற்றினில் கலந்திருக்கும் மூலக்கூறுகள் எல்லாம் மண்ணின் தன்மை ஒத்ததே, ஆகாயத்தில் மண்ணின் காந்தசக்தி வியாபித்திருக்கும் அளவுக்குள் இந்த மண்ணின் மூலக்கூறுகள் நிறைந்திருக்கும். இந்த மண்ணே உன் மனம்.


 மண்ணிலிருந்து பிறந்த நீ மண்ணுக்கே மண்ணாக போவாய்.. மனம் மண்ணின் மணம் அல்லாது வேறல்ல, தாவரங்கள் மண்ணின் தன்மையை உறிஞ்சி பூத்து குலுங்குவதை போன்றே மனமும் பூத்து குலுங்கினிற்கின்றது. மனிதனும் ஒரு கொடிவகையே தான்.

முப்பொருள் விளக்கம் எனும் சாகாகல்வி ====

 ==== முப்பொருள் விளக்கம் எனும் சாகாகல்வி  ====


1) "சாகாத்தலை": யென்பது ருத்திரபாகம், ருத்திரதத்துவம், வித்யாகலை, வஸ்து, அருளானந்தம், காரணாக்கினி, சிவாக்கினி.


2) "வேகாக்கால்": வேகாக்காலென்பது மகேசுவரபாகம், மகேசுவரதத்துவம், சாந்திகலை. ஆன்மா, அன்பு, காரணவாயு. 


3)"போகாப்புனல்": போகாப்புனலென்பது சதாசிவபாகம், சதாசிவதத்துவம், பிரதிஷ்டாகலை, ஜீவன், இரக்கம், காரணோதகம். 


இதன் பொருள் விளக்கம் வருமாறு:


  ===== அடி, நடு, முடியென மூன்றுபாகம்... அதில் முதல் பாகம் ருத்திர பாகம், அடுத்து மகேசுவர பாகம், அதையடுத்து சதாசிவ பாகம்


 ===== ருத்திர தத்துவம் அதன் மேல் மகேசுவர தத்துவம் அதன் மேல் சதாசிவ தத்துவம் என மூன்று தத்துவம்


 ===== ருத்திர தத்துவம் என்பது வித்தியா கலை, மகேசுவர தத்துவம் என்பது சாந்திகலை, சதாசிவ தத்துவம் என்பது பிரதிஷ்ட்டா கலை எனப்படும்.


 ====== வித்தியா கலை என்பதுவே வஸ்து (பொருள்-மெய்பொருள்) எனப்படும்...சாந்திகலை என்பதுவே ஆன்மா எனப்படும், பிரதிஷ்ட்டா கலை என்பதுவே ஜீவன் எனப்படும்


===== மெய்பொருளினால் வெளிப்படுவது அருளானந்தம், அதுபோல ஆன்மாவினால் வெளிப்படுவது அன்பு, மற்றும் ஜீவனால் வெளிப்படுவது இரக்கம் 


===== சாகத்தலை என்பது காரண அக்கினியில் அடங்கியுள்ளது... அதுபோல வேகாக்கால் என்பது காரணவாயுவில் அடங்கியுள்ளது... மற்றும் போகாபுனல் என்பது காரணதேகத்தில் அடங்கியுள்ளது. 


====== ஆகையினால் காரண அக்கினி, காரணவாயு, காரன தேகம் இவை மூன்றையும் தக்க குருவின் கிருபையால் அறிந்து அடைந்து கொள்ளுதலே சன்மார்க்கத்தின் முதல் படியாகிய சகா கலை எனப்படும் சாகா கல்வி.

எழுநிலை சூட்சுமம்

 ==== எழுநிலை சூட்சுமம்  =====


"பிராணாயாமம்" முதலான சம்பிரதாயங்களினூடே எவ்வண்ணம் குண்டலினீ சக்தியை உணர்வு நிலைக்கு கொண்டு வருகிறோமோ அவ்வண்ணம் மற்றொரு முறை தான் "பேச்சு சக்தியை" கொண்டு உணர்வு நிலைக்கு மேலேறும் முறையும். இதை ஓதி ஓதி உணர்தல், ஓதாதுணர்தல் என வகைபடுத்துவர் ஞானியர்கள். 


பேச்சின் சூட்சும அறிவு நிலைக்கு பரையறிவு அல்லது வாலறிவு என்பர். 


பர வித்தை என்பதும் இதை கொண்டு இயற்றப்படும் சம்பிரதாயம்தான். இவ்வண்ணம் பிராணனுக்கும் பேச்சுக்க்கும் மையமாக திகழ்வது ஒரு அமானித விந்துநிலை.  அதற்க்கு தான் வித்யா தத்துவம் என பெயர் வைக்கபட்டிருக்கின்றது. எழுநிலை சூட்சுமம் அது, அதில் இருந்து கிளம்புவதால், அமிர்த விந்துவுக்கு எழுத்து என பெயர் வைக்கபட்டிருக்கின்றது. 


அட்சர சொரூபமாக வாலறிவாக விளங்குவதால் சித்சொரூப சக்திக்கு வாலை என பெயர்.  அதாவது அமிர்த சொரூபமாக சதா வடிந்து கொண்டிருப்பவள், அமிர்த பாஷிணி. 


அதி சூட்சுமத்துக்கு செல்லாமல் சற்று குறுக்கி கொண்டமைக்கு மன்னிக்கவும்.

சிவோஹம்

 === சிவோஹம் =====


சிவவும் அஹவும் இருக்கிறது என பொருள்.


சிவத்துக்கு அகம் பின்னாடி சேர்ந்து இருக்கிறது தெரியலே...


அகத்துக்கு சிவம் முன்னாடி சேர்ந்திருக்கிறது தெரியலே


வாசி யோகத்தின் ஆசிரியர்களில் முதன்மையானவர் கோரக்கநாதர், இவர் மீன நாதரின் சீடர் என்போரும் உளர். அவரின் போதனையானது ஹம்ச யோஹம் பற்றியதாகும்.


ஒவ்வொரு முறையும் இப்பிரபஞ்சத்தின் ஜீவர்கள் உள் சுவாசிக்கும் போது “ஸ:” எனும் சத்த நலத்துடனும், சுவாசம் வெளிவிடும் போது “ஹ:” எனும் சத்த நலத்துடனும் சுவாசிக்க காண்கிறோம். இந்த சத்தமானது அனைத்து ஜீவர்களுக்கும் பொதுவானதுவாய் அமைந்திருக்கிறது. எந்த மதத்தை பின்பற்றுபவர்களுக்கும் பொதுவாகவும், எந்த நாட்டில் பிறந்தவர்களுக்கும் இயற்கையாகவும் அமைந்திருக்கும் சுவாச சத்தம் தான் இந்த “ஹ;-ஸ:”.


இந்த சத்தத்தை ஒழுங்கு பட அமைக்கபட்ட சாதனை முறை தான் “ஹம்ஸ:” வித்தை. ’ஹம்’ என சொல்ல பொருளாவது “அஹம்” எனவும் “ஸ:” என சொல்ல “ப்ரம்மம்” எனவும் பொருள் கொள்ளபடுகின்றது.வெளிவிடபடும் சுவாசமான ’அஹம் ஜீவன் ’ இயற்கை உண்மை சிவத்துடன் கலந்து சுழன்று மீண்டும் ’பர பிரம்ம சிவம்’ ஆக உள் நுழைகின்றது. இதை கருத்தில் கொண்டு சதா காலம் சுவாசத்தை பற்றியே சித்தம் நிலை கொள்ள “ஸோஹம்” எனும் நிலையான “பரபிரம்மம் சிவம் அஹம் ஜீவன்” என சித்தம் நிலை ஆகிறது.இது அஜபா காயத்திரி என போற்றபடுகிறது. அங்கனம் 21600 முறை தினம் ஜெபிக்கபடுகின்றது .


“தெள்ளதெளிந்தோர்க்கு ஜீவன் சிவலிங்கம்-திருமூலர்”


‘திரமென்ன ஹம்சோகம் மந்த்ரா தீதம்

திருசியசூன் யாதிகளே தியான மாகும்;

சரமென்ன சாக்ரசத்தாம் வித்தை சூன்யம்

சாதனையே சமாதியெனத் தானே போகும்;

வரமென்ன விபரீத விர்த்தி மார்க்கம்

வாசனையே சாதனமாய் வகுத்துக் காட்டும்;

அரமென்ன இதையறிந்தால் யோகி யாவான்

அஞ்ஞான மவனிடத்தி லணுகா தென்னே.’==


(காகபுசுண்டர் உபநிடதம்)