=== இறைவனுக்கு பிறந்தநாள். ===
மக்கள் எல்லோரும் அந்த ஊரில் மகிழ்ச்சியாக இருந்தார்கள் .
அவருக்கு பிறந்தநாள் விழா கொண்டாட வேண்டும் என்று முடிவு செய்தார்கள் . அதற்காக ஒரு பெரிய ஆன்மிக ஊர்வலம் ஒன்றை ஏற்பாடு செய்தார்கள் .
அதில் கலந்து கொள்ள மதத்தலைவர்கள், ஆன்மிகவாதிகள், மடத்தலைவர்கள் சொற்பொழிவாளர்களை கலந்து கொள்ள ஏற்பாடு செய்தார்கள் .
விழா நாள் அன்று பெரிய ஊர்வலம் நடந்தது அதில் மக்கள் கூட்டம் கூட்டமாக அவரவர் மதத்தலைவர்கள் ஆன்மிகவாதிகளின் மடாதிபதிகள் பின்னே பாடிக் கொண்டும் ஆடிக் கொண்டும் சென்றார்கள் .
ஒரு துறவி அந்த ஊரின் வழியாக செல்லும்போது அந்த ஊர்வலத்தைக் கண்டார் . அவருக்கு இதைப்பற்றி ஒன்றும் தெரியவில்லை ..
ஊர்வலத்தின் ஓரமாக நின்று அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். பக்கத்தில் நின்ற ஒருவரிடம் இது என்ன ஊர்வலம் எதற்காக என்று கேட்டார்.
உங்களுக்கு தெரியாதா இன்று இறைவனுக்கு பிறந்த நாள் . அதற்காகத்தான் இந்த ஊர்வலத்தை மக்கள் நடத்திக் கொண்டிருக்கின்றார்கள் என்றார் .
அப்போது ஊர்வலத்தில் ஒரு யானையில் ஒருவர் அமர்ந்து இருந்தார். அவரை பின்பற்றி மக்கள் கூட்டமாக சென்றனர் .
அந்த துறவி பக்கத்தில் நின்றவரிடம் யார் இவர் என்றார் . அதற்கு அவர் இவரைத் தெரியாதா. இவர் ஒரு பெரிய மதத்தின் தலைவர். அவருக்கு பின்னே செல்லும் மக்கள் அவரை பின்பற்றி நடப்பவர்கள் என்றார்.
அடுத்து ஒரு குதிரையில் ஒருவர் அமர்ந்திருக்க அவரைப்பின்பற்றி மக்கள் கூட்டமாக ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் சென்றார்கள் .
துறவி இவரைப்பற்றிக் கேட்க இவர்தான் ஒரு மடத்தின் மடாதிபதி . அவரை பின்பற்றி செல்பவர்கள் எல்லாம் அவருடைய சீடர்கள் என்றார் .
அடுத்து ஒரு பெரிய தேர் போன்ற வாகனத்தில் ஒருவர் அமர்ந்திருக்க அவரைத்தொடர்ந்து மக்கள் பாடல்களை பாடிய வண்ணம் சென்று கொண்டிருந்தனர் ..
இவர் ஒரு பெரிய ஆன்மிகவாதி பேச்சாளர். அவரின் பேச்சில் மயங்கி அவரை பின் தொடர்பவர்கள்தான் இந்த மக்கள் என்று துறவியிடம் கூறினார் .
இப்படி கூட்டமாக குழுவாக மதத்தலைவர்கள் ஆன்மிகவாதிகள் மடத்தலைவர்கள் அவர்களது சீடர்கள் அவரை பின்பற்றுபவர்கள் என்று ஊர்வலம் போய்க்கொண்டிருந்தது .
ஊர்வலத்தின் இறுதியில் ஒருவர் மட்டும் தனியாக நடந்து சென்றார் .
அவர் பின்னால் யாரும் செல்லவில்லை ..
அவரைப்பார்த்து துறவி இதோ தனியாக ஒருவர் நடந்து செல்கின்றாரே யார் இவர் என்று கேட்டார் .
அவரைத் தெரியாதா?! அவர்தான் இறைவன். இவருக்குத்தான் இன்று பிறந்தநாள் விழா. அதைக் கொண்டாடுவதற்குத்தான் மக்கள் அவரவர் மதத்தலைவர்கள் கூட முன்னே சென்று கொண்டிருக்கின்றனர் என்றார் பக்கத்தில் நின்றவர் ..