ஞானியர்கள் எப்போதும் தங்களின் ஞானத்தை ஒளிவாகவே வைத்திருப்பர்.இதில் சூஃபிகள் கில்லாடியர்கள்.முழு பைத்தியமாகவே திரிவார்கள்.பைத்தியக்காரனிடம் யாராவது ஞானம் கத்துக்க போவாங்களா..பதினாறடி விலகியே சாதாரணமானவர்கள் செல்வார்கள்.சூஃபிகளை சுற்றி ஒரு போதும் கூட்டம் இருக்காது.ஏதாவது சாக்கடையிலோ அசிங்கமான இடங்களிலோ இருப்பார்கள்.கிறிஸ்து கூட ஒரு விபசாரியின் இல்லத்தில் தங்குவதை வழக்கமாக கொண்டிருந்தார்.அவர்கள் விருப்பப்பட்டால் ஒழிய அவர்களை அடையாளம் கண்டு கொள்ளவது இயலாத காரியம்.குமரி மாவட்டத்தில் ஏராளம் இப்படியான பைத்தியங்களை சகஜமாக காணலாம்.அப்படி ஒருவர் தான் மக்கிடி லெப்பை.
மக்கிடி லெல்பை ஒரே காலத்தில் குமரி மாவட்டத்திலும் திருவனந்தபுரத்திலும் தோன்றுவார்.என்னோட வீட்டுக்கு எதிர்தாற் போல ஒரு கல்மண்டபம் இருந்தது.அதில் தான் தங்குவார்.என்னோட தாத்தா இவரை பின்தொடர்ந்தே சுற்றிக்கொண்டிருப்பார்.பெரிய ஆன்மீகவாதியாக இருந்தாலும் சொத்து சுகங்களை பற்றிக் கொண்டிருப்பவர்.லெப்பையோ குளத்துக்கு போய் மீன் பிடித்து கொண்டு வந்து அதை ஒரு புறம் மட்டும் சுட்டு சாப்பிடுபவர்.ஒரு புறம் சாப்பிட்ட பின்னரே மறு புறத்தை சுட ஆரம்பிப்பார்.ஏனெனில் அதற்கு முன்னால் இஸ்ராயீல் வந்து விட்டால் சுட்டது மீந்து போகுமே..அதனால் தான் அந்த ஏற்பாடு.மக்கிடி லெப்பையின் பிரதான விளையாட்டு என்பது தூக்கிட்டு தொங்குவது தானாம்.ஆங்காங்கு இருக்கும் பெரிய மரங்களில் கழுத்தில் தூக்கு போட்டு தொங்கி கிடப்பாராம்.திருவனந்தபுரத்திலும் பல கடைகளுக்குள்ளும் தூக்குப் போட்டு கிடப்பாராம்.கடை திறக்க வருகிறவர் திறந்து பார்க்க உள்ளே லெப்பை தூக்கில் தொங்குவாராம்.பகல் முழுதும் வருகிறவன் போகிறவன் என எல்லோரையும் கண்டமேனிக்கு திட்டி வசை பாடுவாராம்..இரவில் தூக்கு போடும் விளையாட்டு.அசிங்கமாக திட்டுவதனால் யாரும் நெருங்க மாட்டார்கள்.நடு சாமத்தில் எவனாவது அவரை நம்பி காத்திருந்தால் அவனுக்கு மெய் உபதேசம் பண்ணுவாராம்.யாரும் இறக்கி விடவில்லையெனில் ஏழு நாட்கள் வரை தூக்கில் தொங்குவாராம்.இறக்கி விட்டால் ..நிம்மதியாக தூங்கவும் விட மாட்டார்களே..என புலம்பிக் கொண்டே செல்வாராம்.
ஒருமுறை கடுமையான மழை..வாரக்கணக்கில் மழை நீடித்துக் கொண்டிருந்தது.வள்ளியாற்றில் இருகரையும் புரண்டு தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது.லெப்பையை பின் தொடர்ந்து சென்று கொண்டிருந்த என் தாத்தா அப்படியே நின்று விட்டார்.ஏனெனில் அவ்வளவு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது.பிரம்மாண்டமான மரங்கள் கூட துரும்புகளைப் போல ஆற்றில் அடித்து செல்லப் பட்டு கொண்டிருக்கின்றன.இன்று காணும் பாலம் அன்று கிடையாது.ஆற்றைக் கடக்க சப்பாத்து தான் இருத்தது.இன்றும் இந்த சப்பாத்தின் எச்சங்களை காணலாம்.மழை காலங்களில் சப்பாத்து மூழ்கி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும்.இக்கரை உள்ளவர்கள் அக்கரை செல்ல முடியாது.இப்படியான அவத்தையில் தான் லெப்பையும் தாத்தாவும் வந்து மாட்டிக் கொண்டனர்.
லெப்பை சுற்று முற்றும் பார்த்தவர் ஓர் காட்டு சேம்பின் இலையை பறித்து தண்ணீரில் போட்டார்.சேம்பிலை தண்ணீரில் அடித்துச் செல்லாமல் மரக்கட்டை போன்று மிதந்து நின்றது.லெப்பை அந்த இலை மீது ஏறினார்.திரும்பிப் பார்த்து அனத்தம் பிள்ளையே வாரும் என்று கூறி கையை நீட்டினார்.அனத்தம் பிள்ளை பயத்தினால் பின் வாங்கினார்.லைப்பை அந்த இலையையே தோணியாக்கி அக்கரைக்கு பிரயாணமானார்..அனத்தம் பிள்ளையர் கண் எதிரிலேயே அக்கரையில் மஸ்துஜில் ஹறாம் தென்பட்டது..லெப்பை மஸ்துஜில் ஹராமுக்குள் கயறி சென்று விட்டார்.இக்கரை நின்றவர் கதை இக்கரையிலேயே முடிந்தது.ஒரு கண நேரம் குருவின் மேல் இருந்த நம்பிக்கையினை இழந்தவர் வாழ்வின் பொன்னான வாய்ப்பினை இழந்து போனார்.